நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய நூற்றுக்கணக்கான குடும்பங்கள் - புலனாய்வு அறிக்கை

Published By: Digital Desk 5

30 Jul, 2022 | 08:45 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மேல் கொத்மலை மின் திட்டம் இலங்கையின் மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். எனினும், இத்திட்டத்திற்காக தமது வீடுகள் மற்றும் காணிகளை தியாகம் செய்த மக்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கியவர்களாக உள்ளனர். 

“அனைத்து விதமங்களிலும் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். எமது வாழ்வாதாரம், பாரம்பரிய சூழல், எமது விவசாய நிலங்கள் உள்ளடங்கலாக அனைத்தையும் இழந்து விட்டோம்”. புதிய மின்னுற்பத்தி நிலையத்துக்கு வழி சமைத்த சமூகத்தின் உறுப்பினரான 40 வயது நிரம்பிய பன்னீர்ச்செல்வம் மேற்கண்டவாறு கூறுகின்றார்.

பெரியசாமி பன்னீர்ச்செல்வம்

யார் இந்த பெரியசாமி பன்னீர்ச்செல்வம்?

பெரியசாமி பன்னீர்ச்செல்வம் ரம்மியமான மலைநாட்டின் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர். வருடம் முழுவதும் இயற்கையினால் போஷிக்கப்படும் அவரின் கிராமத்தை சூழ காடுகள், தாவரங்கள் மற்றும் நீர் வளங்கள் என்பன அதிக அளவில் காணப்படுகின்றன. மேல் கொத்மலை மின் திட்டத்துக்காக செழுமையான தனது கடந்த கால வாழ்வை தியாகம் செய்த இவர் மீள் குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட வீட்டுக்கான உரித்தை பெற்றுக் கொள்வதற்காக கடந்த பத்து வருட காலமாக போராடி வருகின்றார்.

முன்னொரு காலத்தில் : மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட முன்னர் காணப்பட்ட அந்த கிராமம் 

இந்த போராட்டத்தில் பன்னீர்ச்செல்வம் மாத்திரம் ஈடுபடவில்லை. அவரைப் போன்ற 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேசிய மின் திட்டம் ஒன்றா செயற்படுத்த தமது நிலம், வரலாறு மற்றும் சுய தொழில் மூலம் பெறப்பட்ட வருமானம் என்பவற்றில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டனர். அரச அதிகாரிகள் தமது பொறுப்புகளை கைமாற்றும் நிலையில், ஒரு தசாப்தமாக நீண்டு செல்லும் உரித்து ஆவணங்களுக்கான இந்த போராட்டத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை என்பன உடைந்து நொறுங்கிய நிலையில் உள்ளது.

மேல் கொத்மலை திட்டம் 

மேல்  கொத்மலை நீர் மின் திட்டம் தேசிய மின் கட்டமைப்பிற்கு 150 மெகா வோல்ட் மின்சாரத்தை இனைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமாகும். சர்ச்சைகளுக்கு மத்தியில் இத்திட்டம் 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் உள்ளூர் மக்களில் தாக்கம் செலுத்தியது மாத்திரமன்றி சுற்றுச்சூழலுக்கும் பேரழிவை ஏற்படுத்தியது. தேசிய அளவில் மத்திரமல்ல பன்னாடுகளின் சுற்றுலாப்பயணிகளின் ஆர்வத்தை தூண்டிய சென் கிளேயார் இயற்கை நீர்வீழ்ச்சியை மறித்து அதன் குறுக்கே இத்திட்டத்தின் மையப் பகுதியான அணை அமைக்கப்பட்டது.

 தற்போதைய நிலை: மேல் கொத்மலை நீர் மின் நிலையம்

இந்த இழப்புகளுடன் வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத்தலங்கள், விவசாய நிலங்கள் மற்றும் பல பரம்பரைகளின் உள்ளூர் வரலாறு போன்ற பல விடயங்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட பாரிய நன்மைக்காக பலி கொடுக்கப்பட்டன. 

மலையகத்தில் பாரிய பொது மக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் போன்ற பல துயரங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட இந்த திட்டத்துக்கு எதிராக சூழல் செயற்பாட்டாளர்களும் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தி இருந்தனர்.  

தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் பணிகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட சட்டத்தரணி இ. தம்பையா மேல் கொத்மலை திட்டத்துக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒரு செயற்பாட்டாளர் ஆவார். “மேல் கொத்மலை திட்டம் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி நாம் ஆரம்பத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம். இத்திட்டம் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக செயலிழக்க வைக்கும் என்பதுடன் அதே இயற்கை வளங்களை அழித்து சூழலுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்தோம்” என அவர் நினைவு கூருகின்றார்.

“உண்மையில் இத்திட்டத்தின் ஆரம்ப வரைபு தலவாக்கலை நகரை மாத்திரம் உள்ளடக்கியதாக அமைந்திருக்கவில்லை. மாறாக தளவாக்கலைக்கும் அப்பால் டயகம வரை விசாலமானதாக அமைந்திருந்தது. இந்த ஆரம்ப வரைபு அவ்வாறே அமுல்படுத்தப்பட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக அமைந்திருக்கும்”

இந்த மின்னுற்பத்தி நிலையம் 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டதுடன் இத்திட்டத்தின் காரணமாக 500 குடும்பங்கள் மேல் கொத்மலை வீட்டு திட்டத்துக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. 

தம்பையாவை பொறுத்த வரை, தாமதங்கள் மற்றும் வெளித்தரப்புகள் கொண்டுள்ள நலன்கள் என்பவற்றின் காரணமாக தனது போராட்டங்களை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். “உள்ளூர் மக்களின் உண்மையான துயரங்கள் அரசியல்மயப்படுத்தப்பட்டதால் எமது போராட்டம் தோல்வியடைந்தது. அது ஒரு துரோகச்செயல். சில காலத்தின் பின் மக்களும் ஏமாற்றமடைந்து போராட்டம் மீதான விருப்பை இழக்க ஆரம்பித்தனர். எனவே அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன் கொண்டு செல்ல எமக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர்கள் புதிய வீடுகளில் வாழ்வதாக நான் பின்னர் அறிந்து கொண்டேன்”. 

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டு பத்து வருடங்கள் கழிந்த நிலையிலும் அக்குடும்பங்களுக்கு வீட்டு உறுதிகள் இன்னும் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக இலங்கை மின்சார சபையிடம்  நாம் தகவல் கோரிய போது பாதிக்கப்பட்டவர்களுக்கு காணி உறுதிகள் வழங்குவது இலங்கை மின்சார சபையின் பொறுப்பல்லவெனவும் மின்சக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எமக்கு தெரிவிக்கப்பட்டது.

புதிய வீடுகள்: இடம்பெயர்க்கப்பட்ட குடும்பங்களுக்காக கட்டப்பட்ட புதிய வீட்டுத்திட்டம்

இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிலவுரிமை இன்னும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.  மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சினால் காணி ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2020.07.03 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலமாக, மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டம் செயற்படுத்தப்படும் போது சுவீகரிக்கப்பட்ட காணிக்கு பதிலாக பெறப்பட்ட மாற்று இடத்துக்கு காணி உரித்து பத்திரம் பெற்றுகொடுப்பது தொடர்பான 22.07.2020 ஆம் திகதி 20/1107/226/068 அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவை சிபாரிசு கடிதத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைப்பதாக எமக்கு குறிப்பிட்டிருந்தார்.

22.07.2020 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின்படி, மேல் கொத்மலை நீர்மின் கருத்திட்டம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2012 ஆம் ஆண்டில் அதன் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. இந்தக் கருத்திட்டம் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வேலைத்தளங்கள் என்பவற்றிற்கான மாற்று இடங்கள் நிர்மாணிக்கப்பட்டு 2014 ஆகஸ்ட் மாதம் அளவில் கையளிக்கப்பட்டுள்ளதோடு, உரிய நட்டஈடு கொடுப்பனவு நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதலால், மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்களுக்கு மாற்று குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காகவும் பயிர்செய்கை நோக்கங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ள மாற்று காணிகளை உரிய பயனாளிகளுக்கு இறையிலி கொடைப்பத்திரத்தின் மூலம் உடைமையாக்கும் பொருட்டு மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை இந்த தீர்மானம் தெளிவாக பதிவு செய்துள்ளது. எவ்வாறாயினும், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நில உரித்து ஆவணங்களை வழங்குவதில் காணப்படும் தாமதம் காரணமாக இப்பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

மேல் கொத்மலை வீட்டுத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றின் தோற்றம் 

அமைச்சரவை தீர்மானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு பல மதங்களின் பின்னர், இலங்கை மின்சார சபையினால் 21.10.2020 ஆம் திகதி நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், மேல் கொத்மலை நீர்மின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகளில் மேற்கொள்ளப்படுகின்ற மீள்பதிவு மற்றும் மீள்குடியேற்றத்துக்கு சட்டபூர்வமான அதிகாரத்தை வழங்குவதற்காக காணியை குறித்த பிரதேச செயலகத்துக்கு பொறுப்பளிக்க இலங்கை மின்சார சபை முடிவு செய்துள்ளது.

ஆனால், இன்று வரை இந்த பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படவோ அல்லது இடம் பெயர்ந்த மக்களின் கரிசனைகள் தீவிரமாக கவனத்திற் கொள்ளப்படவோ இல்லை. அதிகாரத் தரப்பின் பன்னீர்செல்வத்துக்கு இன்னும் பல கவலைகளும் உள்ளன. புதிய வீட்டுத்திட்டத்துக்கு வழங்கப்படும் என வாக்களிக்கப்பட்ட வசதிகள் மற்றும் சேவைகள் இன்னும் வழங்கப்படவில்லை. 

புதிய குடியிருப்பு பகுதியை தலவாக்கலை நகருடன் இணைக்கும் பாலம் 

“தலவாக்கலை நகரத்திற்கும்  தற்போதுள்ள புதிய வீட்டுத்தொகுதிற்கும் சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் வரை தூரம் உள்ளது. இங்கு எவ்விதமான போக்குவரத்து சேவைகளும் இல்லை. மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்ய வில்லை. ஆனால் எமது பழைய இருப்பிடமானது தலவாக்கலை நகரத்திற்கு மிக அண்மித்து காணப்படடது” என பன்னீர்ச்செல்வம் குறிப்பிட்டார். 

பரந்த தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் இந்த நிச்சயமற்ற தன்மையை நிலையை மேலும் மோசமாக்குகின்றன. துயருறும் இந்த குடும்பங்கள் மீது மிகவும் ஈடுபாடு மிக்கவரான ‘தாலமுத்து சுதாகரன்’ இந்நிகழ்வுகளின் விளைவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவராக காணப்படுகின்றார். 

“இந்த மக்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக மக்களுடன் இணைந்து போராடி வருகின்றோம். ஆனால் எவ்விதமான பலனும் இல்லை. அரசாங்கத்திற்கு எமது மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மீது எவ்விதமான ஈடுப்பாடும் இல்லை. எனவே ஒரே வழி போராட்டம். 

கொவிட் மற்றும் தற்போதுள்ள உணவு பொருட்களின்விலைவாசி ஏற்றம் போன்ற காரணிகளினாலும்இந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முடிந்த வரையில் வீட்டுரிமையை பெற்றுக்கொள்ள போராடி வருகின்றோம். நீதிக்கான இந்த பயணத்தில் மக்களை ஒன்றிணைத்து போராடுகின்றோம். இனி வரும் காலங்களில் அடுத்த கட்ட போரட்டங்கள் குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. மக்கள் பொறுமையிழந்துள்ளதை அனைவரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்” என  மேல் கொத்தமலை மின்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயற்பாட்டளர் சுதாகரன் தெரிவித்தார்.

மக்களின் இந்த பொறுமையிழப்பு, பல பரம்பரைகளாக இச்சமூகத்தில் நிலவிய உறுதியான ஒற்றுமையையும் சீர் குலைத்துள்ளமை பன்னீர்ச்செல்வத்தின் கூற்றில் இருந்து புலப்படுகின்றது:

இட வசதி பற்றாக்குறை: பன்னீசெல்வத்துக்கு வழங்கப்பட்ட வீட்டின் உட்புறம்

இரு அறைகள் கொண்ட வீட்டில் 6 பேர் மிகவும் சிரமத்துடன் வாழ்கிறோம். அது மாத்திரமல்லாது காணிகளுக்கு இடையில் எல்லைகள் உரிய வகையில் பிரிக்கப்பட வில்லை. இதனால் மக்களிடையே பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  பொது போக்குவரத்து சேவை இல்லை. 150 ரூபா கொடுத்தே வீட்டிற்கு வர வேண்டியதுள்ளது. மின் கட்டனம் , நீர் கட்டனம் மற்றும் வரி என பல்வேறு கட்டணங்களை செலுத்துகின்றோம். இவை அனைத்தையும் முறையான வீட்டு உரித்து அற்ற நிலையிலேயே செலுத்தி வருகின்றோம்.

வீட்டுத்தோட்டம் செய்வதற்கு 7 பேர்ச் காணி என்னிடம் இருந்தது. மூன்று மாத்திற்கு ஒருமுறை அறுவடை மூலம் 30 தொடக்கம் 60 ஆயிரம் வரை வருமானம் வரும் . இவை அனைத்தும்  இல்லாதொழிக்கப்பட்டு நிரந்தர தொழிலற்ற நிலையில் வறுமையான வாழ்வை வாழும் நிலைக்கு எம்மை தள்ளியுள்ளது.”  

வீடுகளுக்கான காணி உறுதிகளுக்கும் மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி திட்டத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் காணி அமைச்சே இதற்கான உறுதிகளை வழங்க வேண்டுமென இலங்கை மின்சாரசபை தெரிவிக்கிறது. ஆனால் இலங்கை மின்சார சபையே காணி உறுதி வழங்க வேண்டுமென காணி அமைச்சு தெரிவிக்கிறது.

இக்குடும்பங்களின் துயரம் குறித்து மத்திய மாகாண சபையின் ஆளுநர் லலித் கமகேவை அணுகிய போது தனது பொறுப்பில் இருந்து நழுவும் நிலையையே அவதானிக்க முடிந்தது. 

மேல் கொத்மலை மின் திட்டம் மற்றும் அதனை சார்ந்த மக்களின் மீள் குடியேற்றங்கள் குறித்து எவ்விதமான விளக்கமும் எனக்கு இல்லை. மாகாண சபைகள் செயற்படவில்லை. ஆவண கோப்புகளையும் நான் கண்டதில்லை. ஆளுநர் என்ற வகையில் இந்த விடயத்தை மத்திய அரசுக்கு அறியப்படுத்தலாம்.  மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர்  உரிய தீர்மானம் எடுக்க பரிந்துரைக்க என்னால் முடியும்” என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.

கடினமான காலம்: இடம்பெயர்ந்த விவசாயிகள் வேலை மற்றும் வருமானத்துக்காக போராடுகின்றனர்

பன்னீர்ச்செல்வத்தை பொறுத்த வரை கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே உள்ளன - நாம் இவ்வாறு நடத்தப்பட்டுள்ளோம், எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு யார் பொறுப்பு?

“நாம் ஒரு சிறுபான்மை சமூகமாக இருப்பதன் காரணமாகவா எம்மீது பாகுபாடு காண்பிக்கப்பட்டு வீட்டுரிமையும் மறுக்கப்படுகின்றது என்ற கேள்வி எம்மிடையே எழுகின்றது. 

“வீட்டுரிமைக்கான எமது போராட்டம் என்று வெற்றிப்பெறுமே தெரிய வில்லை. திட்டமிட்டு ஏமாற்றி விட்டார்கள் என்பதே உண்மை” என பன்னீர்ச்செல்வம்  கூறுகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறையில் 550 பேருக்கு அமெரிக்காவில் வாய்ப்பு...

2023-03-03 13:17:57
news-image

அசமந்தத்தால் வருமானத்தை இழந்தது வவுனியா நகரசபை...

2023-02-28 10:37:11
news-image

ஹட்டன் நகரில் உயிரற்றுப்போன உயிர்வாயு திட்டம்: ...

2023-02-22 15:18:51
news-image

பயிற்சியளிக்காமல் சுகாதார தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தும்...

2023-01-30 18:11:10
news-image

வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை இழந்துவரும் வவுனியா...

2022-11-27 11:26:50
news-image

வடக்கில் கடலட்டை மாபியா !

2022-10-13 15:48:06
news-image

வருமான மூலங்களை பயன்படுத்தாத வவுனியா நகரசபை

2022-09-27 10:32:07
news-image

தொல்பொருளியலின் பெயரால் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் மற்றுமொரு...

2022-08-22 11:00:02
news-image

கட்டுப்படாத வவுனியா நகரசபை

2022-08-02 16:29:14
news-image

நாட்டிற்கு வெளிச்சம் கொடுத்து இருளில் மூழ்கிய...

2022-07-30 20:45:34
news-image

பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி யாருக்கு...

2022-07-23 15:19:14