‘ஜெயிச்சிட்ட மாறா’ தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரையுலகம் - இயக்குநர் சுதா கொங்கரா

Published By: Digital Desk 5

02 Aug, 2022 | 04:50 PM
image

குமார் சுகுணா

இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதுகள்  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்திய திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளன.  

இது 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகளாகும். இந்த விருதுகள் மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகத்தினால் அண்மையில்  அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ் திரையுலகம் ஏனைய மொழி திரைப்படங்களை விட அதிகமாக விருதுகளை குவித்துள்ளமை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சூர்யாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

அதனை போல சூர்யா நடித்த சூரரைப் போற்று திரைப்படத்துக்கு ஐந்து விருதுகளும் , சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற திரைப்படத்துக்காக மூன்று விருதுகளும் மற்றும் யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படத்துக்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன.

இது தொடர்பில் மேலும் பார்ப்போம்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சூரரைப் போற்று' திரைப்படம் உலகின் பிரபல்யமான மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதுக்கான  போட்டியில் பல பிரிவுகளில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இத் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளில் ஐந்து விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கதையின் நாயகனான சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் சிறந்த திரைக்கதைக்கான விருது ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்கரா இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறந்த திரைப்படத்துக்கான பியூச்சர் பிலிம் என்ற விருதும் 'சூரரைப் போற்று' திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்பட கதையானது ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தைத் தொடங்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் வாழ்க்கை கதையை தழுவியதாகும்.

இங்கு சூரரை போற்றுவின் இயக்குநர் சுதா கொங்கராவை பற்றி சில விடயம் கூற வேண்டும். இயக்குநர் சுதா கொங்கரா ஆரம்ப காலத்தில் சினிமாவின் இயக்கநராக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர்தான். ஆனால் அந்த கனவு குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ளபடாமல் இருபது வயதில் திருமண வாழ்க்கைக்குள் நுழைய வேண்டி ஏற்பட்டது. 

அடுத்து இரண்டு குழந்தைகள் ஆனாலும் தனது கனவை தனது கணவரிடம் தெரிவித்ததோடு  இவரது கனவை இவர் தொலைத்து விட்டு போகவில்லை. 

குழந்தைகளை வைத்துக்கொண்டே  நடிகை ரேவதியிடம் ஆரம்ப காலத்தில் பணியாற்றியிருக்கிறார் . பின்னர்  இயக்குநர் மணிரத்னத்திடம் 7 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். தொடர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு  வெளியான துரோகி படத்தின் மூலம் தன்னை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திக் கொண்டார். 

படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அடுத்து இறுதிச்சுற்று, திரைப்படம் எடுத்த போது பலரின் கிண்டல் பேச்சுகள் அவரை தாக்கிய போதும். அவர் இறுதிசுற்றில் வென்றார்.  அதன் மூலம் தன்னை இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக உயர்த்திக் கொண்டவர். 

இறுதிச்சுற்று தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றை இங்கு  பகிர்கிறேன்.  

இத்திரைப்படம் எடுத்தப்போது  "இவங்கல்லாம் ராயபுரத்த எப்படி படம் எடுக்க போறாங்க, இந்த பொண்ணுக்கு ராயபுரம் பத்தி என்ன தெரியும் என்று ஒரு இயக்குநர் பேசினார். இந்த படத்தில் மாதவன் கதாபாத்திரம் கூறுவதுபோல், நீயெல்லாம் வீட்ல உக்காந்து துணி துவைக்கதான் லாயக்கு'ன்னு சொன்னாரு. 

'கமெர்ஷியல் இல்ல, இது இங்க ஓடாது, ஹிந்தில ஓடும், ஹிந்தி கண்டெண்ட்ன்னு சொன்னாங்க சில பேர். யார் இத முடிவு பண்றது ஹிந்தி கண்டெண்ட், தமிழ் கண்டெண்ட், மலையாளம் கண்டெண்ட்ன்னு. 'பி, சி சென்டர்ஸ்ல சுத்தமா போகாது, ஏ சென்டர்ல போடலாம், அதுவும் மல்டிப்ளெக்ஸ்ல மட்டும்தான் நல்லா ஓடும், சத்தியம்ல போடலாம், நல்ல போகும்ன்னு சொன்னாங்க" என்று படத்தை பற்றி முன்முடிவு செய்பவர்களை குறித்து பதிவில் விளாசியிருந்தார் சுதா கொங்கரா. ’

மேலும் அவரை பெண் இயக்குநர் என்று ஒரு பேட்டியில் கூறிய போது don’t call me woman director. Call me director"  என்று கூறியதையும் யாரும்  மறக்க முடியாது.

5 தேசிய விருதுகள் "சூரரை போற்று " திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது? எப்படி இருக்கிறது  என்று அவரிடம் சர்வதேச ஊடகம் ஒன்று வினவியபோது,

"சூரரை போற்று " திரைப்படத்தில் மாறா என்ன நினைத்தாரோ அதையே தான் இப்போது நான் நினைக்கிறேன். திரைப்படத்தில் அத்தனை கஷ்டங்களுக்கு பிறகு மாறாவின் முதல் பிளைட்டில் மக்கள் அனைவரும் வந்து இறங்கும் போது " ஜெயிச்சிட்டே மாறா " என்ற வார்த்தைகளின் பெருமிதம் இன்றைக்கு எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதேப் போல் 5 தேசிய விருதுகள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் பெருமிதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல சூர்யாவை திரையுலகில் அறிமுகப்படுத்திய இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் இதில், சிறந்த உறுதுணை நடிகர் விருது லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கும்  சிறந்த  படத்தொகுப்பாளர்  விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு , சிறந்த அறிமுக இயக்குநர் மற்றும் வசன கர்த்தாவுக்கான விருது, யோகிபாபு நடித்து ஓடிடி தளத்தில் வெளியான மண்டேலா திரைப்படத்திற்காக இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

சிறந்த அறிமுக இயக்குநருக்காக வழங்கப்படும் இந்திரா காந்தி விருதினை இயக்குநர் மடோன் அஸ்வின் பெறுகிறார்.

இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் ஓடிடி தளத்தில் வெளிவந்த படங்களே தேசிய விருதினைப் பெற்றுள்ளது. இவ்வரிசையில் சூரரைப் போற்று அமேசானிலும், மண்டேலா நெட்பிளிக்ஸிலும் சிவரஞ்சினியும் சில பெண்களும் சோனி லைவ்விலும் வெளியாகின. இந்த  மூன்று தமிழ் திரைப்படங்களும்  இந்தாண்டுக்கான தேசிய விருதுகளில் முத்திரை பதித்துள்ளன. 

இதேபோல tanhaji unsung warrior  என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right