புதிய ஜனாதிபதியிடம் மலையகம் எதிர்ப்பார்ப்பது என்ன ?

By Vishnu

31 Jul, 2022 | 07:24 PM
image

இடைக்கால ஜனாதிபதியாக பாராளுமன்ற பெரும்பான்மையோடு தெரிவு செய்யப்பட்டிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு மலையக சமூகம் மற்றும் பெருந்தோட்டப்பகுதி மக்களின் பிரச்சினைகளைப்பற்றி புதிதாக எதுவும் எடுத்துரைக்க வேண்டிய அவசியமில்லையென்பது முக்கிய விடயம்.

ஏனென்றால் இந்த பொறுப்புக்கு டலஸ் அழகப்பெருமவோ அல்லது சஜித் பிரேமதாசவோ தெரிவு செய்யப்பட்டிருந்தால் , இந்த மக்களின் பிரச்சினைகளை திட்டமாக தயாரித்து அறிக்கையாக சமர்ப்பித்து அதை குறித்த தரப்பினர் பார்த்து முடிவெடுக்கும் முன்பதாக ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுற்றிரும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் நல்லாட்சி காலத்தின் பிரதமராகவும் ரணில் விக்ரமசிங்க மலையக பெருந்தோட்ட சமூகத்துக்கு காத்திரமான பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

தொழிலாளர்களின் பாரம்பரிய குடியிருப்புகளை அகற்றி தனி வீட்டுத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த ஒருவராக அவர் விளங்குகிறார்.

ஆனாலும் அத்திட்டம் பூர்த்தியாவதற்கு முன்பதாகவே  நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள், சிலரின் தனிப்பட்ட   துரோகத்தனங்களால் நல்லாட்சியின் காலம் இடையில் முடிவுக்கு வந்தது.    

நல்லாட்சி காலத்தில் மலையக பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில்  வீடமைப்பு மாத்திரமே அடுத்து வந்த ஆட்சி காலத்தில் ஓரளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. புதிய திட்டங்களுக்கான  அறிவிப்புகள் மாத்திரமே வெளிவந்திருந்தன.

இரண்டரை வருடங்களில் புதிய ஆட்சியும் முடிவுக்கு வந்து விட்டது. இப்போது பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் அறிவிப்புகளைப் பற்றி பேச முடியாது.

ஆனால் அந்த கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஜனாதிபதியாகியிருக்கும் ரணில் விக்ரமசிங்க அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்பது குறித்து உரையாட வேண்டியுள்ளது.

புதிய ஜனாதிபதியின் கீழ் இரண்டு விடயங்களில் மலையகம் தொடர்பான அபிவிருத்தியை நோக்க வேண்டியுள்ளது.  முதலாவது மலையக சமூகத்துக்கு ஒரு அமைச்சு கிடைக்குமா என்பது முக்கிய விடயம்.

நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ரணிலுக்கு ஆதரவை வழங்கியிருந்தது. ஆகவே அவர்கள் ஒரு அமைச்சுப்பதவியை எதிர்ப்பார்ப்பதில் தவறில்லை. 

அதே வேளை  தற்போதைய நாட்டு சூழ்நிலையில் மலையகப் பிரதேசங்களுக்கு எவ்வாறான அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும், அவ்வாறு அமைச்சு ஒன்று கிடைத்தாலும் கூட அதற்கான நிதி ஒதுக்கீடு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுகின்றது. 

எனினும் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சில அம்சங்களை அமுல்படுத்தும்படி  இ.தொ.கா உறுப்பினர்கள் கோரலாம். இதில்  மேலதிக பிரதேச சபைகள்  உள்ளிட்ட சில விடயங்களை கூறலாம்.

மேலும் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமைவதற்கான சாத்திய கூறுகள்  பற்றி பேசப்படுகின்றன.எனவே இதில் எதிர்த்தரப்பிலுள்ளவர்களும் உள்ளீர்க்கப்படுவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 

பொது ஜன பெரமுன அரசாங்கமானது பல ஊழல், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட அதே வேளை அது தொடர்பாக தமது உறுப்பினர்களின் செயற்பாடுகளையும் கண்டு கொள்ளாத தன்மை காணப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய குற்றப் பின்னணியுடைய பலரை தனது அமைச்சரவையில் இணைத்திருந்தார். அவர்கள் மீதுள்ள வழக்குகளிலிருந்து விடுவித்தார். உயர்நீதிமன்றம் உறுதி செய்த மரண தண்டனை கைதிகளை பொது மன்னிப்பில் விடுதலை செய்தார். 

கூடுதலாக ஓய்வு நிலை இராணுவ அதிகாரிகளை அமைச்சுக்களில் செயலாளர்களாக நியமித்திருந்தார். இப்போதும் கூட ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானாலும் அவருக்கு ஆதரவு தந்த பிரிவினராக பொதுஜன பெரமுன உறுப்பினர்களே இருக்கின்றனர். பழைய உறுப்பினர்களே அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனவே மலையகப் பிரதிநிதிகளுக்கும் அமைச்சுப்பதவி ஒன்று கிடைப்பதில் சந்தேகங்களில்லை. 

ஆனால் கிடைக்கப்போகும் அமைச்சின் மூலம் மலையக மக்களுக்கு என்ன நன்மை உள்ளது என்ற கேள்வி எழுகின்றது. ஏனென்றால் இதே உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் தான் கடந்த காலங்களில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாட்சம்பளம், குடியிருப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் எந்த அதிசயங்களும் இடம்பெற்று விடவில்லை. 

இது குறித்த தெளிவுகள் மலையக பிரதிநிதிகளுக்கும் இருக்க வேண்டிய அதே வேளை மலையக பெருந்தோட்ட சமூகத்தினருக்கும் இருத்தல் அவசியம்.

அமைச்சு ஒன்று கிடைத்தால் மீண்டும் புதிய வீட்டுத்திட்டம்,மலையக பல்கலைக்கழகம், விமான நிலையம் என கனவு கண்டுகொண்டிருக்காது இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிசெய்ய வேண்டும்.

சம்பள விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய பேச்சை ஆரம்பிக்க வேண்டும். நிவாரணங்களைப் பெற்றுத்தருவதற்குரிய வழியை ஆராய வேண்டும். தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மிக முக்கியமாக பிரதிநிதிகள் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களுடன் உரையாட வேண்டும். கடந்த ஒரு வருட காலமாக இவை இடம்பெறவில்லை. அமைச்சுப் பதவிகள் கிடைத்தால் மாத்திரமே தோட்டங்களுக்குச் சென்று பட்டாசு கொளுத்தி கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற மனநிலையிலிருந்து இந்த பிரதிநிதிகள் விடுபட வேண்டும். மலையக மக்கள் ஜனாதிபதியிடமிருந்து மாத்திரமல்ல….. தமது பிரதிநிதிகளிடமிருந்தும் எதிர்ப்பார்ப்பதும் இவற்றை தான் என்பதை இங்கு அழுத்தி கூற வேண்டியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right