'பங்கர் எங்கட கதைகள்' நூல்

By Nanthini

05 Aug, 2022 | 01:26 PM
image

"வீட்டின் அதிமுக்கிய பகுதியாக மாறப்போகும் பங்கரின் தேவையானது, சாத்திர சம்பிரதாயம், மரபு என்பவற்றின் மீதான நம்பிக்கைகளை எல்லாம் தாண்டி சூழலின் யதார்த்தத்திலும், உயிர் வாழ்தலின் ஆசையிலும் கட்டப்பட வேண்டியதாயிற்று. குடிபுகுதல் செய்வதற்கு கூட ஐயரும் இல்லை, சுவாமிமாரும் இல்லை. இரைந்துகொண்டு வந்த ஒரு செல்லோ பொம்மரோ நாங்கள் குடிபுகுவதற்கு போதுமானதாக இருந்தது..."

எங்கட புத்தகங்களின் முதலாவது வெளியீடாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த நூலே 'பங்கர் எங்கட கதைகள்'. 193 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் உள்ள கதைகளை எழுத்தாளர் வெற்றிச்செல்வி தொகுத்துள்ளார். இந்நூலிலே 26 எழுத்தாளர்களுடைய 30 கதைகள் வெளிவந்துள்ளதுடன், வெற்றிச்செல்வி இரண்டு கதைகளையும், பதிப்பாளர் குலசிங்கம் வசீகரன் இரண்டு கதைகளையும் எழுதியுள்ளனர். அத்தோடு திரு. துரைரத்தினம் ஜெயதீபன், திரு. து. துஷ்யந்தன், தமிழ்நாட்டு ஓவியர் புகழேந்தி என இன்னும் சிலரால் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பங்கர் கதைகளை மேலும் மெருகூட்டுகின்றன. முன் பக்கத்திலே பங்கர் வகைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ள விதம் பங்கர் பற்றிய தெளிவினை வாசகர்களிடையே ஏற்படுத்துகின்றது.

உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள இப்புத்தகத்திலுள்ள அத்தனை கதைகளையும் வாசிக்கும்போது நான் படித்த கலிங்கத்துப் போர் தான் ஞாபகம் வருகிறது. 

கை, கால்களை இழந்துவிட்ட மனிதர்களையும், உடல் கருகி இறந்த மனிதர்களையும் பற்றி படிக்கும்போது ஒருவகை சோகம் என்னை வந்து ஒட்டிக்கொண்டது. இந்த சோகத்துக்கு மத்தியிலும் நம்மவர்களின் வலிகளை படிக்க வேண்டும் என்ற அவாவில் ஐந்து மணித்தியாலங்கள் ஒதுக்கி கதை முழுவதையும் படித்து முடித்துவிட்டேன். படித்து முடித்ததும் 'இதையெல்லாம் நான் நேரில் பார்த்திருந்தால் எனக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும்?' என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

இப்புத்தகத்திலுள்ள கதைகள் யாவும் பங்கர் என்ற பதுங்குகுழியை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ளன. ஓடி ஒளிந்துகொள்வதற்கு மாத்திரமின்றி, பிரசவம் நடைபெறுவதற்கும், சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும், கோவிலாகவும் இப்பதுங்கு குழிகள் அமைந்திருக்கின்றன. 

ஒரு பங்கரை அமைத்துக்கொள்வதற்கு எத்தனை கஷ்டப்பட வேண்டும் என்பதனை பல கதைகள் எடுத்துரைக்கின்றன. குண்டு தாக்குதலுக்கு பயந்துபோய் பதுங்கு குழிக்குள் ஒளிந்தால் அங்கே பாம்பு, பூச்சிகளின் தொல்லை.

தங்களுடையதும் தங்களுக்கு தெரிந்தவர்களினதும் வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகளை மையமாகக் கொண்டு பல எழுத்தாளர்கள் கதை எழுதியிருக்கின்றார்கள். ஒருசில கதைகளில் போரினால் ஏற்பட்ட வலி ஆழப் பொதிந்திருந்தாலும், கதை கூறியுள்ள விதத்தில் குறைபாடு உள்ளது. 

ஒருசில கதைகள் கட்டுரை வடிவிலும், ஒருசில கதைகள் சொல்ல வந்த விடயத்தை தாண்டி வேறு திசையில் பயணிப்பது போன்றும் உள்ளது. ஆனாலும், புத்தகத்திலுள்ள ஏனைய கதைகளில் கதை சொல்லும் பாங்கு, எளிய நடை, சம்பவ விவரணம் போன்ற அம்சங்கள் பாராட்டத்தக்கதாக அமைகின்றன.

'சொல்லாத செய்தி', 'ஈரச்சாக்கும் சக்கரவானமும்' ஆகிய இரு கதைகள் வலிகளுக்குள்ளும் சிரிப்பினை உண்டாக்கும் வண்ணம் நகைச்சுவையாக படைக்கப்பட்டுள்ளமை வாசகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. போராளிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், உடைமைகள் அழிக்கப்பட்ட முறைகள், மிருகங்கள் பல எண்ணிக்கையில் கொல்லப்பட்ட சம்பவங்கள் என்பவற்றை பங்கருடன் தொடர்புபடுத்தி கூறியுள்ள விதம் சிறப்பாக உள்ளது.

புத்தகத்தில் உள்ள எழுத்துப் பிழைகள், அச்சுப் பிழைகளை அடுத்த பதிப்பில் திருத்த நூலாசிரியர் கவனமெடுக்க வேண்டும். 

பரீட்சை எழுத விடாமல், உண்ண விடாமல், உறங்க விடாமல், சிரிக்க விடாமல் எத்தனை காயங்களை கொடுத்துள்ளது, ஈழப்போர். கண்ணீர், அழுகை, சோகம் என பல்வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலித்துக் காட்டும் கதைகள் அடங்கிய 'பங்கர் எங்கட கதைகள்' என்ற இந்நூல் ஈழப்போர் பற்றி அறியாதவருக்கு அதை புரிய வைத்து, பல விடயங்களை கற்றுக்கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

வாங்குங்கள்... வாசியுங்கள்...!

விலை: 650 ரூபாய் 

- அஷ்வினி வையந்தி, 

கிழக்கு பல்கலைக்கழகம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05