காலிமுகத்திடல் போராட்டத்தின் எதிர்காலம்?  ‘ஆயத்தமாகிறது அரகலய-4.0' 

30 Jul, 2022 | 09:50 AM
image

-ஆர்.ராம்-

மே-09 பிரதமராக இருந்த மஹிந்த பதவி விலகல், ஜுன்-09இல் முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகல், ஜுலை-09இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகி நாட்டைவிட்டு வெளியேறி பின்னர் பதவி விலகல், ஆகிய இந்த மூன்று நிகழ்வுகளாலும் காலிமுகத்திடல் 'கோட்டா கோ ஹோம்' போராட்டம் வெற்றியில் திளைத்துக் கொண்டிருந்தது.அதுமட்டுமன்றி, மக்கள் புரட்சியால் ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சாம்ராஜ்ஜமே சரிக்கப்பட்டமை, உலகத்திற்கு முன்னுதாரணமாகவும், இலங்கைத்தீவின் வரலாற்று நிகழ்வாகவும் பதிவாகியது. அத்துடன் ஆசியப் பிராந்தியத்தில் வெகுஜனப் போராட்டங்கள் மீதான புதிய பார்வையும் தோற்றம்பெற்றது.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக்கொள்ளவும், 'கோட்டா கோ ஹோம்' போராட்டம் 'ரணில் கோ ஹோம்' போராட்டமாக கூர்ப்படைந்து, அவரையும் வீட்டுக்கு அனுப்பும் வரையில் தொடரும் என்று போராட்டக்காரர்கள் உத்தியோக பூர்வமாக அறிவித்தனர்.

ஆனால், கடந்த 22ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் ஜனாதிபதி செயலகத்தினை ஆக்கிரமித்திருந்த போராட்டக்காரர்கள் மற்றும் இதரநபர்களை அங்கிருந்து வெளியேற்றி செயலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் முப்படைகள் மற்றும் பொலிஸாரினால் கூட்டுநடவடிக்கையொன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது

துப்பாக்கி ரவைகளுக்கும், கண்ணீர்ப்புகைக்குண்டுகளுக்கும் அஞ்சப்போவதில்லை என்று அறைகூவல் விடுத்திருந்த போராட்டக்காரர்கள் தங்கள் மீது திடீரென பிரயோகிக்கப்பட்ட 'படைப்பலத்துக்கு' முன்னால் நிலைகுலைந்து போயிருந்தனர்.

“எங்கள் கடமையைத்தான் நாங்கள் மேற்கொள்கின்றோம். எங்கள் மீது வன்முறைகளை பிரயோகிக்காதீர்கள் என்று படைகளிடத்தில் கூறினோம். ஆனால் அவர்கள் செவிமடுக்கவில்லை. அவர்கள் கண்மூடித்தனமாக தாக்கினார்கள். அவற்றை தொலைபேசியில் பதிவு செய்தவர்களையும் தாக்கினார்கள்”

-ஷபீர் மொஹமட்- செயற்பாட்டாளர் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்

ஏனென்றால், அன்றையதினம், போராட்டகளத்தில் இருந்தவர்கள் வழமைபோன்றே இளைஞர்களும், யுவதிகளும் தான். அவர்கள் படைகளின் மறுமுகத்தை அறியாதவர்கள். படைகளின் மூர்க்கத்தனம் பற்றிய முன்அனுபவங்கள் இல்லை.

முன்னதாகவே, போராட்டகளத்தினுள் தாராளமாக களமிறக்கப்பட்டிருந்த புலனாய்வாளர்களின் அறிக்கையை அடியொற்றி முன்னெடுக்கப்பட்ட இந்த படைப்பல பிரயோகத்தில் சிலர் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

இதன்பின்னர், வழமைபோன்றே பிரதிபலிப்புக்களாக கண்டனங்களும், ஆழ்ந்த கவலைகளும் கரிசனைகளும்;, உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்தன. அரசியல் கட்சிகள் சில தாக்குதல் சம்பவத்தை தமது 'சுயலாப' அரசியல் ஆதாயத்திற்கு தாராளமாக பயன்படுத்தின. இதனைவிடவும், சில தரப்புக்கள் நீதிமன்றத்தினை நாடியிருந்தன.

இதற்கு அப்பால், குறித்த தினத்தன்று, பிற்பகலிருந்து ஒன்றுகூடிய வரையறுக்கப்பட்ட போராட்டக்காரர்கள் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து போராட்டத்தினை நடத்தினார்கள். காலிமுகத்திடலில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வெளியேறப்போவதில்லை என்றும் அறைகூவல் விடுத்தனர்.

அதேநேரம், மறுதினம், கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஒன்றுகூடிய தொழிற்சங்கங்கள் கண்டனப் பேரணியை முன்னெடுத்து லோட்டர்ஸ் சுற்றுவட்டம் வரைசென்றுவிட்டு கலைந்து சென்றிருந்தன. படைப்பலப் பிரயோகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கண்டனப்போராட்டங்களின் போது, அதன் வீச்சு வலுவிழந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அவசரகாலச்சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தமை அதற்கு ஒருகாரணமாக இருப்பதோடு, கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் விரட்டியடிக்கப்பட்ட இலக்கு அடையப்பட்டுவிட்டது என்ற மனோநிலை தோற்றம்பெற்றிருந்தமை இரண்டாவது காரணமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் அடுத்துவந்த நாட்களில், காலிமுகத்திடல் போராட்டத்தின் அடுத்தகட்டம் சம்பந்தமாக, போராட்டக்காரர்களின் மத்தியில் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியிருந்தன. வியூகங்கள் வகுப்பது தொடர்பில் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வுகளுக்கு சமாந்தரமான காலத்தில், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை முழுமையாக அப்புறப்படுத்துவது தொடர்பான ஆய்வுகளும் அரச தலைமையினால் கரிசனை கொள்ளப்பட்டிருந்தது. அதன் முதன்வெளிப்பாடாக, 'காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்காக விஹாரமா தேவி பூங்கா முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இனி அங்கு சென்று போராடுங்கள்' என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் அதனைப் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் தொடர்ந்தும் காலிமுகத்திடலிலேயே போராட்டத்தினை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தனர். அதனை பகிரங்கமாகவும் அறிவித்தனர்.

“ஜனநாயக போராட்டங்களை எங்கு முன்னெடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை போராடுபவர்களுக்கு உள்ளதே தவிரவும், ஆட்;சியாளர்களிடத்தில் இல்லை. 'கோட்டா கோ கம' முதல் அரகலய-1.0, அரகலய -2.0 அரகலய -3.0ஆகிய மூன்று அத்தியாயங்களிலும் சாதித்துவிட்டது”

-விமுக்தி துஷாந்த- கறுப்புத்தொப்பி அமைப்பின் ஏற்பாட்டாளர்

“அரசாங்கம் ஒதுக்கியுள்ள விஹாரமாதேவி பூங்காவில்  போராட்டம் மேற்கொள்ள நாங்கள் தயாரில்லை. எங்களுக்கு தேவையான இடத்திலே நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். நாட்டு மக்களுக்காக மேற்கொள்ளப்படும் போராட்டத்தை தொடர்ந்து காலிமுகத்திடலில் முன்னெடுத்துச்செல்வோம்”

-வசந்த முதலிகே- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர்

இவ்வாறிருக்க, ஏற்கனவே ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை, பிரதமர் செயலகம் ஆகியவற்றை ஆக்கிரமித்தபோது, பொதுச்சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்தவர்கள், சூறையாடிவர்கள் என்று பல்வேறு நபர்கள் காணொளிகள் வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக பொலிஸார் வலைவீசியுள்ள நிலையில், காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரபல்யமானவர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். பின்னர் கைது நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

முதற்கட்டமாக,  அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர, ரங்கன லக்மால், மற்றும் அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் ஆகியோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த ஜூலை 13ஆம் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் பலாத்காரமாக பிரவேசித்து போராட்டக்காரர்களின் செய்தியை வழங்கிய தனிஸ் அலி டுபாய் செல்லவிருந்த விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, றுஹுனு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், 'அனித்தா' பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சுதந்திர ஊடக வியலாளர் அன்டனி வேரங்க புஷ்பிக, சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னர், பேருவளையைச் சேர்ந்த இஸ்மத் மௌலவி  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைவிட, அருட்தந்தை ஜீவந்த பீரிஸை நோக்கி தேடுத்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இரத்தினபுரி தேவாலயம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இணைந்த சுகாதார ஊழியர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் தம்பிடியே சுகதனந்த தேரர், லஹிரு வீரசேகர ஆகியோருக்கு கோட்டை நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும், விவரங்கள் வெளிவராத நிலையில் போராட்டத்தின் பிரதான வகிபாகத்தினைக் கொண்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், அவர்களின் விபரங்கள் வெளியாகவில்லை. இந்தநிலையில் போராட்டக்குழுவினர் கைது செய்யப்பட்ட, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள சகபாடிகள் குறித்த தரவுகளை திரட்டுவதற்கு ஆரம்பித்துள்ளனர்.

புதிய ஆட்சியாளர்களினால் காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது முத்திரைகுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நீதி அமைச்சர் கலாநிதி.விஜயதாச, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த போன்ற முற்போக்கு அரசியல்வாதிகள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கடுமையான விமர்சனத்தினை காறிஉழிந்துள்ளார்கள்.

அவர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை ‘தென்னிலங்கை பயங்கரவாதம்’ என்று சித்தரிக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்துள்ளன. கடந்தகாலத்தில் ஜே.வி.பி.யின் கோரத்திற்கு முகங்கொடுத்த தென்னிலங்கை மக்களை மீண்டும் கிலிகொள்ளச் செய்யுமளவிற்கு அவர்களின் வெளிப்பாடுகள் உள்ளன.

அவ்வாறான நிலையில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த போன்றவர்கள் போராட்டக்காரர்களை எவ்வளவு மோசமாக சாடியிருப்பார்கள் என்பதை சுட்டிக்கூறவேண்டிய அவசியமில்லை. இதேவேளை, போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆளும் தரப்பினர் (எதிரணியிலும் சிலர் ஆதரவு) உயர்த்தியுள்ள போர்க்கொடி ஆபத்தனது.

“எம்மீது, பலதரப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இட்டுக்கட்டப்பட்ட கதைகள் கூறப்படுகின்றன. எமது போராட்டம் நியாயமானது. ரணிலும் வீடு செல்ல வேண்டும். முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும்.அதுவரையில் ஓயப்போவதில்லை”

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் காலிமுகத்திடல் போராட்டக்குழு பிரதிநிதி

மக்கள் விடுதலை முன்னணி,  மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் பின்னணியுடனான எச்சங்களே போராட்டகளத்தில் உள்ளனர். அவர்களால் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான முனைப்புக்களே தற்போது எடுக்கப்படுகின்றன என்ற தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டு வருகின்றது.

இந்த முத்திரையிடல், நாளடைவில் போராட்டக்காரர்கள் மீது அதிதீவிரப்போக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாதனைபுரிந்த சரித்திரப் போராட்டத்தை காலிமுகத்திடலிலே கரைத்துவிடுவதற்கான பூர்வாங்க சமிக்ஞையே.

தற்போதைய சூழலில் போராட்டக்காரர்கள்  தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கு பிரயத்தனம் காண்பிக்க வேண்டியவர்களாக உள்ளனர். ஏனெனில் கைதாகுபவர்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகுபவர்களுக்கு ஆதரவுக்குரல்கள் வழமைபோலவே வெளிப்படும். சட்டத்தரணிகள் ஆஜராகுவதற்கு முன்வருவார்கள். தொழில்சங்கங்கள் போராடும். அரசியல் கட்சிகள் ஆதாயம் ஈட்டும்.

ஆனால், போராட்டகாரர்களுக்காக சாதாரண பொதுமக்கள், எழுச்சியடைந்து வீதிக்கு  வருவார்கள் என்று கூறமுடியாது. அவ்வாறான நிலைமையில் போராட்டக்காரர்களுக்கு 'இந்த மக்களுக்காகவா நாம் போராடினோம்' என்ற உளரீதியான சலிப்பு இயல்பாகவே தோற்றம்பெற்றுவிடும்.

“மாற்றத்துக்கான போராட்டத்தினை கைவிடப்போவதில்லை. அச்சுறுத்தல்கள் தராளமாக விடுக்கப்படுகின்றன. நாம் பலாத்காரமாக காலிமுகத்திடலில் இருந்து வெளியேற்றப்பட்டாலே தவிர எமது இலக்குகளை அடையும் வரையில் போராட்ட களத்திலிருந்து வெளியேறப்போவதில்லை. போரட்டவடிவங்கள் மாறலாம். ஆனால் அடுத்த அத்தியாமும் தொடரும்”

ராஜ்குமார் ரஜீவ்காந் காலிமுகத்திடல் போராட்டக்குழு பிரதிநிதி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டாள்கள் தினத்தில் கொண்டாடப்படும் பிறந்தநாள்

2023-04-01 14:31:38
news-image

தீவிரமாக அதிகரிக்கப்பட வேண்டிய தரவு சரிபார்த்தல்

2023-03-31 12:14:30
news-image

வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களுக்கு...

2023-03-30 10:42:21
news-image

தமிழர்களின் வரலாற்றை அழிப்பதற்கே எமது பாரம்பரிய...

2023-03-30 09:41:15
news-image

வவுனியாவில் அனுமதி பெறப்படாது அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு...

2023-03-29 22:08:19
news-image

ஏற்க மறுக்கும் ‘மலையகம் 200’

2023-03-29 16:25:04
news-image

அடிபணியாமல் - அஞ்சாமல் ..........

2023-03-29 21:57:12
news-image

போராட்டங்களுக்குப் பின்னர் இஸ்ரேலில் தோன்றியுள்ள இனம்புரியாத...

2023-03-29 09:12:03
news-image

அமெரிக்காவில் குழந்தை பருவத்தை கொண்டாடும் பாடசாலை...

2023-03-28 14:27:24
news-image

பண்டாரநாயக்காவும் பொலிஸ் மா அதிபர்களும்

2023-03-28 11:19:02
news-image

நோக்கம் நிறைவேறியதா? - 20 இல்...

2023-03-27 16:02:07
news-image

பொலன்னறுவைக் காட்டில் உலகிலேயே மிகப் பெரிய...

2023-03-27 17:26:44