நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா

Published By: Digital Desk 5

08 Aug, 2022 | 09:15 AM
image

போராட்ட இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களை தனிப்பட்டமுறையில் இலக்குவைப்பதன் மூலம் அந்த இயக்கத்தை  ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற முயற்சிகள் முன்னெப்போதையும் விட நாட்டை துருவமயப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

போராட்டத்துக்கான அடிப்படைக் காரணிகளைக் கவனத்தில் எடுத்து கையாளுவதற்கு பதிலாக அரசாங்கம் போராட்ட இயக்கத்தின் முக்கியமான உறுப்பினர்களை வலுவற்ற -- ஐயுறவான குற்றச்சாட்டுக்களின் பேரில் அவசரகால சட்டத்தின் கீழ் இலக்குவைத்துக்கொண்டிருக்கிறது. இந்த அவசரகாலச் சட்ட சூழ்நிலையில் வழமையான சட்டமும் அதன் மூலம் கிடைக்கின்ற பாதுகாப்பு உத்தரவாதங்களும் இடைநிறுத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் பாராளுமன்ற இருப்புநிலை பலமானதாக தோன்றுகிறது, ஆனால் அரசாங்கத்துக்கான பொதுமக்களின் ஆதரவு மிகவும்  பலவீனமானதாக இருக்கிறது என்று நாடுகளின் கடன்செலுத்தும் அந்தஸ்தை ஆராயும் 'ஃபிற்ஸ் ரேட்டிங் ' ஏஜென்சி 28 ஜூலை 2022 தெரிவித்தது. அதனால், அரசாங்கம் போராட்டக்காரர்களை ஒடுக்குவதை விடுத்து அவர்களின் நியாயபூர்வமான குரலுக்கு செவிசாய்த்து அவர்களுடன் பயனுறுதியுடைய முறையில் பேச்சுவார்த்தையை நடத்தவேண்டியது முக்கியமானதாகும்.

திறந்த பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த கலாநிதி மாஹிம் மெண்டிஸ் அண்மையில் 'த ஐலண்ட் ' பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டியதைப் போன்று நாட்டில் வர்க்க மற்றும் சமூக அடிப்படைகளில் இடம்பெறுகின்ற துருவமயமாதல் போக்கு அரசியல் சமுதாயத்தின் உறுதிப்பாட்டுக்கு மிகவும் ஆபத்தானதாகும்.கலாநிதி மெண்டிஸின் கருத்தை நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த சுமார் 30 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சரியானது என்று நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.அவர்களை வார இறுதியில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கொந்தளிப்பான சூழல் நிலவுகின்ற குறிப்பிட்ட சில பகுதிகளில் அமைக்கப்பட்ட உள்ளூர் மட்ட மதங்களுக்கிடையிலான  குழுக்களைச் சேர்ந்த அவர்களுடனான கலந்துரையாடலின்போது முக்கியமான விடயம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதாவது பொருளாதார இடர்பாடுகள் உள்ளூர் மட்டத்தில் முரண்நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கின்றன.ஊழலும்  தவறான நிருவாகமும் தோற்கடிக்கப்டுவதை உறுதிசெய்யக்கூடிய 'முறைமை மாற்றத்தை '  (System Change ) சாதிப்பதற்கான போராட்டம் அமைதி வழியிலானதாக பேணப்படவேண்டியது  முக்கியமானது என்ற இன்னொரு விடயமும் அங்கு  வலியுறுத்தப்பட்டது.

அந்த சந்திப்பு முடிவடைந்து நான் புறப்படத் தயாரானதும் பெண்மணியொருவர் என்னிடம் வந்து தனியாக பேசமுடியுமா என்று கேடடார். பிரச்சினையில் சிக்கிக்கொள்ள தான் விரும்பவில்லை என்று கூறிய அவர் வணபிதா ஜீவந்த பீரிஸை காப்பாற்ற எங்களால் ஏதாவது செய்யமுடியுமா என்று கேட்டார்.

வணபிதா பீரிஸ் இயங்குகின்ற இரத்தினபுரி மாவட்டத்தில் தொலஸ்வல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அந்த பெண்மணி தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.அது வறிய இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்கின்ற பகுதி.அவர்களின் வேதனங்கள் மிகவும் குறைவானவை.தற்போதைய பணவீக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர்கள் திணறுகிறார்கள்.

உணவுப்பொருட்களின் விலைகள் 100 சதவீதத்துக்கும் கூடுதலாக அதிகரித்துவிட்டன.நிலையான வருமானத்தைப் பெறுபவர்கள் குறிப்பாக தினம் ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக சம்பாதிக்க முடியாமல் வறுமைக்கோட்டின் கீழான வருமானத்தைப் பெறுபவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

வணபிதா பீரிஸை கைது செய்ய பொலிசார் வந்தனர்.ஆனால் அந்த மக்கள் அவர் தங்களுக்கு  வேண்டும் என்று விரும்புகிறார்கள்,ஏனென்றால் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டுவதற்கு வணபிதா உதவினார் என்று பெண்மணி கூறினார்.

வணபிதா ஜீவந்த பீரிஸ்  கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி  செயலகத்துக்கு  எதிரே முகாமிட்டிருந்த போராட்ட இயக்கத்தில்  நன்கு அறியப்பட்ட  முக்கியமான ஒரு பிரமுகர். அவருக்கு எதிராக பொலிசார் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

போராட்ட இயக்கத்தில்  அவரின் பங்கு தொடர்பில் விசாரணை அவர்கள் நடத்த விரும்புவதால் நாட்டை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு அவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

சிவில் சமூக உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், தொழில் வாண்மையாளர்கள் மற்றும் ஓய்வபெற்ற அரசாங்க அதிகாரிகள் என்று பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய 'சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (collective for Reforms) ஒரு உறுப்பினர் என்ற வகையில் நான் போராட்ட இயக்கம் மற்றும் அதன் இலக்குகள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தேன்.

அப்போது சந்தித்தவர்களில் வணபிதா பீரிஸும் ஒருவர்.அவரில் வன்முறைச் சுபாவத்தையோ அல்லது கர்வத்தையோ நாம் காணவில்லை.கிறிஸ்தவ மதக்கோட்பாட்டினால் கடைப்பிடிக்கப்படுகின்ற மக்களுக்கு சேவைசெய்யும் தலைமைத்துவ பண்பை (Servant --leadership ) உருவகப்படுத்தும் ஒருவராகவே அவர் காணப்பட்டார்.ஏனைய மதங்களிலும் கூட காணக்கூடியதாக இருக்கின்ற அந்த பண்பை அரசியல் தலைவர்கள் கடைப்பிடிப்பார்களாக இருந்தால் நாட்டை மாற்றியமைக்கமுடியும்.

 அதனால் வணபிதா பீரிஸ் கைதுசெய்யப்படக்கூடிய சாத்தியம் குறித்து கடுமையான கவலை வெளியிட்டு அவரின் சார்பில் 1640 கத்தோலிக்க மதகுருமார், கன்னியாஸ்திரிகள், குருநிலைப்படுத்தப்பட்ட சகோதரர்கள் மற்றும் சகோதரிகளும் இரத்தினபுரி பங்கின்(சப்ரகமுவ மாகாணம்) கத்தோலிக்க மதகுருவும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் மனுவொன்றில்  கைச்சாத்திட்டமை எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.

அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பில் கடுமையான கண்டனத்தொனியில் அந்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது ;

" அவசரகாலநிலைப் பிரகடனம் எதிர்க்கருத்து மீதான சகிப்புத்தன்மையின்மை பற்றி அச்சந்தரும் அரசியல் செய்தியொன்றை சொல்கிறது. கொடூரமான அவசரகால ஒழுங்கு விதிகள் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்,ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் இயக்கம் நடத்துவதற்கான சுதந்திரம் ஆகியவற்றை மீறுவதாகவும் அடாத்தான கைதுகள், நீண்ட தடுப்புக்காவல்களுக்கு வழிவகுக்கக்கூடியவையாகவும் அமைகின்றன.

அவசரகால நிலையை பிரகடனம் செய்யும் ஜனாதிபதியின் தீர்மானத்தை பாராளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.இது நிறைவேற்று அதிகார பீடமும் சட்டவாக்கசபையும் ஒடுக்குமுைறைப் பாதையில் செல்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது."

தற்போதைய அரசாங்கம்  மூன்று வருடங்களுக்கு  முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெறப்பட்ட மக்கள் ஆணையின் அடிப்படையில் சட்டரீதியாக அமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கின்ற போதிலும் கூட அந்த ஆணையை இழந்த நியாயப்பாடற்ற அரசாங்கமாகவே பலராலும் நோக்கப்படுகிறது.

இது சட்டரீதியாக பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியைக் கொண்ட அரசாங்கம்.ஆனால் பாராளுமன்றம் ஆணையை இழந்ததாகவே காணப்படுகிறது.இத்தகைய சூழ்நிலையில் போராட்ட இயக்கத்தை கையாளுவதில் அடாவடிப்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகும்.

சட்டரீதியாக அமைக்கப்பட்டதாக இருந்தாலும், நியாயப்பாடற்றதாக பலராலும் கருதப்படுகின்ற ஒரு அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைப் போக்கு நாட்டில் மேலும் உறுதிப்பாடின்ைமையை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக்கிறது.

அத்தகையதொரு நிலைவரத்தை நாடு தாங்காது.இலங்கை அரசியல் உறுதிப்பாடு,வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவற்றை கொண்டதாகவும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம் ஒன்றைக் கொண்டதாகவும் இருந்தால் மாத்திரமே ஆதரவளிக்க முன்வரமுடியும் என்று உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஜப்பான் போன்ற நீண்டகால நட்புநாடுகளும் தெளிவாக அறிவித்துவிட்டன.

நழுவிச்செல்லும்  நம்பிக்கை

நாட்டில் மக்களிடையே பிளவுகள் அதிகரித்துச்செல்கின்ற விரக்திமிகுந்து இந்த சூழ்நிலையில், தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கையளுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விட சிறந்த ஒருவர் இல்லை என்ற ஒரு உணர்வு படித்த மற்றும் உயர்வர்க்கத்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

புதிய ஜனாதிபதி தனது ஆற்றலை நிரூபிப்பதற்கு   அவகாசம் வழங்குவதற்கு வணிக சமூகமும் வசதிபடைத்த பிரிவினரும் தயாராக இருக்கிறார்கள்.சமுதாயத்தின் இந்த பிரிவினர் போராட்ட இயக்கத்தின் முன்னரங்கத்துக்கு தீவிரவாதப் போக்குடை தலைமைத்துவம் வந்துவிட்டது என்று கருதி போராட்டத்தினால் ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகள் குறித்து அச்சமடைந்துள்ளனர்.

ஆனால், கடுமையான எரிபொருள் நெருக்கடியும் மோசமான பணவீக்கமும் போராட்ட இயக்கம் இடைவிடாது தொடருவதற்கான ஊக்கத்தைக் கொடுக்கின்றன. தற்போது காணப்படுவது போராட்ட இயக்கத்தில் ஒரு இடையமைதியே. சட்டம் ஒழுங்கு முற்றாக சீர்குலைந்துவிடும் என்று அஞ்சும் மேற்படி பிரிவினர் அரசாங்க உறுப்பினர்களின் 70 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

தற்சமயம் ஜனாதிபதி விக்கிரமசிங்கவே பிரதான பாத்திரம்.ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில் அவரது அனுபவமும் அறிவு முதிர்ச்சியும் உயர்வானவையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் பிரதமராக இருந்த வேளைகளில் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு ஒரு காரணத்தை கூறுவதென்றால் தனக்கு மேல் இருந்த ஜனாதிபதிகள் தனது முயற்சிகளுக்கு இடையூறாக  இருந்தார்கள் என்று கூறமுடியும்.அவர் பிரதமராக இருந்த காலகட்டங்களில் மக்கள் மீதான  அரசாங்கத்தின் ஒடுக்குமுறை அழுத்தம் குறைப்தபட்சமாக இருப்பதை உறுதிசெய்வதில் நாட்டம்  காட்டினார்.

நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலை புலிகளுடன் போர்நிறுத்தத்தைச் செய்து சமாதான முயற்சிகளை முன்னெடுத்த கட்டத்திலும் போரின் முடிவுக்கப் பின்னரான நல்லாட்சி காலகட்டத்திலும் சரி விக்கிரமசிங்க ஒரு மென்மையான அணுகுமுறையுடனேயே ஆட்சி செய்தார்.

அதனால்  மிதவாதப் போக்குடையதும் கருத்தொருமிப்பின் அடிப்படையிலானதுமான அரசியலில் நம்பிக்கைகொண்ட இன,மத சிறுபான்மையினங்களினதும் சிவில் சமூகத்தினதும் நம்பிக்கையை அவரால் பெறக்கூடியதாக இருந்தது.

விக்கிரமசிங்கவிலும் அவரால் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பங்களிப்பிலும் நம்பிக்கை கொண்டவர்கள் அவரை இலங்கை ஒருபோதும் கொண்டிராத சிறந்த ஜனாதிபதியாக விளங்கியிருப்பார் என்று  கூறினார்கள்.இனவெறியும் போலி வாக்குறுதிகளும் முன்னரங்கத்தை ஆக்கிரமித்திருக்கின்ற இலங்கை ஜனநாயகத்தை விடவும் மேற்குலக ஜனநாயக நாடொன்றுக்கே அவர் கூடுதலானளவுக்கு பொருத்தமுடையவர் என்றும் அவரகள் கூறுவார்கள்."முறைமை மாற்றத்துக்கான " வெகுஜனக் கோரிக்கைக்கு வழிவகுத்த சுயநல சக்திகளின் கைதியாக  விக்கிரமசிங்க இருக்கிறார் என்பதை அவர்கள் நம்பத்தயாராக இல்லை.

தாங்கள் நம்புகின்ற விக்கிரமசிங்க தற்போதைய ஊழல், தவறான நிருவாகம் மற்றும் அடாடவடித்தனம் ஆகியவற்றை வெற்றிகொண்டு வெளிக்கிளம்புவார் என்று இன,மத சிறுபான்மை இனத்தவர்களும் பொதுநலனை மையமாகக்கொண்ட அரசியலில் நம்பிக்கையுடைய பெரும்பான்மையினத்தவர்கள் மத்தியில் உள்ள பிரிவினரும் இன்றும் கூட நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.அவ்வாறு நிகழவேண்டும் என்பது இன்றியமையாததாகும்.அல்லாவிட்டால், அரசியல் உறுதிப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பற்றிய எதிர்பார்ப்புகள் எல்லாம் நழுவிப்போய்விடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right