இலங்கையின் பொருளாதார மீட்சி, ஸ்திரத்தன்மையை பேணுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமெரிக்கா , இந்தியா

By T. Saranya

05 Aug, 2022 | 12:08 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காகவும் , ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா மீண்டும் அவற்றின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளன. கம்போடியாவில் இடம்பெற்ற ஆசிய பிராந்திய பேரவையின் அமைச்சர்கள் மாநாட்டில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பின் போதே, இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் ஆகியோர் இவ்வாறு தமது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நல்வாழ்விற்காக நம்பகரமான நண்பனாகவும் , பங்காளியாகவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுகள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய் ஷங்கர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியிடம் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவில் 29 ஆவது ஆசிய பிராந்திய பேரவையின் அமைச்சர்கள் மாநாடு இன்றும் , நேற்று  வியாழக்கிழமையும் இடம்பெற்றது. அவுஸ்திரேலியா, கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியா, ரஷ்யா , அமெரிக்கா, பங்களாதேஷ், கொரியா , மங்கோலியா, பாகிஸ்தான், இலங்கை, பப்புவா நியூ கினி மற்றும் திமோர்-லெஸ்டே உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன.

இம்மாநாட்டின் பக்க அம்சமாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். அதற்கமைய இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பு தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கலாநிதி எஸ்.ஜெய் ஷங்கர், ' இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் முதலாவது சந்திப்பு இடம்பெற்றது. 

புதிய பொறுப்பை ஏற்ற அவருக்கு வாழ்த்துகள். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நல்வாழ்வுக்கான நம்பகமான நண்பராகவும் பங்காளியாகவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றோம். அயல் நாட்டுக்கு முதலிடம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் ஆகியோருக்கிடையிலும் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கனின் டுவிட்டர் பதிவில், 'கம்போடியா - ஆசியன் மாநாட்டில் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சருடனான சந்திப்பில், அவரது நியமனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். 

இலங்கையில் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினேன். மற்றும் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிக்க உதவுவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தோம்.' என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right