இலங்கையில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து அரசியல், பொருளாதார நெருக்கடிகள் மெல்லமெல்ல தலைதூக்கியிருந்த நிலையில், தற்போது அதன் வடிவம் சர்வகட்சி அரசாங்கம் என்ற நிலைக்கு மாறியுள்ளது.
நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் அமைச்சரவை மாற்றங்கள், அரச அதிகாரிகளின் பதவிநிலை மாற்றங்கள் போன்ற பல பந்துகள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உருட்டிவிடப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் கிட்டவில்லை.
தற்போது சர்வகட்சி என்ற அரசியல் பந்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் இலாவகமாக உருட்டிவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பமாகிய மக்கள் எதிர்ப்பு அரச போராட்டத்தால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை என்பன ஆட்டம் கண்டன. அவை மக்கள் புரட்சியால் கலைக்கப்பட்டன.
தற்போது தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்திற்கு வருகைதந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொரை ஆரம்பித்துவைத்து அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே ஜனாதிபதி ரணிலின் சர்வகட்சி என்ற பந்து உருட்டப்பட்டுள்ளது.
சர்வகட்சி என்ற பந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள் என்று பலரை பதம் பார்த்ததை அந்த கொள்கைப் பிரகடன உரையின் பின்னரான ஒவ்வொருவரின் நிலைப்பாடுகளும் பிரதிபலித்துக் காட்டுகின்றன.
ஜனாதிபதி ரணிலின் கொள்கைப் பிரகடன உரையின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களின் பதில்களில் சர்வகட்சி என்ற பந்தின் கனம் புரிகிறது.
சர்வகட்சி அரசாங்கம் குறித்து கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்துகயைில்,
“ நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண ஒன்றிணையும் பட்சத்தில் எம்மால் நாட்டினைக் கட்டியெழுப்ப முடியும். பிரிந்து சென்றால் இப்பாராளுமன்றத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமன்றி முழு நாட்டு மக்களும் துன்பத்திற்கும் அழிவிற்கும் ஆளாகுவர். எனவே சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு நான் மீண்டும் இந்த பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்துத் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
நெருக்கடியில் விழுந்திருந்த ஒரு நாட்டையே பொறுப்பேற்றேன். கடுமையான பொருளாதாரப்பிரச்சினை ஒருபுறம். பாரிய மக்கள் எதிர்ப்பு மறுபுறம். எனினும் நாட்டுக்காக இந்த கடினமான சவாலை பொறுப்பேற்க நான் தீர்மானித்தேன். அதற்குக் காரணம் இருளுக்கு சாபமிட்டுகொண்டு இருப்பதை விட ஒரு விளக்கினையேனும் ஏற்றுவது நாட்டிற்காக நான் செய்யும் கடமை என நான் கருதியமையாகும்.
விரைவில் இந்த அரசியல் நெருக்கடியினைத் தீர்த்துக்கொண்டு ஸ்திரத்தன்மை ஒன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்காக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றின் முக்கியத்துவம் பற்றி நான் இச்சபைக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.” என்கிறார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொள்கை பிரகடன உரையை நிறைவு செய்யும் போது, றோயல் கல்லூரியில் கல்வி கற்கும் போது வாய்ப்பாடம் செய்த உலக புகழ்பெற்ற கலைஞர் ஒருவரான ருத்யாத் கிப்லிங் எழுதிய 'இப்' எனப்படும் கவிதை வரிகளின் ஒரு பகுதியையும் நாசூக்காக குறிப்பிட்டிருந்தார்.
"If you can meet with Triumph and Disaster
And treat those two imposters just the same;
If you can bear to hear the truth you've spoken
Twisted by knaves to make a trap for fools,
Or watch the things you gave your life to, broken,
And stood and build'em up with worn-out tools:
– you'll be a Man, my son!"
ஜனாதிபதி ரணிலால் உருட்டப்பட்டுள்ள சர்வகட்சி என்ற பந்து சரியான திசையில் நகருமா ?
வீ.பி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM