ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் காலிங்க

By T Yuwaraj

04 Aug, 2022 | 06:10 AM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் காலிங்க குமாரகே ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் அரை இறுதியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

போட்டியின் 6ஆம் நாளான இன்று புதன்கிழமை (03) பகல் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் 1ஆவது திறன்காண் போட்டியில் பங்குபற்றிய காலிங்க குமாரகே நூலிழையில் 3ஆம் இடத்தைத் தவறவிட்டார்.

இதன் காரணமாக அரை இறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும் அதிசிறந்த நேரப் பெறுதி அடிப்படையில் அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.

இன்றைய தினம் நடைபெற்ற 7 திறன்காண் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற 21 வீரர்கள் அரை இறுதிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர். மற்றைய மூவர் அதிசிறந்த நேர அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறினார். இந்த மூவரில் அதிசிறந்த நேரப் பெறுதிப் பெறுதியைக் கொண்டிருந்த காலிங்க குமாரகே, ஒட்டுமொத்த நிலையில் 17ஆம் இடத்தை அடைந்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து 300 மீற்றர் வரை முன்னிலையில் இருந்த காலிங்க குமாரகேவை கடைசிக் கட்டத்தில் நமீபிய வீரர் ஐவன் டெனி 0.02 செக்கன்கள் வித்தியாசத்தில் 4ஆம் இடத்துக்கு பின்தள்ளிளார்.

காலிங்க குமாரகே போட்டி தூரத்தை 46.53 செக்கன்களில் நிறைவு செய்தார்.

முதலாவது திறனகாண் போட்டி முடிவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட காலிங்க குமாரகே, '320 மீற்றர் வரை நான் முதலிடத்தில் இருந்தேன். ஆனால் அதன் பின்னர் என்ன நேர்ந்தது என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் இப் போட்டியில் நான் பதிவு செய்த நேரம் எனக்கு பூரண திருப்தி தருகின்றது' என்றார்.

'நான் பத்து தினங்களுக்கு முன்னரே இங்கு வருகை தந்து கடும் பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஒரு மாதத்துக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் 2 போட்டிகளில் பங்குபற்றினேன். ஆனால், என்னால் சிறப்பாக ஓட முடியவில்லை. அங்கு கிடைத்த அனுபவத்துடன் இங்கிலாந்தில் அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்தியதையிட்டு   திருப்தி அடைகிறேன்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

காலிங்க பங்குபற்றிய திறன்காண் போட்டியில் ஜெமெய்க்கா வீரர் அன்தனி கொக்ஸ் (45.51 செக்), 1ஆம் இடத்தையும் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் சொலமன் (45.98 செக்.) 2ஆம் இடத்தையும் நமீபியாவின் ஐவன் டெனி (46.51 செக்) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஏமாற்றம்

மகளிர் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை, தனது இரண்டாவது போட்டியில் நியூஸிலாந்திடம் 45 ஓட்டங்களால் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த இலங்கை, நேற்றுமுன்தினம் நடைபெற்ற நியூஸிலாந்துடனான போட்டியில் 45 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சொஃபி டிவைன் (24), சுஸி பேட்ஸ் (34) ஆகியோர் 7 ஓவர்களில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அவர்களைவிட ப்றூக் ஹாலிடே (22), இஸபெல்லா கெஸ் (16), லீ தஹுஹு (20 ஆ.இ.) ஆகியோரும் அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

இலங்கை பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஓஷாதி ரணசிங்க 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுபெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அண்மைக்காலாமாக பிரகாசிக்கத் தவறிவரும் சமரி அத்தப்பத்து இந்தப் போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

நிலக்ஷி டி சில்வா (38), ஓஷாதி ரணசிங்க (16 ஆ.,) ஆகிய இருவர் மாத்திரமே இலங்கை சார்பாக துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.

குத்துச்சண்டையில் கிளிநொச்சி வீரருக்கு பலத்த ஏமாற்றம்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் முதல் தடவையாக பலத்த எதிர்பார்ப்புடன் பங்குபற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த விற்றலி நிக்லஸ் தோல்வி அடைந்தார்.

என்.ஏ.சி. அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான 67-71 கிலோ கிராம் எடைப் பிரவில் சமோஆ வீரர் மேரியன் பௌஸ்டினோவை எதிர்த்தாடிய நிக்லஸ் 0 - 5 என தோல்வி அடைந்தார்.

ஆண்களுக்கான 51-54 கிலோ கிராம் எடைப்பிரிவில் கென்யாவின் ஷாபி பக்காரி ஹசனை 3 - 2 என்ற அடிப்படையில் வெற்றிகொண்ட ருக்மால் ப்ரசன்ன அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பெண்களுக்கான 54-57 கிலோ கிராம் எடைப்பிரிவில் பாகிஸ்தானின் மெஹ்ரீனை 5 - 0 என இலகுவாக வெற்றிகொண்ட சஜீவனி குறே அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.

இலங்கைக்கு தோல்விமேல் தோல்வி

பெண்களுக்கான 78 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குபற்றிய இலங்கையின் ஹிருணி இமேஷா வித்தான 16 வீராங்கனைகளுக்கு நீக்கல் சுற்றில் மொரிஷியஸ் வீராங்கனை ட்ரேசி டேர்ஹோனிடம் தோல்வி அடைந்தார்.

ஸ்கொஷ் போட்டியில் இலங்கைக்கு மாறுப்ட்ட பெறுபேறுகள்

கலப்பு பிரிவினருக்கான ஸ்கொஷ் போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி அடைந்தது.

பாகிஸ்தானின் பாய்ஸா ஸபார் மற்றும் நசிர் இக்பால் ஜோடியினரிடம் 11 - 10, 11 - 4 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கையின் சந்திமா சினலி மற்றும் ஷமில் வக்கீல் ஜோடியினர் தோல்வி அடைந்தனர்.

எனினும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை வெற்றியீட்டியது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right