(எம்.மனோசித்ரா)
அதிகார பேராசையால் தமது கொள்கைகளைக் காட்டிக் கொடுக்கும் மனிதர்களாலேயே எமது நாடு இன்று இவ்வாறு அழிவடைந்து கொண்டிருக்கிறது. பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட குண்டுகள் பாதுகாப்பு தரப்பினராலேயே அங்கு வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே அந்த சம்பவம் இன்று முற்றாக மூடி மறைக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அந்த அப்போதைய அரசாங்கத்தில் அதிகாரத்திலிருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்று தெரிவித்த பேராயர் , இன்று இந்நாட்டில் அதிகாரம் மிக்கவர்களின் முறையற்ற சட்ட மாத்திரமே நடைமுறையிலிருப்பதாகவும் , அதனால் சர்வதேசத்தின் மத்தியில் வெட்கித் தலைகுணிய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முகத்துவாரம் புனித ஜாகொப் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இடம்பெற்ற விசேட ஆராதனையின் போது உரையாற்றும் போதே பேராயர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
அதிகார பேராசையால் தத்தமது கொள்கைகளைக் காட்டிக் கொடுப்பவர்கள் உள்ளமையினாலேயே நாடு இன்று இந்த நிலைமையிலுள்ளது. மக்கள் துன்பப்படுகின்றமை எமது முட்டாள் தனத்தினாலாகும் என்று எண்ணத் தோன்றுகிறது. எந்தவொரு கொள்கையும் அற்ற , சட்டமும் அற்ற சமூகமொன்று இன்று எம் நாட்டில் உருவாகியிருக்கிறது.
கடந்த ஜனவரி 11 ஆம் திகதி பொரளை சகல பரிசுத்தவான்கள் தேவாலயத்தில் எவரேனுமொருவரால் குண்டு வைக்கப்பட்டது. இதன் போது குறித்த தேவாலய ஊழியர் ஒருவர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்கும் அதிக காலம் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த குண்டினை வைத்தது அவர்கள் அல்ல. பாதுகாப்பு துறையினரே அதனை செய்தனர்.
இது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை. குண்டை கண்டு பிடித்தவர்களை ஒரு மாத காலம் தடுத்து வைத்திருந்து , உரிய சாட்சிகள் இல்லையெனக் கூறி பின்னர் விடுதலை செய்தனர். அவர்களை தாக்கி , பலவந்தமாக கையெழுத்து பெற்றனர். ஆனால் இதுவரையில் அவர்களுக்கான நீதி வழங்கப்படவில்லை.
அப்போதைய அரசாங்கத்திலிருந்த பலம் மிக்கவர்களே அந்த குண்டை வைத்தனர். அவர்கள் தொடர்பில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அந்த விவகாரத்தை முற்றாக மூடி மறைத்து விட்டனர்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது வரையில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்த பலம் பொறுந்தியவர்களின் அதிகாரம் அதுவேயாகும்.
நாட்டில் நீதி என்ற ஒன்று இல்லை என்பதால் நாம் சர்வதேசத்தின் மத்தியில் வெட்கித் தலைகுணிய வேண்டியுள்ளது. இந்த நாட்டில் சட்டத்திற்கு இடமில்லை. மாறாக அதிகாரம் மிக்கவர்களின் முறையற்ற சட்டமே நடைமுறையிலுள்ளது.
நாம் இது தொடர்பில் சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்குமாறு பல சந்தர்ப்பங்களில் கோரியுள்ள போதிலும் , குற்றவாளிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடருமாறு வலியுறுத்துகின்ற போதிலும் , எமது நாட்டு சட்டம் அது எதனையும் செய்யவில்லை.
இன்றுவரை அவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பொலிஸார் இன்றும் அவரவர் பதவியை வகித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இன்மையால் எம்மால் நாட்டுக்காக பிரார்த்தனை மாத்திரமே செய்ய முடியும். கொள்கை ரீதியிலான வாழ்க்கையை வாழ வேண்டும். புதிய ஆரம்பத்திற்காக மாற்று தீர்மானங்களை எடுப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM