ஜூடோ வீராங்கனை, முகாமையாளர் ஆகியோரைத் தொடர்ந்து இலங்கையின் மல்யுத்த வீரரும் தலைமறைவு

By Vishnu

03 Aug, 2022 | 08:39 PM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை அணியைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரும் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கத்தின் நம்பகரமான வட்டாரம் தெரிவித்தது.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற இங்கிலாந்து வருகை தந்த இலங்கை ஜூடோ வீராங்கனை ஒருவரும் அணி முகாமையாளர் ஒருவரும் திங்கட்கிழமை தலைமறைவானதைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த மூன்றாவது வீரரான மல்யுத்த வீரர் நேற்றுமுன்தினம் தலைமறைவானதாக அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

மூன்று தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து வருகை தந்த மல்யுத்த அணியைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொவிட் - 19 தொற்று இருந்ததால் அவர் பிரத்தியேக ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட இரண்டாவது கொவிட் - 19 பரிசோதனையில் அவரது அறிக்கை எதிர்மறையாக இருந்ததால் அவரை தனிமைப்படுத்தல் ஓட்டலில் இருந்து வெளியேற ஓட்டல் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.

ஏனைய அணியினருடன் இணைவதற்கு ஏதுவாக அவருக்கு வாகனம் ஒன்றை ஓட்டல் அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் குறிப்பிட்ட மல்யுத்த வீரர் தனது பொதிகளை ஓட்டலிலேயே வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாக இலங்கை பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்க வட்டாரம் தெரிவித்தது.

இது தொடர்பாக மெட்ரோ பொலிட்டான் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right