பொதுநலவாய விளையாட்டில் பங்குபெறச்சென்ற இலங்கையர் இருவர் இங்கிலாந்தில் தலைமறைவு

02 Aug, 2022 | 08:33 PM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்ற வருகை தந்த இலங்கை குழாத்திலிருந்து இருவர் தலைமறைவாகியுள்ளதாக இலங்கை குழாத்தின் ஒட்டுமொத்த தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ 'வீரகேசரி'க்கு தெரிவித்தார்.

ஜூடோ அணியைச் செர்ந்த வீராங்கனை ஒருவரும் அணி முகாமையாளரும்  பொதுநலவாய  விளையாட்டு விழாவின் ஐந்தாம் நாளான திங்கட்கிழமை (01) பிற்பகலில் இருந்து தலைமறைவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக மெட்ரோபொலிட்டன் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்ட மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ, விடுதிக்கு வருகைத் தந்த பொலிஸார், தலைமறைவானர்கள் தங்கியிருந்த அறைகளை சோதனையிட்ட பின்னர் அவர்கள் இருவரையும் கண்டுபிடிப்பதற்காக சிசிரிவி கமராக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறினார்.

இங்கிலாந்து வருகை தந்துள்ள இலங்கை வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் அனைவரினதும் கடவுச்சீட்டுக்களைப் பொறுப்பேற்குமாறு அணி முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கி இருந்ததாகவும் அந்தக் கடமையைச் செய்ய வேண்டிய முகாமையாளர்களில் ஒருவரே தலைமறைவனாதால் தாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் மேஜர் ஜெனரல் தம்பத் பண்டார தெரிவித்தார்.

இதனைவிட ஒவ்வொரு நாளும் காலை ஆகாரத்திலிருந்து இரவு நித்திரைக்கு செல்லும் வரை இலங்கை அணியினர் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அணி முகாமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகாமையாளர்களில் ஒருவர் தலைமறைவானதை அடுத்து இலங்கை குழாத்தில் உள்ள அனைவரினதும் கடவுச் சீட்டுக்களை முகாமையாளர்களிடம் இருந்து தாம் பொறுப்பேற்றுக்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.

பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 110 வீர, வீராங்கனைகளும் 51 அதிகாரிகளும் பங்குபற்ற பேர்மிங்ஹாம் வருகை தந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right