(ஆர்.யசி)

மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்காது. மத்தியவங்கி விவகாரத்தில் ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை தடுக்க பிரதமர் முயற்சிக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இப்போது நடந்ததாக கூறப்படும் ஊழல் மோசடிகளை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது ஆரம்பத்தில் இருந்து விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

மத்தியவங்கி விவகாரத்தில் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹிந்திரன் விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் மந்தகதியில் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

மத்திய வங்கி பிணை முறிகள் ஊழல் விவகாரத்தில் உண்மைகளை கண்டறியப்பட வேண்டும். யாரும் யாரையும் காப்பாற்றி நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகளை தடுக்க முடியாது. மத்திய வங்கி விவகாரத்தில் இப்போது நடந்ததாக கூறப்படும் விடயங்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது முன்னைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும். அதற்கான குழுக்களை  நியமித்து கடந்த பத்து ஆண்டுகளில் எவ்வளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டது  என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.