(எம்.எம்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறியில் பிரதமருக்கு பங்கு கிடைத்துள்ளது. முடியுமானால் எங்களுக்கு எதிராக வழக்குதொடரட்டும். அத்துடன் பிரதமர் பதவியில் இருக்கும் வரை கோப் அறிக்கை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெறாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிஸ மக்கள் முன்னணி இன்று  கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மத்திய வங்கி பிணைமுறி காரணமாக உடனடியாக அரசாங்கத்து ஆயிரத்து 600 மில்லியன் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. இதில் வட்டி வீதங்கள் சேர்க்கப்படவில்லை. அதனை சேர்த்தால் இன்னும் நஷ்டம் அதிகரித்திருக்கும் . அது தொடர்பாக இன்னும் கணக்கு பார்க்கவில்லை. இவ்வளவு பாரிய நஷ்டத்தை மக்களிடம்  அறவிடப்படும் வரி மூலமே அரசாங்கம் அடைக்க  முற்படுகின்றது.

அத்துடன் மத்திய வங்கிக்கு இவ்வளவு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியமையை தெரிந்து கொண்டு அர்ஜுன் மஹேந்திரனை பாதுகாக்கும் நடவடிக்கையையே பிரதமர் மேற்கொண்டார். அதாவது அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பாக விசாரிப்பதற்கு பிரதமரால் நியமிக்கப்பட் 3  பேர் அடங்கிய குழு அவர் குற்றமற்றவர் என பாராளுமன்த்தில்அறிக்கை  சமர்ப்பித்திருந்தது. ஆனால் கோப் அறிக்கை அர்ஜுன் மஹேந்திரன் பிரதான சந்தேக நபர் என தெரிவித்துள்ளது. அப்படியாயின் பிரதமரின் நிலைப்பாடு என்ன? 

இவ்வாறான நிலையில் அர்ஜூன் மஹேந்திரனுக்கு எதிராக விசாரணை நடத்தும்போது அவரை பிரதமர் அலுவலகத்தில் வைத்துக்கொள்ள முடியாது. அத்துடன் பிரதமர் அந்த பதவியில் இருக்கும்போது அவரது நண்பருக்கு எதிராக நியாயமான விசாரணை மேற்கொள்ள முடியாது அதனால்  ஜனாதிபதி பிரதமரை அந்த பதவியில் இருந்து  நீக்கி சுயாதீன் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.. இல்லாவிட்டால் ஜனாதிபதியும் இதற்கு பொறுப்பு கூறவேண்டிவரும். என்றார்.