12 ஆண்டு சேவைக்காலத்தை நிறைவு செய்த ஓய்வுபெற்ற படையினருக்கு வழங்கப்படும் சேவை ஓய்வூதியத்தை 12 ஆண்டுகளை நிறைவு செய்யாது சுயவிருப்பின் பேரில் இழப்பீடு பெற்று ஓய்வுபெற்ற படையினருக்கும் வழங்குவதற்கு ஜனாதிபதி பணிப்பின்பேரில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இக் கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற படையினரின் பிரதிநிதிகளுடன் இன்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களால் இத்தீர்மானம் எழுத்து மூலம் வழங்கப்பட்டது.

12 ஆண்டு சேவைக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற படையினருக்கும், 12 ஆண்டுகளை நிறைவு செய்யாது சுயவிருப்பின் பேரில் இழப்பீடு பெற்று ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற படையினருக்கும் ஏற்கனவே அடிப்படைச் சம்பளமும் இயலாமைக்கான ஓய்வூதியமும் அரசினால் வழங்கப்படுகிறது.

12 ஆண்டு சேவைக்காலத்தை நிறைவு செய்து ஓய்வுபெற்ற படையினருக்கு கிடைக்கும் சேவை ஓய்வூதியம் மட்டும் 12 ஆண்டுகளை நிறைவு செய்யாது சுயவிருப்பின் பேரில் இழப்பீடு பெற்று ஓய்வுபெற்ற படையினருக்கு இதுவரை கிடைக்கவில்லை. அது தொடர்பில் இதுவரையிருந்த எந்தவொரு அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. 

இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி ஏற்கனவே சேவை ஓய்வூதியம் வழங்குவற்காக விசேட அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். அதற்கான அங்கீகாரம் கிடைத்த பின்னர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து இந்த சேவை ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. அரசுக்கு மேலதிக செலவுச்சுமை ஏற்பட்டாலும் ஜனாதிபதியினால் இந்த சேவை ஓய்வூதியத்தையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆயுதப்படைகளின் சட்டத்துக்கமைய அதிகாரிகள் தரத்திலுள்ளோர் 10 ஆண்டுகளும் ஏனைய பதவிநிலைகளிலுள்ளவர்கள் 12 ஆண்டுகளும் சேவைக்காலத்தை நிறைவு செய்திருந்தால் மட்டுமே அங்கவீனமுற்ற படைவீரருக்கான சேவை ஓய்வூதியம் உரித்தாகும். 

இது வேறெந்த அரச அலுவலருக்கும் கிடைக்காத சிறப்புரிமை என்பதுடன் அங்கவீனமுற்ற படையினருக்கும் உரித்தாகும் இழப்பீட்டுத் தொகையையும் இந்த படையினர் ஏற்கனவே பெற்றுவருகின்றனர். அத்துடன் இந்த அனைத்து அலுவலர்களும் சுயவிருப்பின் இழப்பீட்டைப் பெற்று 2008 ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றிருந்தாலும் கடந்த 8 வருடகாலமாக இக் கோரிக்கை தொடர்பில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இறங்கவில்லை.

இந்த சேவை ஓய்வூதியத்தை 12 ஆண்டுகளுக்கு குறைந்த காலம் சேவையிலீடுபட்ட அங்கவீனமுற்ற படையினருக்கு வழங்குதல் ஆயுதப்படைகள் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை பிரமாணக் குறிப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதாக இருந்தபோதிலும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அந்த அனைத்து ஒழுங்குவிதிகளையும் திருத்தம்செய்து சேவை ஓய்வூதியத்தை இந்த படையினருக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இதுவரைகாலமும் 55 வயதின் பின்னர் அங்கவீனமுற்ற படையினருக்கு இயலாமைக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை. ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அனைத்து அங்கவீனமுற்ற படையினருக்கும் ஓய்வுபெற்ற பின்னரும் வாழ்நாள் முழுவதும் தமது அடிப்படைச் சம்பளம் மற்றும் இயலாமைக்கான ஓய்வூதியத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.