இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைமை கையால்வது தடுக்கப்பட எனவும் இழுவை படகு மீன்பிடி முறைமையை தமிழக மீனவர்கள் தடைசெய்ய வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளது. 

மீனவர்களை விடுவிப்பதில் இருநாட்டு அரசாங்கமும் தயாராக இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார்.  

சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்தல், மீனவர்களின் வாழ்வாதாரம், மற்றும் மீனவர் விவகாரத்தில் இலங்கை இந்திய இரு நாட்டு கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து ஆராயும் வகையில் டெல்லியில் இரு நாட்டு வெளியுறவு, மீன்வளத்துறை  அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை டில்லி  ஜவாஹர்லால் நேரு பவனில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் இந்திய அரசாங்கம் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மீன்வளத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், தமிழக பிரதிநிதியாக பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இலங்கை அரசாங்கம் சார்பில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் மஹிந்த அமரவீர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் இருநாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.