காலங்காலமாக மூழ்கும் குடியிருப்புகள்... மாற்றுவழி என்ன ?

Published By: Digital Desk 5

04 Aug, 2022 | 09:36 AM
image

குமார் சுகுணா

பருவநிலை மாற்றம் காரணமாக மலையகத்தில் தொடர்ந்து கடும் மழை,  மற்றும்  காற்றுடன்  கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை  ஸ்தம்பித்துள்ளது.

ஏற்கனவே பொருளாதார சிக்கலில் சிக்குண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது  காலநிலை மாற்றமும் பெரும் சவாலாகியுள்ளது.

மலையகத்தில் எப்போது மழை வந்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் மண் சரிவுகள் ஏற்படுவதும்,  பாரிய மரங்கள் குடியிருப்புகளின் மீது விழுந்து விபத்துக்கள் ஏற்படுவதும் வழமைதான்.

ஆனால், மழை வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் மக்கள் குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்குவதும். மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் மண்டபங்களிலும் தங்கவைக்கப்படுகின்ற நிலமை தொடர்வதுதான் வேதனை அளிப்பதாகவே உள்ளது. குடியிருப்புகள் மட்டும் அல்ல. பாடசாலைகளில் கூட வெள்ளநீரில் சிக்குவதனை அவதானிக்கின்றோம்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டம் கொட்டகலை மேம்பீல்ட் சாமஸ் உள்ளிட்ட பிரதேசங்களில் மழை வெள்ளம் காரணமாக  பாடசாலைகளில்  வெள்ளநீர் புகுந்தமையால் பல மாதங்களுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் தடைப்பட்டுள்ளது.  

அதனை போல கொட்டக்கலை கொமர்சல் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப் பட்ட சிறிய லேக்கில் நீர் மட்டம் அதிகரித்தமையால்  பிரதான  வீதியெங்கும் வெள்ளைகாடாக காட்சி தருகின்றது.

அண்மையில் அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் ஊடாக பாயும் களனி ஆற்றின் கிளையாறு பெருக்கெடுத்ததன் காரணமாக அட்டன் ரொத்தஸ் தோட்டத்தின் 20 வீடுகளினுள் வெள்ள நீர் புகுந்ததை செய்திகளில் பார்த்தோம். இதன் காரணமாக வீட்டு பொருட்கள், உணவு பொருட்கள், ஆவணங்கள், பாடசாலை மாணவர்களின் பாடநூல்கள், கால்நடைகள் என அணைத்தும் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ளன.

சில வீடுகளின் கூரைகள் உடைந்து சேதங்களும் ஏற்பட்டன. வெள்ளம் வடிந்த நிலையில் பாதிக்கப்பட்ட 20 குடும்பம்பங்களும் பாதிக்கப்பட வீடுகளின் ஒரு பகுதியிலும் அயலவர்களின் வீடுகளிலும் தங்கினர். 

மூன்று வருடங்களுக்கு முன்னர் இவ்வாறானதொரு வெள்ளத்தினால் தமது பிள்ளையை பறிக்கொடுத்த தாய் தாம் தொடர்ந்தும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதாகவும் தம்மை யாரும் கண்டுக்கொள்வதில்லை என்றும் தெரிவித்தார்.

இதேபோல வெளிமடை டயரபா மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த மாதம் இரவு பொழுதொன்றில்  நிலவிய காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெளிமடை    பாரிய மரம் ஒன்று தோட்ட குடியிருப்பில் சரிந்து  விழுந்ததில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்த பெண்ணொருவர் காயங்களுடன் வெளிமடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த குடியிருப்பில் முறிந்து விழுந்த மரம் தொடர்பில் பல மாத காலமாக தோட்ட நிர்வாகத்திடம் குடியிருப்புக்கு முறிந்து விழும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்ததுடன் வெட்டுவதற்காக அனுமதி கேட்ட போதிலும் தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை  என பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

தற்போது நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. நீர் தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த 48 மணித்தியாளங்களில் நுவரெலியாவில் கடும் மழை காரணமாக பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி, பவ்வாகம, சேலம் பிரிட்ஜ், ஓவிட்ட, அயன்போட் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், பிரதான வீதிகளும், குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.  

மழை காரணமாக இப்பகுதியில் 100ற்கும் மேற்பட்ட வீடுகள்  வெள்ள  நீரினால் நிரம்பியதுடன், மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நாவலப்பிட்டி பகுதியில் உள்ள மகாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பவ்வாகம ஆற்றில் நீரின் மட்டம் அதிகரித்ததால் வெள்ள நீர் இவ்வாறு பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். 

வீடு முழுவதும் வெள்ள நீராக காணப்படுவதாகவும், தமது விலைமதிப்பில்லாத பொருட்கள் வெள்ள நீரில் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட 100ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 350ற்கும் மேற்பட்டோர் உறவினர்கள் வீடுகளிலும், அயலவர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இதேபோல கினிகத்தேனை, பொல்பிட்டிய, ஹிட்டிகேகம, பொகரவெவில பிரதேசத்திலிருந்து பாயும் களனி கங்கையின் கிளை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அறுபது வயது பாட்டியும் அவரது ஐந்து வயது  பேத்தியும் சிக்குண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்பள்ளிக்குச் சென்ற பேத்தியுடன் வீடு திரும்பிய போது இருவரும் கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டனர்.  

இதேவேளை, கினிகத்தேனை விதுலிபுர டெப்லோ கிராமபகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டு வீட்டில் இருந்த ஆறு பேரில் 38 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மேலும் வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.. கொட்டகலை- கொமர்ஷல் மற்றும் சாமஸ் பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த பகுதியிலுள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தமை காரணமாக, சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் குறித்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொகவந்தலாவை   பிரசேத்தில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையால், பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கினிகத்தேனை – பிட்டவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்தமையால், அட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

அத்துடன், அட்டன்- கொழும்பு பிரதான வீதியின் அட்டன் தொடக்கம் கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.

இதேவேளை, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் எற்பட்டுள்ளன. தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஆயினும் அதிஷ்டவசமாக உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

 மலையகத்தில் இவ்வாறு மழை பெய்யும் போதெல்லாம் மண்சரிவுகள் ஏற்படுவதும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குவதும் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றது.

 இயற்கை அனர்த்தம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளபோதிலும் குடியிருப்புகளுக்குள் மழை நீர் உட்புகுவதனை தடுக்க முடியும் என்பது நம்மால் முடிந்ததே. ஆரம்ப காலத்தில் அதாவது வெள்ளைகாரர்களின் ஆட்சியில் மிக சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் பெருந்தோட்டப்பகுதிகளில் இருந்தன.  

குடியிருப்புகள் அமைக்கும் போது அதனுடன் இணைந்து சுகாதாரமான முறையில் வடிகாண் அமைப்புகள் செய்யப்பட்டிருந்தன. லயம் அமைப்பு இருந்தாலும் அதனை சூழ நீர் போவதற்கான காண்கள் இருந்தன. வீட்டின் முன்பு லைசன் கல் என கூறப்படும் கருங்கற்கள் பதியப்பட்டிருக்கும். இதனால் நீர் தேங்கி நிற்காது நேராக வீட்டின் முன்புள்ள காண்களுக்கு சென்று விடும். 

இந்த காண்கள் ஊரின் வெளியில் வரை நீண்டு சென்று ஆறு போன்ற  நீர் நிலைகளில் கலந்து விடும்.  குடியிருப்புகளை சூழ உள்ள பகுதிகள் வடிகாண்கள். தினமும் துப்புறவு செய்படும்.  

அதாவது தினமும் குறித்த தோட்டம் முழுவதனையும் துப்புறவு செய்வதற்கு துப்புறவு தொழிலாளிகள் நியமிக்கப்பட்டனர். 

இதனால் குப்பைகள் எங்கும் தேங்கவில்லை. தோட்டங்கள் சுகாதாரமான முறையில் இருந்தன. இதனால் எத்தனை பெரிய மழை பெய்தாலும் வெள்ள அபாயங்கள் குறைவாக இருந்தன. 

ஆனால், இன்று அந்த நிலைமை இல்லை. நமக்கு வேண்டியது போல வீடுகளை சிலர் அமைத்துக்கொள்கின்றனர். இதன்போது வடிகாண்கள் அமைப்பதில்லை. ஏற்கனவே இருந்த வடிகாண்களையும் மூடி விடுகின்றறோம். 

அத்தோடு குடியிருப்புகள் கட்டப்படும் இடங்கள் பொருத்தமான இடமா   என்பதனை யாரும் பார்பதில்லை. அதுபோல நீர் வடிந்தோடும் வடிகால்கள் அமைப்பு சரியாக  அமைக்கப்படுவதில்லை. 

இதனால் மழை காலங்களில் நீர் பெருக்கெடுத்து எளிதாக  வீடுகளுக்குள் வந்துவிடுகிறது. உதாரணமாக தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ மூன்றாம் இலக்கம் குடியிருப்பை குறிப்பிடலாம். இதனை  சூழ சிறந்த வடிகால் அமைப்புகள் வெள்ளைகாரா்களின் காலத்தில் கட்டப்பட்டிருந்தது. 

ஆனால் இன்று அந்த குடியிருப்புகளை சூழ உள்ள நிலங்களை வெளியாட்களுக்கு விற்பனை செய்துவிட்டமையால். அவர்கள்  அந்த ஊரின்  வடிகாண்களை மூடி வீடுகளை அமைத்துகடகொண்டனர். 

இதனால் மழைகாலங்களில் வெள்ள  நீர்  தோட்ட குடியிருப்புகளுக்குள் புகுந்து செல்வதனை காண்கின்றோம். ஆறுபோல பெருக்கெடுத்து வீதிகளில் நீர் ஓடுவதனை காண்கின்றோம்.

மேலும், அதிக வெள்ளப்பெருக்கு,   மண்சரிவு அபாயங்கள் உள்ள இடத்தில் குடியிருப்புகளை தொடர்ந்து ஏற்படுத்துவதும் பாதிப்பையே ஏற்படுத்தும். அதிகரித்த சனத்தொகைக்கு ஏற்ப சுகாதாரமான முறையில் குடியிருப்புகள் பெருந்தோட்டங்களில் கட்டப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியே. இந்திய அரசு மற்றும் பல உதவி திட்டங்கள் மூலம் மக்களுக்கு கட்டப்படுகின்ற குடியிருப்புகளில் கூட குறைப்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

மேலும் 150 வருட பழமையான  இரட்டை குடியிருப்புகளில் இன்னும்  மக்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். 

இதன் போது மழை காலங்களில் சில குடியிருப்புகள் இடிந்து விழுகின்றன. அதனை விட குடியிருப்பை ஒட்டியிருக்கின்ற பெரிய மரங்கள் அகற்றப்படாமல் அச்சம் தருபவைகளாகவே உள்ளன. இவை  சரிந்து விழுந்தும் விபத்துக்கள் நேரிடுகின்றன. உயிரிழப்புகளும் இதன் போது ஏற்படுகின்றன.

அண்மையில் நுவரெலியா வீதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. குறித்த மரம் நூற்றிஐம்பது வருடங்கள் பழமையானது என்று கூறப்பட்டது .

இவ்வாறு மரங்கள் சரிந்து விழும் போது உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.  இந்தஆபத்தான மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது மிக குறைவாகவே உள்ளன. இதனால்தான் ஆபத்தான மரங்கள் குடியிருப்புகளின் மீது விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன.  

பாரிய விபத்துகள் அதனால் அபாயகரமான சேதங்கள் ஏற்படும் போது அறிக்கை விடும். அரசியல் வாதிகள். குறித்த இடங்களை சென்று பார்வையிட்டு மக்களுக்கு அனுதாபத்தினை தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் செய்திகள் ஊடகங்களில் வருவதோடு அவர்களது கடமையும் முடிந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆயினும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரம் மாற்றம் அடைந்ததாக இல்லை. 

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவதும் அல்லது மீண்டும் பழைய வீடுகளை புனரமைத்து தங்குவதுமாகவே உள்ளனர். இதனால் மீண்டும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகுகின்றனர். 

இதிலிருந்து மாற்றம் பெற்று புதிய உட்கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு வாழ்க்கை முறைமையை அமைத்து கொள்வது என்பது எட்டாத கனியாகவே உள்ளது.

இந்த நிலை மலையகத்தில் மட்டும் அல்ல, கொழும்பில் கூட உள்ளது. அங்கு மண்சரிவு அபாயம் இல்லை என்ற போதிலும் கிராண்பாஸ் ,நவகம்புர ,வெள்ளம்பிட்டி உள்ளிட்ட பல ஊர்கள் மழை காலங்களில் கழிவு நீரில் மூழ்குவதனைதான் பார்க்கின்றோம். 

தலைநகர் என்ற போதிலும் உதாரணமாக நவகம்புரவை எடுத்துக்கொண்டால் சேரிப்புர குடியிருப்புகளை ஒட்டி கழிவு நீர் நிறைந்த நீர் தடங்கள் காணப்படுகின்றன. 

மழைகாலங்களில் இந்த நீர் தொட்டிகள் நிறைந்து  குடியிருப்புக்குள் புகுவதனால் மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அது மட்டும் அல்ல சுகாதார சீர் கேடுகளும் ஏற்படுகின்றன. 

ஆனாலும் சகித்துக்கொண்டு அங்கேயேதான் பல தசாப்தங்களாக வாழ்கின்றனர். மலையகமாக இருந்தாலும் நகர்புரமாக இருந்தாலும் மக்களினது  வாக்குகளின் மீது அக்கறை கொண்டவர்கள் அவர்களுக்கான சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்துக்கொடுக்க வேண்டும். 

இயற்கை சீற்றங்களை தவிர்க்க முடியாது என்ற போதிலும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான  வழிமுறைகள் உள்ளன. அதற்கேற்றால் போல குடியிருப்புகள் அமைக்கப்படுமாயின் காலங்காலமாக வெள்ளத்திலும் மழையிலும் சிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே. ஆரும் ரணிலும்

2023-09-29 11:36:36
news-image

இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...

2023-09-26 12:00:59
news-image

ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...

2023-09-24 16:59:36
news-image

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...

2023-09-22 15:57:14
news-image

முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்

2023-09-21 15:27:10
news-image

பிரதமரை சந்தித்து அரசியல் வியூகத்தை கூறிய...

2023-09-17 17:16:23
news-image

திரிபோலி பிளட்டூன் (Tripoli platoon) இரகசிய...

2023-09-15 16:36:29
news-image

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களும் விசாரணைகளும்

2023-09-13 16:48:46
news-image

விடாமுயற்சியுடன் ஆபிரிக்காவில் போட்டியிடும் இந்தியா -...

2023-09-13 15:47:03
news-image

செனல் 4 வெளிப்படுத்தல் விசாரிக்கப்பட வேண்டும்...

2023-09-10 16:03:22
news-image

முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டும்...

2023-09-09 10:45:40
news-image

இந்தியாவை பதற்றத்தில் வைக்க சீனா முயல்கின்றதா?

2023-09-08 13:17:17