கேள்வி:
எனக்கு 38 வயது. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக எனது நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாக என் மனைவி கூறுகிறார். எந்நேரமும் எரிந்து விழுவதாகவும் முன்போல் இல்லை என்றும் கூறுகிறார். எனக்கு என்னிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. என் குழந்தைகளும் அவ்வப்போது இவ்வாறு கூறுகிறார்கள். என்னிடம் ஏதும் பிரச்சினை இருக்குமா? மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா?
பதில்:
நீங்கள் பருவம் அடைகிறீர்கள், அவ்வளவுதான்!
அதாவது, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். இத்தனை நாட்களும் பொறுப்புகளைக் குறைவாக உணர்ந்ததால் சந்தோஷமாக இருந்திருக்கிறீர்கள்.
ஏதோவொரு தருணத்தில் உங்கள் வயதும் குழந்தைகளின் எதிர்காலமும் உங்கள் கண்முன்னே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. அது, உங்களை விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. இந்த அழுத்தம்தான் உங்கள் மனைவி மீதும் பிள்ளைகள் மீது பொங்கிப் பிரவாகித்திருக்கிறது.
பெரும்பாலும் வாழ்க்கையில் தேவையான பொருளாதார வசதியைப் பெறாத மத்திம வயதுக்காரர்கள் இதே பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதுதான் உங்களையும் பாதித்திருக்கிறது.
இதற்காக நீங்கள் வைத்தியரிடம் செல்லவேண்டிய தேவை இல்லை. நீங்களே உங்களை மாற்றியமைத்துக்கொள்வது போதுமானது.
உங்களை விடக் குறைவாக உழைப்பவனும் உங்கள் அருகிலேயே சந்தோஷமாக வாழ்கிறான். உங்களை விட அதிகமாக சம்பாதித்தும் கடன், உடல்நலக் குறைபாடு அல்லது வேறு ஏதும் கவலைகளால் முகத்தில் சிரிப்பே இன்றி வாழ்பவர்களும் உங்களருகில் இருக்கக்கூடும். எல்லோருக்கும் ஏதோவொரு கவலை, பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதற்காக, பொருளாதார ஸ்திரத்தன்மை பெறும்வரை நான் சந்தோஷமாக இருக்கமாட்டேன் என்று கங்கணம் கட்டத் தேவையில்லை.
மிக எளிமையாகச் சொல்வதானால், நீங்கள் எவ்வளவுதான் முக்கினாலும் உங்களுக்குக் கிடைக்கவேண்டியது மட்டுமே கிடைக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
ஆசைப்படுவது என்பது வேறு, கிடைக்காததை நினைத்து கவலைப்படுவது வேறு. பொருளாதார ஸ்திரத்தன்மை பெறவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவதில் தவறில்லை. இன்னும் கிடைக்கவில்லையே என்று கையருகே இருக்கும் சந்தோஷங்களை தொலைத்துவிடாதீர்கள்.
களைப்புடன் வீடு திரும்பும்போது கனிவுடன் விசாரிக்கும் மனைவியின் அன்பைப் புரிந்துகொள்ளுங்கள். என்னதான் மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் உங்களையே தங்கள் கொழுகொம்பாகப் பிடித்துக்கொண்டு வாழும் உங்கள் குடும்பத்தினரின் முகங்களைப் பாருங்கள். அவற்றில் தெரியும் சந்தோஷமும் திருப்தியும்தான் உங்களைச் சோர்வின்றி உழைக்கவும் பொருள் தேடவும் ஊக்குவிக்கும் ஊக்கி.
அவர்களது மனங்களை காயப்படுத்திவிட்டு காசு சம்பாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ஆண்களின் பொதுவான குணம் என்ன தெரியுமா? கஷ்டங்களையும் வலியையும் மனதுக்குள் புதைத்துவிட்டு சிரித்த முகத்துடன் அடுத்த வேலையை பார்ப்பதுதான். உங்கள் குடும்பத்தினரின் முகங்களில் சந்தோஷம் இல்லாதவரை நீங்கள் எத்தனை கோடிதான் உழைத்தும் என்ன பயன்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM