( ஆர்.கே.வி.)

ஆவா குழுவென்பது சொல்லிக்கொள்ளத்தக்கதான கும்பலல்ல.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கூட இத்தகைய கும்பல்களுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இதை நான் சொன்னால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் வாளினை தூக்கியவாறு தன்னை தாக்க வந்துவிடுவார் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவா போன்ற குழுக்களிடம் இராணுவ கைக்குண்டுகள் இருப்பதாக கூறப்படுகின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் யுத்தம் நடந்த பிரதேசத்தில் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக்கொள்வது கடினமானதல்ல எனவும் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கூட இத்தகைய கும்பல்களுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இதை நான் சொன்னால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் வாளினை தூக்கியவாறு தன்னை தாக்க வந்துவிடுவார்.

ஆவா குழுவென்பது சொல்லிக்கொள்ளத்தக்கதான கும்பலல்ல. சாதாரண தமிழ் சினிமாவின் தாக்கத்தில் இளைஞர்கள் குழுவொன்றின் செயற்பாட்டை பாரிய விடயமாக காண்பிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். அவர்களிற்கு தெற்கில் ஆவா குழுவை பிரமாண்டமாக காட்டியது போன்று தற்போது கைதையும் பெரிதாக காண்பிக்கும் தேவை இருக்கின்றது,

தமது அமைப்பு ஆயுதக்குழுவாகவோ, துணைப்படையாகவோ செயற்பட்டதில்லை. விடுதலைப்புலிகளை தேடிக்கொலை செய்தவர்களாகவும் இருக்கவில்லை.

அதே போன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவிடமிருந்து தாம் ஆயுதங்களை பெற்றிருக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச,சந்திரிகா ஆகியோரே பாதுகாப்பிற்கு ஆயுதங்களை தந்திருந்தனர். அவற்றைக் கூட 2002 இல் கையளித்துவிட்டோம் என தெரிவித்தார்.