இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஜூலை 21 பாராளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க 24 மணி நேரம் கடந்துவிடுவதற்கு முன்னதாக பாதுகாப்பு படைகளையும் பொலிசாரையும் பயன்படுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமிட்டிருந்த 'அறகலய ' மக்கள் கிளர்ச்சி போராட்டக்காரர்களை பலவந்தமாக அப்புறப்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
புதன்கிழமை தற்போதைய பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்து தனது அரசாங்கத்தின் முதலாவது கொள்கை விளக்க உரையை அவர் நிகழ்த்திய பிறகு சில மணி நேரத்துக்குள்ளாகவே காலிமுகத்திடலுக்கு சென்ற பொலிசார் தொடர்ந்தும் அங்கு தற்காலிக கூடாரங்களில் தங்கியிருக்கும் அமைதிவழி போராட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று அறிவிப்பு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
அமைதிவழியில் போராடுபவர்களை பாதுகாக்கவும் அவர்களது தேவைகளை நிறைவேற்றவும் விசேட பணியகம் ஒன்று நிறுவப்படும் என்று விக்கிரமசிங்க தனதுரையில் அறிவித்த பிறகு இது நடந்திருக்கிறது.
மக்கள் கிளர்ச்சி போராட்டங்களின் முன்னரங்கத்தில் நின்ற முக்கிய உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் வலுவற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைதுசெய்யப்படுகின்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக புதன்கிழமை மாலை நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை பொலிசார் கைதுசெய்திருக்கிறார்கள்.அவரது கைதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசேட அறிக்கையாளரும் பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களும் உடனடியாகவே கண்டனம் செய்தன.
பிரச்சினைகளினால் பாதிக்கப்படுகிறவர்கள் போராட்டங்களை நடத்துவதற்கு சுதந்திரம் இருக்கிறது ; அவர்களை அரசு பாதுகாக்கும் என்று கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி கூறிய பிறகு இத்தகைய சம்பவங்கள் தொடருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
வன்முறைச் சக்திகளுக்கு இடமளிக்கமுடியாது என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டார் என்றபோதிலும், அமைதிவழி போராட்டக்காரர்களுக்கும் வன்முறைச் சக்திகளுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது போன்று பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
அது அவ்வாறிருக்க, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையின் முக்கிய அம்சங்களை இனிமேல் கவனிப்போம்.
நம்பிக்கை இழந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தான் முன்னெடுக்க உத்தேசித்திருக்கும் நீண்டகால நோக்கிலான பரந்தளவு அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் ஒன்றை உடனடியாக அமைப்பது, கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு சகல கட்சிகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய தேசிய சபை ( National Assembly) யையும் குடிமக்களின் பல்வேறு தரப்புகளையும் உள்ளடக்கிய மக்கள் சபையையும் (People's Assembly) அமைப்பது மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கில் அரசியலமைப்புக்கு திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகியவை ஜனாதிபதியின் அரசியல் சீர்திருத்த திட்டங்களில் முக்கியமானவை.
சர்வகட்சி அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட விக்கிரமசிங்க, அத்தகைய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கியப்படுமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.கடந்தகாலத்தை மறந்துவிட்டு நாட்டின் நலனுக்காக ஒன்றிணையுமாறு அந்த கட்சிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்றை வகுப்பதே தேசிய சபையின் முதற்பணியாக இருக்கும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி இன,மத வேறுபாடுகளின் அடிப்படையிலான வெறுப்பும் பகைமையும் இல்லாத இலங்கை ஐக்கியத்தை கட்டியெழுப்புவது அந்த சபையின் இலக்காக இருக்கும் என்று அவர் கூறினார்.
மக்கள் கிளர்ச்சி போராட்டங்களின்போது இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்தவேண்டும் என்ற விருப்பம் இளையதலைமுறையினர் மத்தியில் வெளிப்படுத்தப்பட்டதை உணர்ந்தவராக விக்கிரமசிங்க இன்று பெரும்பான்மையான இளைஞர்கள் இனவெறிக்கும் மதவெறிக்கும் எதிராக சுலோகங்களை எழுப்புகிறார்கள்.தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சிறுபான்மை குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும் என்று சிங்கள இளைஞர்கள் கூறுகிறார்கள் என்று தனதுரையில் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது.
இலங்கை தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகாணவேண்டிய அவசியத்தையும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்திய ஜனாதிபதியின் உரை நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் வகையிலான அணுகுமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்தது.
மக்கள் சபையை அமைக்கும் பணிகளை நடைமுறைப்படுத்த அகல்விரிவான அரசியல் சீர்திருத்தங்கள் தேவை. இளைஞர்கள், பெண்கள் உட்பட மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் சம்மதத்துடன் அதைச் செய்யப்போவதாகவும் எத்தகைய சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காகவே
மக்கள் சபை அமைக்கப்படும்.சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்கான தேசிய திட்டமொன்றை தயாரிக்கும் பணி மக்கள் சபையிடம் ஒப்படைக்கப்படும். அந்த சபையின் தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் மீது அரசாங்கம் எந்த செல்வாக்கையும் செலுத்தாது.அது முற்றிலும் சுயாதீனமான அமைப்பாக இயங்கும்.அரசாங்கம் தேவையான வழங்களை மாத்திரமே வழங்கும்.மக்கள் சபையில் உள்ளடக்கப்படவேண்டியவர்கள் தொடர்பில் பல்வேறு கட்சிகளுடனும் தரப்புகளுடனும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாயமைந்த கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விளக்கிக்கூறிய ஜனாதிபதி அடுத்த 25 வருடங்களுக்கான தேசிய பொருளாதாரக்கொள்கை வகுக்கப்படுவதாகவும் அந்த கொள்கையின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பினால் சுதந்திரத்தின் நூற்றாண்டு வரும்போது 2048 ஆம் ஆண்டில் நாடு முழு வளர்ச்சியடைந்ததாக விளங்கும் என்று தனது கனவையும் சொன்னார்.
அதேவேளை, எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை மக்கள் இவ்வருட இறுதிவரை பொறுத்துக்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை கூறிவைக்கவும் தவறவில்லை.பிரதமராக பதவியேற்ற நாளில் இருந்து எதிர்வரும் நாட்களில் பொருளாதார நிலைவரம் மோசமடையும் என்று அச்சுறுத்தல் விடுப்பதை வழக்கமாக கொண்டிருந்த ஜனாதிபதியின் இந்த உரையில் அந்த அச்சுறுத்தல் தொனியை மிகுதியாகக் காணமுடியவில்லை.தனது அரசாங்கம் படிப்படியாக நடவடிக்கை எடுத்து மக்களின் இடர்பாடுகளை தணிக்கும் என்று நம்பிக்கையூட்ட அவர் முனைந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு ஒத்துழைப்புக் கேட்டு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கடிதம் எழுதியபோது அவர்களிடமிருந்து வெளிப்படாத பிதிபலிப்பை இந்த கொள்கை விளக்க உரைக்குப் பிறகு காணக்கூடியதாக இருக்கிறது.பாராளுமன்ற வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்த கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட தேநீர் விருந்தின்போது அவருடன் கைகுலுக்க முண்டியடித்தார்கள்.ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.)வைத்தவிர மற்றைய கட்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமுன்வந்திருக்கின்றன என்றே தெரிகிறது.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை நம்பிக்கை தருவதாக அமைந்திருப்பதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நெருக்குதல்களுக்கு பணிந்துபோகாமல் அவர் சொன்னதைச் செய்வாராக இருந்தால் தேசிய சபை,மக்கள் சபை மற்றும் பாராளுமன்ற கமிட்டி முறைமைகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.பிரேமதாசவின சமகி ஜன பலவேகயவின் சில உறுப்பினர்கள் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் உரைக்குப் பிறகு வெளியிட்ட கருத்துக்கள் இதை உணர்த்துகின்றன.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்கெனவே சில நிபந்தனைகளை முன்வைத்து சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.மீண்டும் பேசுவதற்கு கட்சி தீர்மானித்திருக்கிறது.
விமல் வீரவன்ச,உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் வழிநடத்தலில் செயற்படும் பத்து கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான சமிக்ஞைகளை தெளிவாக காட்டியிருக்கின்றன..அவசரகால சட்டத்தை ஆதரித்து சபையில் அவர்கள் வாக்களித்தார்கள்.
ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதஜன பெரமுனவில் இருந்து வெளியேறி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அதிருப்தியாளர்கள் குழு இன்னமும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது.
தன்னை புதன்கிழமை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேசியிருக்கிறார்.தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றுக்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராயிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணையாமல் வெளியில் இருந்து தற்போதைய நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்கு அரசாங்கம் எடுக்கும் எ்று ஜனாதிபதியிடம் கூறப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க இப்போது பேசுகிறார் என்றாலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் எதிரணியில் இருந்த வேளையிலேயே கோதாபய ராஜபக்சவின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.குறிப்பிட்ட ஒரு காலகட்டத்துக்கு (சுமார் 6 மாதகாலம்) அத்தகைய ஒரு அரசாங்கத்தை அமைத்து சாத்தியமானளவு விரைவாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான திட்டத்தை வகுப்பதும் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதுமே அந்த யோசனையின் அடிப்படையாக இருந்தது.
ஆனால் ஜனாதிபதி இப்போது தான் அமைக்கவிரும்புகிற சர்வகட்சி அரசாங்கத்தின் காலவரையறையைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அதையே பிரதான காரணமாகக் காட்டி ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) ஜனாதிபதியுடன் ஒத்துழைப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்ந்து நீடிக்கவேண்டுமா? எத்தகைய ஆட்சிமுறை நாட்டுக்கு பொருத்தமானது?ஆட்சிமுறை எவ்வாறு சீர்திருத்தத்துக்கு உள்ளாக்கப்படவேண்டும்? என்ற விடயங்கள் சகலதையும் ஆராய்ந்து கருத்தொருமிப்பைக் காண்பதற்கான பொறுப்பை உத்தேச மக்கள் சபையிடமே ஜனாதிபதி விட்டுவிடுகிறார்.அதனால் தனது தலைமையில் அமையக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை அந்த பொறுப்பில் இருந்து விலக்கிவைப்பதை அவர் நோக்கமாக கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM