ஆண்களுக்கான 100 மீற்றர் அரை இறுதிக்கு  முன்னேறினார் யுப்புன் : பெண்களுக்கான 800 மீற்றரில் கயன்திகாக தேசிய சாதனையுடன் வெளியேற்றம்

02 Aug, 2022 | 08:39 PM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் யுப்புன் அபேகோன், அதில் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார். 

ஆனால், பெண்களுக்கான 800 மீற்றர் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய கயன்திகா அபேரட்ன 5ஆம் இடத்தைப் பெற்று வெளியேறினார்.

பேர்மிங்ஹாம் அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) ஆண்களுக்கான 100 மீற்றர் 6 ஆவது திறன்காண் போட்டியில் பங்குபற்றிய யுப்புன் அபேகோன், போட்டி தூரத்தை 10.06 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்று அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

ஆரம்பம் முதல் கடைசி வரை முதலாம் இடத்தில் ஓடிய யுப்புன் மிக இலகுவாக வெற்றியீட்டினார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 10 திறன்காண் போட்டிகள் நடைபெற்றதுடன் அவற்றில் மொத்தமாக பங்குபற்றிய 70 பேருக்கான ஒட்டுமொத்த நிலையிலும் யுப்புன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றார்.

இந்த போட்டி முடிவுக்கு அமையவும் ஏனையவர்களின் நேரப் பெறுதிகளின் அடிப்படையிலும் தனக்கு பதக்கம் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக யுப்புன் அபேகோன் போட்டி முடிவில் தெரிவித்தார்.

எனினும் அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதே தனது அடுத்த இலக்கு என அவர் குறிப்பிட்டார்.

100 மீற்றர் திறன்காண் சுற்றில் கென்யாவின் பேர்டினண்ட் ஒமன்யாலா (10.07 செக்.) இரண்டாம் இடத்தையும் கெமறூன் வீரர் இம்மானுவேல் எசெமே (10.08 செக்) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

ஆண்களுக்கான 100 மீற்றர் இறுதிப் போட்டி இங்கிலாந்து நேரப்படி இரவு 7.10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய கயன்திகா அபேரட்ன 5ஆம் இடத்தைப் பெற்று வெளியேறினார்.

திறன்காண் போட்டியில் ஆரம்பத்திலிருந்து பின்னடைவு கண்ட கயன்திகாவினால் எந்த சந்தர்ப்பத்திலும் மீள முடியாமல் போனது.

எவ்வாறாயினும் போட்டி தூரத்தை 2 நிமிடங்கள், 01.20 செக்கன்களில் ஓடி முடித்த கயன்திகா தனது சொந்த தேசிய சாதனையை 0.22 செக்கன்களால் முறியடித்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.

குத்துச்சண்டையில் பலத்த ஏமாற்றம்

பேர்மிங்ஹாம் இன்டர்நெஷனல் என்ஈசி 5ஆம் இலக்க மண்டபத்தில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் இருவர் தோல்வி அடைந்தனர்.

குத்துச் சண்டை போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர்கள் இருவரும் தடுத்தாடுவதில் குறியாக இருந்தார்களே தவிர எதிர்த்தாடுவதில் ஆர்வம் காட்டவே இல்லை.

ஆண்களுக்கான 48 - 51 கிலோ கிராம் எடைப் பிரவில் இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனல்டிடம் இலங்கையின் இஷான் ரஞ்சீவ செனவிரட்ன 0 - 5 என மத்தியஸ்தர்களின் ஏகமனதான தீர்ப்புக்கு அமைய தோல்வி அடைந்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான 54 - 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் கயானாவின் கெவின் அலிகொக்கிடம் இலங்கையின் விமுக்தி குமார நிஷ்ஷன்க 0 - 5 என்ற மத்தியஸ்தர்களின் ஏகமனதான தீர்ப்புக்கு அமைய தோல்வி அடைந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right