பைஸ்

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வர அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­னதைத் தொடர்ந்து அது தொடர்­பான வாதப் பிர­தி­வா­தங்­களும் சந்­தே­கங்­களும் சர்ச்­சை­களும் தோற்றம் பெற்­றி­ருக்­கின்­றன. 

இதுவே இன்று முஸ்­லிம்கள் மத்­தியில் பிர­தான பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருப்­ப­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

இரு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே இச் சட்­டத்­தி­ருத்தம் தொடர்­பான தகவல் வெளி­யி­டப்­பட்­டது.  

''முஸ்லிம் சட்­டத்தின் கீழ் திரு­மணம் முடிப்­ப­தற்­கான குறைந்த வயது எல்லை மற்றும் அச்­சட்­டத்தின் கீழ் காணப்­படும் வேறு கார­ணங்கள் தொடர்பில் காணப்­படும் சட்ட விதப்­பு­ரைகள், இலங்கை அங்கம் வகிக்கும் சில சர்­வ­தேச சம­வா­யங்­களில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நியம ஒழுக்­கங்­க­ளுடன் ஒத்­தி­சை­யாத கார­ணத்­தினால், குறித்த சட்­டத்தில் திருத்தம் செய்­வ­தற்­கான தேவை ஏற்­பட்­டுள்­ளது என்­பது இனங்­கா­ணப்­பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் பரி­சீ­லனை மேற்­கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய முறை­யான திருத்­தங்கள் தொடர்பில் அமைச்­ச­ர­வைக்கு யோச­னை­களை முன்­வைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை உப குழு­வொன்றை நிய­மிக்க நீதி அமைச்சர் கலா­நிதி விஜ­ய­தாச ராஜ­பக்ஷ அவர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­க­ளுக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது'' என அமைச்­ச­ரவைத் தீர்­மானம் தொடர்­பான செய்திக் குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதற்­க­மைய குறித்த அமைச்­ச­ரவை உப குழுவில் சகல முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்­மையில் அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தாகும். 1951 ஆம் ஆண்டு இயற்­றப்­பட்ட 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என கடந்த பல தசாப்­தங்­க­ளாக முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. 

1990 ஆம் ஆண்டு கூட அப்­போ­தைய இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர், கலா­நிதி ஏ.எம்.எம் சஹாப்தீன் தலை­மையில் இதற்­காக குழு­வொன்றை நிய­மித்­தி­ருந்தார். எனினும் இக் குழுவின் சிபா­ரி­சுகள் ஆட்­சி­மாற்றம் கார­ண­மாக சட்­ட­மாக்­கப்­ப­ட­வில்லை. 

இவ்­வாறு சுமார் நான்கு குழுக்கள்  அவ்­வப்­போது நீதி அமைச்­சர்­களால் நிய­மிக்­கப்­பட்டும் இச் சட்டம் திருத்­தப்­ப­ட­வில்லை.

இறு­தி­யாக 2009 ஆம் ஆண்டு நீதி­ய­மைச்­ச­ராக இருந்த மிலிந்த மொர­கொட, ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளும் பொருட்டு குழு­வொன்றை நிய­மித்தார். 

இக் குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைவர், செய­லாளர், முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் என சுமார் 19 முஸ்லிம் பிர­மு­கர்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.  இக் குழு கடந்த 7 வருட காலங்­களில் பல தட­வைகள் கூடி மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் ஆராய்ந்து சிபா­ரி­சு­களை இற்றைப் படுத்­தி­யுள்­ள­தாக அதன் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்­தி­ருக்­கிறார். 

மிலிந்த மொர­கொ­ட­வுக்குப் பின்னர் நான்கு வரு­டங்கள் நீதி­ய­மைச்­ச­ராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பதவி வகித்தார்.  இக் காலப்­ப­கு­தியில் திருத்­தங்­களை மேற்­கொள்ள அவர் விரும்­பி­யி­ருந்த போதிலும் குறித்த குழு தனது சிபா­ரி­சு­களை பூர­ணப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வில்லை.

 இது தொடர்பில் 2013 ஆம் ஆண்டு புத்­த­ளத்தில் இடம்­பெற்ற காதி நீதி­மன்ற புதிய கட்­டிட திறப்பு விழாவில் உரை நிகழ்த்­திய அமைச்சர் ஹக்கீம் '' தேவை­யான சட்­டத் ­தி­ருத்­தங்­களை செய்­வ­தற்­கான இந்த குழு அதன் அறிக்­கையை சென்ற வருடம் டிசம்பர் மாதத்­தி­லா­வது என்­னி­டத்தில் கைய­ளிப்­பார்கள் என்று எதிர்­பார்த்தேன். இரண்டு தட­வைகள் நான் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் மர்­சூ­புடன் தொடர்பு கொண்டு அதனை விரைவில் நிறைவு செய்து தரு­மாறு வேண்­டுகோள் விடுத்தேன். ஏனென்றால் அமைச்சர் ஒரு­வரின் பதவி எவ்­வ­ளவு காலம் நீடிக்கும் என்று எதிர்வு கூற முடி­யாது. ஆகையால், நான் நீதித்­து­றைக்குப் பொறுப்­பான அமைச்­ச­ராக இருக்கும் காலத்தில் இந்த சட்­டத்­தி­ருத்­தத்தை கொண்டு வந்­து­விட வேண்டும் என்ற அங்­க­லாய்ப்பில் நான் இருக்­கிறேன்'' எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். 

அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாலும் அவர் நீதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் இனவாத சக்திகள் தலைதூக்கியிருந்ததால் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் வேறு விதமான அர்த்தப்படுத்தப்பட்டு தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற அச்சமும் அமைச்சர் ஹக்கீமினால் வெ ளிப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

அவ­ருக்குப் பிற்­பாடு நீதி­ய­மைச்­ச­ராகப் பத­வி­யேற்ற விஜே­தாச ராஜ­பக்­சவும் தான் பத­வி­யேற்ற பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில் விரைவில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்த நட­வ­டிக்கை எடுப்பேன் என வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தார். 

எனினும் கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் மேலாக எந்­த­வித நகர்­வு­களும் இது­வி­ட­யத்தில் இடம்­பெ­றாத நிலை­யில்தான் தற்­போது நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ச முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான யோச­னைக்கு அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியைப் பெற்­றி­ருப்பதாக அறிவித்திருக்கிறார்.

ஏன் இந்த திடீர் நகர்வு?

முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் எனும் அழுத்­தங்கள் அண்­மைக்­கா­ல­மாக பிர­த­ம­ருக்கு உள்­நாட்­டி­லி­ருந்தும் வெளி­நா­டு­க­ளி­ருந்தும் முன்­வைக்­கப்­பட்­ட­தா­கவும் குறிப்­பாக ஜி.எஸ்.பி. வரிச் சலு­கையைப் பெற வேண்­டு­மானால் இலங்­கையின் சட்­டங்கள் சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்கு அமை­வா­ன­மாக மாற்­றப்­பட வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒக்­டோபர் 11 ஆம் திகதி திகதி சர்­வ­தேச பெண் பிள்­ளைகள் தினம் கொண்­டா­டப்­பட்­டது. அதன் பிறகு முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு பிர­த­ம­ருக்கு இரண்டு அமைப்­புக்கள் பிர­த­ம­ருக்கு தனிப்­பட்ட முறையில் கடிதம் அனுப்­பி­யி­ருந்­தன. ஒக்­டோபர் 16 ஆம் திகதி பிர­தமர் ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு பயணம் செய்திருந்தார். அங்கும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் இத­னை­ய­டுத்தே  அர­சாங்கம் இந்த விட­யத்தில் திருத்­தங்­களைச் செய்­வதில் தீவிரம் காட்­டு­வ­தா­கவும் முஸ்லிம் ஆய்­வாளர் ஒருவர் அண்­மையில் இடம்­பெற்ற பொது நிகழ்­வொன்றில் குறிப்­பிட்­டுக்­காட்­டி­யி­ருந்தார்.

அதே போன்­றுதான் அண்­மைய அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் இச் சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான யோச­னையை இப்­போது முன்­வைப்­ப­தற்கு ஏதேனும் விசேட கார­ணங்கள் உள்­ள­னவா என எழுப்­பப்­பட்ட கேள்­விக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க அளித்த பதில் இத் திருத்­தத்தில் அர­சாங்கம் அவ­ச­ரப்­ப­டு­வ­தற்­கான கார­ணத்தை தெளி­வு­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. 

''நாம் இப்­போது ஐரோப்­பாவின்  ஜி.எஸ். பி. வரிச்­ச­லு­கையைப் பெற்­றுக்­கொள்ளும் நிலைக்கு வந்­தி­ருக்­கின்றோம். இது விரைவில் எமக்கு கிடைக்கும். அவ்­வா­றான சூழலில்  சர்­வ­தேச சாச­னங்­க­ளுக்கு பொருத்­த­மான வகையில் சட்­ட­திட்­டங்­களை உரு­வாக்கிக் கொள்­ள­வேண்டும். நாம்  சர்­வ­தேச சாச­னங்­க­ளுக்கு கட­மைப்­பட்­டுள்­ளதால் அதற்கு முரண்­பா­டான சட்­டங்­களை திருத்­த­வேண்டும்.  எனவே இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம்'' என தெரிவித்திருந்தார். 

இதுவே முஸ்­லிம்­களை கோப­மூட்­டி­யி­ருக்­கி­றது. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் நிபந்­த­னை­க­ளுக்­காக  ஷரீஆ அடிப்­ப­டை­யி­லான முஸ்­லிம்­களின் சட்­டத்தில் திருத்­தங்­களை கொண்­டு­வர இந்த அர­சாங்கம் முயற்­சிக்­கி­றதா? என்­பதே இன்று பல­ராலும் எழுப்­பப்­படும் கேள்­வி­யாகும்.

எனினும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலு­கைக்­காக முஸ்லிம் தனியார் சட்­டத்தை திருத்­து­மாறு தாம் ஒரு­போதும் நிபந்­தனை விதிக்­க­வில்லை என ஐரோப்­பிய ஒன்­றியம் தெரி­வித்­தி­ருக்­கி­றது. 

'' ஜீ.எஸ்.பி. வரிச் சலு­கையை பெற வேண்­டு­மானால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இலங்கை அர­சாங்கம் மாற்ற வேண்டும் என நிபந்­தனை விதித்­துள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை கண்டு  நாம் ஆச்­ச­ரியம் அடைந்தோம்.   சர்­வ­தேச சம­வா­யங்­க­ளுக்­க­மைய பெண்­களின் திரு­மண வயதை 16 ஆக மாற்ற வேண்டும் என்­பதே எமது நிபந்­த­னை­யாகும். தனியார் சட்­டத்தை மாற்­று­வதும் மாற்­றாமல் விடு­வதும் உங்­க­ளது உள்­ளக விட­ய­மாகும். அதில் நாம் ஒரு­போதும் தலை­யி­ட­மாட்டோம்'' என அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தூதுவர் டங் மார்க் தெரி­வித்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அர­சாங்கம் தாம் சுயா­தீ­ன­மா­கவே இந்தத் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக அறி­வித்­தி­ருந்தால் இந்த விடயம் இல­கு­வான முறையில் சர்ச்­சை­க­ளுக்­குட்­ப­டாது முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்கும்.

 மாறாக அர­சாங்­கத்தின் தற்­போ­தைய முன்­னெ­டுப்­பா­னது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலு­கைக்­கா­கவே இச் சட்­டத்தை மாற்ற வேண்­டிய அவ­ச­ரமும் அவ­சி­யமும் ஏற்­பட்­டுள்­ளது என்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதுவே முஸ்­லிம்கள் அச்­ச­ம­டையக் கார­ண­மாகும்.

திருத்­தங்கள் ஏன் அவ­சியம்?

இது விட­யத்தில் இவ்­வா­றான புற அழுத்­தங்கள் அர­சாங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டாலும் 1951 ஆம் ஆண்­டுக்குப் பிற்­பாடு எந்­த­வித திருத்­தங்­க­ளு­மின்றிக் காணப்­படும் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் அங்­கீ­கா­ரத்­துடன் இந்த விட­யங்­களில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதில் எவ­ருக்கும் மாற்றுக் கருத்­தி­ருக்க முடி­யாது.

குறிப்­பாக இச் சட்­டத்தில் திருத்தம் வேண்டும் என வலி­யு­றுத்­துவோர் திரு­மண பதிவு கட்­டா­ய­மாக்­கப்­ப­டாமை, திரு­மண வயது வரை­ய­றுக்­கப்­ப­டாமை, சம­ர­சத்­திற்­கான தகுந்த செயற்­பாட்டு முறைமை நிர்­ண­யிக்­கப்­ப­டாமை, குற்­றங்­க­ளுக்கு மிகக் குறைந்­த­ள­வி­லான தண்­டனை, பெண்­களின் பங்­க­ளிப்­பின்மை, மண­ம­களின் சம்­மதம் பெறப்­ப­டாமை, பல­தா­ர­மணம் தொடர்பில் காதி நீதி­வான்­களின் நியா­யா­திக்கம் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை, விவ­கா­ரத்து முறைகள், கைக்­கூலி தொடர்­பான பிரிவு, தாப­ரிப்பு பணம் செலுத்­துதல் போன்ற பல விட­யங்­களைச் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

மேற்­படி விட­யங்கள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு­வி­னரால் விரி­வாக ஆரா­யப்­பட்டு திருத்­தத்­திற்­கான சிபா­ரி­சுகள் பூர­ணப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. இக்  குழுவில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தரப்­பு­களின் பிர­தி­நி­திகள் உள்­ள­டங்­கி­யி­ருப்­பதன் கார­ண­மாக இவர்கள் நிச்­ச­ய­மாக சாதக பாத­கங்­க­ளையும் ஆழ அக­லங்­க­ளையும் ஆராய்ந்தே திருத்­தங்­களை முன்­மொ­ழிந்­தி­ருப்பர்.

அந்த வகையில் நாளை நவம்பர் 6 ஆம் திகதி இக் குழுவின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ள­தா­கவும் இதன்­போது இறுதித் தீர்­மா­னங்கள் எட்­டப்­ப­ட­வுள்­ள­தா­கவும் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

மேலும் இச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு உலமா சபை கடந்த காலங்­களில் பாரிய பங்­க­ளிப்­பினைச் செய்­துள்­ள­தா­கவும் அர­சாங்­கத்தின் இந்த நல்ல முயற்­சிக்கு உலமா சபை தொடர்ந்தும் ஒத்­து­ழைப்­பு­களை வழங்கும் என்றும் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரி­வித்­தி­ருக்­கிறார். 

மேலும், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­ சபை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை விரைவில் சந்­தித்து முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அரசு தீர்­மா­னித்­துள்­ளமை தொடர்பில் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.  

அதேபோன்றுதான் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்­கான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை உட்­பட அனைத்துத் தரப்­பி­ன­ரதும் கருத்­துகள் பெற்­றுக்­கொள்­ளப்­படும் என்றும் குறிப்பாக  நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு ஏற்­க­னவே நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் அறிக்­கையும் கவ­னத்திற் கொள்­ளப்­படும் என்றும்  முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால், தபால்­துறை அமைச்­ச­ரு­மான எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்திருக்கிறார்.

அதேபோன்றுதான் முஸ்லிம் சமூகத்தின் சகல தரப்பினதும் அங்கீகாரத்துடனே இத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னணி முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்களான முஸ்லிம் கவுன்சில் மற்றும் தேசிய ஷூரா சபை என்பன கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையில் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கடந்த வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி அரசாங்கம் சர்வதேசத்தின் நலன்களுக்காக இச் சட்டத்தில் கைவைக்கக் கூடாது எனக் கோரிக்கை விடுத்திருந்தது. 

அதேபோன்றுதான் மேலும் பல தரப்புகளும் அரசியல் நோக்கங்களுக்காக அல்லது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைகளுக்காக திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது என அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றன.

எனவேதான் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் உணர்வலைகளைப் புரிந்து கொண்டு இந்த தனியார் சட்ட திருத்த விவகாரத்தை முன்னகர்த்த வேண்டும். 

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மிக விரைவில் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் சிபாரிசுகளைப் பெற்று அதனை அமைச்சரவை உப குழுவுக்கு சமர்ப்பிக்கின்ற அதே நேரம் அதனை முஸ்லிம் சிவில் சமூகத்திடம் கையளிக்க வேண்டும். பொதுத் தளத்தில் அவற்றை வெளியிட வேண்டும்.

அதிலிருந்து கிடைக்கப் பெறும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே இத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாறாக எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில் யாரினதும் தேவைக்காக இச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது நிச்சயமாக இந்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிப்பதற்கே வழிவகுக்கும். 

இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மார்க்க தலைமைகள் தமக்குள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்றுவார்கள் என நம்புகிறோம்.