பொதுஜன பெரமுன அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் போராட்டம் மீண்டும் தீவிரமடையும் - திஸ்ஸ விதாரண

By Vishnu

05 Aug, 2022 | 02:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதிக்கம்கொள்ள கூடாது.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள்போராட்டம் மீண்டும் தீவிரமடையும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வக்கட்சி அரசாங்கத்தின் ஸ்தாபிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன்  விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்தால் அரசியல் நெருக்கடிக்குக்கு சற்று தீர்வு காண முடியும்.

ஸ்ரீ லங்கா பொதுpன பெரமுனவின் ஆதரவில்லாமல்,எந்த அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்,பேச்சுக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை குறுகிய காலத்திற்குள் பலவீனப்படுத்தியது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து ஸ்தாபிக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்தில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதிக்கம் கொள்ள கூடாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல நிலைப்பாடு கிடையாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுப்படுவார்கள்.

தேர்தல் ஒன்றை நடத்த முடியாத நிலையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் போது ஒரு அரசியல் கட்சி மாத்திரம் ஆதிக்கம் கொள்ளும் போது சர்வக்கட்சி அரசாங்கத்தின் நோக்கம் முரண்பட்டதாக அமையும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதியிடம் தீர்க்கமான பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவோம்.அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட வேண்டும்,அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right