சிதைக்கப்படும் அ.தி.மு.க.

Published By: Digital Desk 5

30 Jul, 2022 | 08:42 PM
image

-குடந்தையான்-

உலகளவில் அதிகளவு ‘கலாநிதி’ பட்டம் பெற்றிருக்கும் பெண்மணிகள் நிரம்பிய தமிழகத்தில், அதற்கு காரணமான திராவிட முறைமை பாணியிலான அரசை பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்றால், தி.மு.க., அ.தி.மு.க. எனும் இருமுனை அரசியல் சக்திகளைப் பிரித்து, ஏதேனுமொன்றை சிதைக்க வேண்டுமென தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ‘தி.மு.க. ஒரு தீய சக்தி’ என்ற கோஷத்தின் ஊடாக பிறந்த அ.தி.மு.க.வை, அக்கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பூசலை ஒரு காரணமாக வைத்து, அதனை சிதைக்க வேண்டுமென தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் தேசிய கட்சியான பா.ஜ.க.திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. 

அதிலும் அ.தி.மு.க.வில் தற்போது பழனிச்சாமி ஒருபுறம், பன்னீர்செல்வம் மறுபுறம், இதனை தவிர்த்து சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் வெவ்வேறு திசையாக பிரிந்து, அ.தி.மு.க.வின் நான்கு முகங்களாக, தனித்து இயங்கி வருகிறார்கள். இதனால் ஒன்றரைக்கோடி தொண்டர்களின் வலிமையுடன் திகழும் அ.தி.மு.க. பிரிந்து கிடக்கிறது. இதில் யார் அ.தி.மு.க. அசல் என்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. 

அ.தி.மு.க.உயிர்ப்புடன் இயங்க வேண்டும் என அதன் அரசியல் எதிரியான தி.மு.க. நினைத்தாலும், அதி.மு.க.வை ஆக்கிரமித்து, தன்னுடைய அரசியல் எழுச்சியை நிகழ்த்த வேண்டும் என காத்திருக்கும் பாஜக, தி.மு.க.வின் அதிகார துணையுடன் அதி.மு.க.வை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது. பன்னீர்செல்வத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து, எடப்பாடி பழனிச்சாமியை நிர்ப்பந்தித்து, பா.ஜ.க. தன்னுடைய அரசியல் கணக்கை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக செயலாற்றி வருகிறது. 

தமிழகத்திற்கு வருகை தந்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பேசிய பிரதமர், அவர் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்ட பிறகு, டெல்லிக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க முயன்றும் தோல்வியடைந்து, பிறகு தமிழக பா.ஜ.க. தலைவரான அண்ணாமலையுடன் சந்தித்தும் உரிய முக்கியத்துவம் கிடைக்காததால், அவர் அதிருப்தியில் இருக்கிறார். இது பா.ஜ.க. திட்டமிட்டு கையாளும் உளவியல் உத்தியாகும். 

இதனிடையே அதி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் தீர்ப்புகளும் முக்கியம் என்பதால், இந்த விவகாரம் 2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல் வரை தொடரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் தமிழகத்தில் எட்டு மக்களவைத் தொகுதிகளை குறி வைத்து போட்டியிடும் பா.ஜ.க., அங்கு வெல்வதற்கான அனைத்து உத்திகளையும் தற்போதே திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. இதற்கு அ.தி.மு.க.வின் அனைத்து அமைப்பு மற்றும் பேரவையின் ஆதரவு அவசியம் என்பதால், தேர்தல் நடைபெறும் வரை உட்கட்சி பூசலுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைப்பதை பா.ஜ.க. விரும்பாது என்றும் கணிக்கப்படுகின்றது

இந்தியாவின் பதினைந்தாவது குடியரசு தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்முவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் நாகரீகம் என்று பொதுவாக கருதினாலும், பா.ஜ.க. மற்றும் அவர்களது பிரதிநிதியான ஆளுநர் ஆகியோரின் அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாக நிவாரணம் பெறுவதற்காகத்தான், புதிய குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பப்பட்டது என்ற பார்வையும் உள்ளது.

இது தொடர்பாக தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், ஸ்டாலின் அவர்களது அணுகுமுறை முற்றிலும் புதிது. மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் பங்கேற்பது உறுதி என்று தெரிந்த நிலையில், இந்த செஸ் விளையாட்டு போட்டியில் சிறப்பு அதிதியாக பங்கு பற்றுமாறு தமிழக அரசின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

இது முற்றிலும் திராவிட முறைமை பாணியிலான அரசியல்” என்று குறிப்பிடுகிறார்கள்.

அதேதருணத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, அரிசி மீது பொருட்கள் சேவைகள் வரியை விதித்திருக்கிறது. இதற்கு அரிசி ஆலை அதிபர்கள், அரிசி மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் குறித்த விலை அதிகரிப்பை வைத்து பா.ஜ.க., தி.மு.க. என்று ஆகிய அரசியல் கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய இயலும் என்றும் அதி.மு.க.வினர் கருதுகிறார்கள். 

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி மீது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகாரம், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கும் முனனாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், வேலுமணி ஆகியவர்கள் மீது குட்கா வழக்கு விவகாரம் இவை தொடர்ந்து உயிர்ப்பிக்கப்படும் என்பதால், தற்போதைய சூழலில் நிர்வாகிகளால் கட்டி காப்பாற்றப்படும் அ.தி.மு.க.எனும் அரசியல் சக்தியை, வழக்குகள் மூலம் பலவீனப்படுத்தும் உத்தியை மாநிலத்தில் ஆளும் தி.மு.க. அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் இருமுனை தாக்குதலாக தொடுத்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க.வுடன் தொடர்ந்து பயணித்தால் சிறுபான்மையின வாக்கு வங்கி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளையும் இழக்க வேண்டி வரும். இதனை உறுதியாக புரிந்து கொண்டு, எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க.வை புறக்கணித்துவிட்டு, தி.மு.க. கூட்டணியில் அதிருப்தியுடன் இருக்கும் காங்கிரசுடன் கைகோர்த்து தேர்தலை சந்திக்க வேண்டுமென அ.தி.மு.க.வின் நடுநிலையாளர்கள் எடப்பாடியிடம் தெரிவித்திருக்கிறார்கள். 

பா.ஜ.க.வை கூட்டணியில் இருந்து விலக்கி விட்டால், தி.மு.க. கூட்டணியில் தற்போது அதிருப்தியுடன் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க.வில் இணைந்துக் கொள்ளும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இத்தகைய உறுதியான நடவடிக்கையை எடப்பாடி மேற்கொண்டால்தான், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வால் திட்டமிட்டு சிதைக்கப்பட்டு வரும் அ.தி.மு.க.எனும் அரசியல் இயக்கத்தை கட்டி காப்பாற்ற இயலும் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

பொதுக்குழு உறுப்பினர்கள், மூத்த மற்றும் முன்னணி நிர்வாகிகள், இரண்டாம் கட்ட தலைவர்களிடையே ஒருமித்த கருத்தின்மை போன்ற குறைபாடுகளால் தத்தளிக்கும் அ.தி.மு.க.எனும் அரசியல் இயக்கத்தை, இடைக்கால பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி தீர்க்கமான முடிவுடன் செயல்பட்டு காப்பாற்ற வேண்டும் என்பதே அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும் அக்கட்சியின் தொண்டர்கள் மட்டுமல்லாமல், திராவிட இயக்க அரசியல் காரணமாக பலன் பெற்றிருக்கும் பெண்மணிகளின் கோரிக்கையாகவும் இருக்கிறது.

எடப்பாடி எம்மாதிரியான முடிவுகளை மேற்கொள்ளவிருக்கிறார் என்பதை பொறுத்து தான் அக்கட்சியின் எதிர்காலம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18