இலங்கையின் அதிகப் பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு என்னவென்றே விபரம் புரியாத விவகாரம் ஒன்று அரசியல்வாதிகள் மத்தியில் பூதாகாரமான விவாதப் பொருளாகியிருக்கிறது. இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்ற பாரிய ஊழல் மோசடியின் விளைவாக இன்றைய அரசாங்கம் பெரும் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றது என்பது மாத்திரம் மக்களுக்கு விபரமாகத் தெரிகிறது. அத்துடன் இந்த ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதற்கு அரசாங்கத்தில் ஒரு தரப்பினர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. 

இலங்கை மத்திய வங்கியின் கோடிக்கணக்கான ரூபா சம்பந்தப்பட்ட பிணை முறி (Central Bank Bond) விற்பனை ஊழல் விவகாரத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதாக எதிரணிக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை கடந்த 18மாதங்களாக கடுமையாகக் கண்டனம் செய்து வந்த நிலையில், அந்த ஊழல் விவகாரத்தை ஆராய்ந்த அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (Parliamentary Committee on Public Enterprises  –  COPE) அதன் அறிக்கையை கடந்த மாத இறுதியில் (அக்டோபர் 28) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) யின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான ‘கோப்’ அதன் அறிக்கையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனை கடந்த வருடம் திறைசேரி நிதி மத்திய வங்கியின் பிணை முறியாக ஏலத்துக்கு விடப்பட்ட நடவடிக்கையில் இருந்து அவரது மருமகனுக்கு சொந்தமான வணிக நிறுவனம் பெருமளவு இலாபத்தைச் சம்பாதித்துக் கொள்ள அனுமதித்ததில் 'நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாக' குறிப்பிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட பணஇழப்பு முழுவதும் மீட்கப்பட வேண்டும் என்றும் எதிர் காலத்தில் மத்திய வங்கியில் இதே போன்ற முறைகேடுகள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யக்கூடியதாக புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. 

‘கோப்’ அதன் அறிக்கையை ஏகமனதாகவே சமர்ப்பித்திருந்தது என்று பாராளுமன்றத்துக்கு கூறப்பட்ட போதிலும், அடுத்து வந்த நாட்களில் அக் குழுவின் உறுப்பினர்கள் பலரும் தங்களது கட்சிகள் சார்ந்த நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ‘ஏகமனதான அறிக்கையின்’ இலட்சணத்தைப் புரியவைத்தன. கடந்த வருட ஆரம்பத்தில் மத்திய வங்கி பிணைமுறி விற்பனை விவகாரத்தில் அர்ஜுனா மகேந்திரன் முறைகேடாக நடந்து கொண்டதாக எதிரணியிடமிருந்து குற்றச்சாட்டு வந்த கையோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அது குறித்து ஆராய மூன்று சட்டத்தரணிகள் கொண்ட குழுவொன்றை நியமித்தார். அக்குழு சில வாரங்களுக்குள்ளாகவே மகேந்திரனுக்கு பிணைமுறி விற்பனை விவகாரத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படுகின்ற முறைகேட்டில் நேரடியான தொடர்பேதும் இல்லை என்ற முடிவை அறிவித்தது. 

இன்று அதே பிரதமர் தான் ‘கோப்’ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும்  தனதும் தலைமையிலான தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடனும் பதில் கூறும்  கடப்பாட்டுடனும் நடந்து கொள்கிறது என்பதற்கு இந்த அறிக்கையே பிரகாசமான சான்றாகும் என்று பெருமைப்பட்டுக் கொண்டதைக் காணக்கூடியதாக இருந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ‘கோப்’ அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்வதாக அன்றைய தினமே பிரதமர்  அறிவித்திருந்தார். அடுத்த சில தினங்களில் பாராளுமன்ற சபை முதல்வரான மூத்த அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்லவின் அலுவலகத்துக்கு பிரதமர் பிறப்பித்த அறிவுறுத்தலின் பிரகாரம் அந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

‘கோப்’ பினால் வெறுமனே சிபாரிசுகளை மாத்திரமே செய்ய முடியும். அதற்கு எந்தவிதமான சட்ட நடவடிக்கையையும் எடுப்பதற்கான அதிகாரம் கிடையாது. அதனால் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் எடுக்கக்கூடிய நடவடிக்கையிலேயே சகலதும் தங்கியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவுக்கு விசுவாசமான ‘கூட்டு எதிரணியைச்’ சேர்ந்த 11 பாராளுமன்ற உறுப்பினர்கள்  வாசுதேவ நாணயக்கார தலைமையில் சென்று மத்திய வங்கி பிணை முறி விற்பனை விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அர்ஜுனா மகேந்திரனுக்கும் எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று முறைப்பாடு ஒன்றை கையளித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டுக்கு ஜனநாயகத்தை மீளக் கொண்டுவரப் போவதாகவும் ஊழல் மோசடிகள், அதிகார து ஷ் பிரயோகம், முறைகேடுகளை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப் போவதாகவும் மக்களுக்கு வாக்குறுதியளித்துக் கொண்டு பதவிக்கு வந்த தேசிய ஐக்கிய அரசாங்கம் மீது இலங்கையின் வரலாற்றிலேயே இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிடக் கூடிய மிகப் பெரிய நிதி மோசடிகளில் ஒன்று தொடர்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவது அதுவும் குறிப்பாக இதே அரசாங்கத்தின் தலைவர்களினால் இந்தோனேசியாவின் சுஹாட்டோவுடனும் பிலிப்பைன்ஸின் பேர்டினண்ட் மார்கோஸுடனும் ஒப்பிடப்பட்ட முன்னைய ஆட்சியாளர்களான ராஜபக் ஷ தரப்பினரிடமிருந்து அந்தக் குற்றச்சாட்டு வருவது உண்மையிலேயே ஒரு முரண்நகைதான். 

தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரிவே இந்த விவகாரத்தில் ‘கூண்டில்’ நிறுத்தப்பட்டிருக்கிறது. ‘கோப்’ அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாட்டை விட்டுச் சென்ற அர்ஜுனா மகேந்திரன் திரும்பி வந்து விசாரணைகளை எதிர்கொள்ள மறுத்தால் அவரை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சர்வதேச பொலிஸ் அமைப்பான ‘இன்டர்போலின்’ உதவி நாடப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர் ஒருவர் விடுத்த எச்சரிக்கை அரசாங்கத்தின் இரு முகாம்களும் இது விடயத்தில் துருவமயப்பட்டு நிற்பதை வெளிப்படையாக உணர்த்துகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நிலவுகின்ற விவகாரங்களில் அர்ஜுனா மகேந்திரன் சம்பந்தப்பட்ட விவகாரம் முன்னரும் கூட முனைப்பானதாகவே இருந்தது. இவ் வருட நடுப்பகுதியில் அவரின் 18 மாத பதவிக்காலத்தின் முடிவில் மீண்டும் அவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க வேண்டுமென்பதில் பிரதமர் விடாப்பிடியாக இருந்தபோதிலும், இறுதியில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அவர் விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மீண்டும் 'கோப்' அறிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் பலப் பரீட்சைக்கான சாத்தியம் இருக்குமா என்ற கேள்வி எழவே செய்கிறது. 

பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய ‘கோப்’ அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும், சுதந்திரக் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில்  பிரதமரின் அணுகுமுறையுடன் ஒத்துழைப்பதற்குத் தயாராயில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ‘கோப்’ அறிக்கையையும் அதன் சிபாரிசுகளையும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிப்பதற்காக கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் ஒரு குழுவை நியமித்திருந்தது. இக் குழு 2017 ஜனவரிக்கு முன்னதாக அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்கப்பட்டிருப்பதாக முதலில் செய்தி வெளியாகிய போதிலும் இப்போது ௧௫ தினங்களுக்குள் அது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியிருக்கிறார். ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சில தரப்பினரால் விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதேவேளை, ஜனாதிபதி சிறிசேன தனது நிலைப்பாடு குறித்து மூன்று தினங்களுக்கு முன்னர் கூறுகையில், மத்திய வங்கி  பிணைமுறி விற்பனை விவகாரம் எவ்விதமான அரசியல் தலையீடுமின்றி, சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான நீதி விசாரணைச் செயன்முறைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். விசாரணையிலிருந்து  சகல அரசியல் வாதிகளும் விலகியிருக்க வேண்டும் என்பதே தனது கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனிடையே ஏற்கனவே பிரதமருக்கும் மகேந்திரனுக்கும் எதிராக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறையிட்ட ‘கூட்டு எதிரணி’ இப்போது இந்த  விவகாரத்தின் சூத்திரதாரியே பிரதமர்தான் என்று கூறி அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென்று கேட்டிருப்பதுடன் அவரின் பதவி விலகலை வலியுறுத்தி நாடுபூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்கு எதிராக மத்திய வங்கி விவகாரத்தை கூட்டு எதிரணி அதனால் முடிந்தவரை கூடுதல் பட்சத்துக்குப் பயன்படுத்தி அரசியல் அனுகூலமடைய முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மகேந்திரன் முறைகேடுகளில் ஈடுபட்டாரா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அவர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலகட்டத்து நிகழ்வுப் போக்குகள் பிரதமர் விக்கிரமசிங்கவின் 'பிரகாசத்தைக்' கடுமையாகக் குறைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 

இந்த விவகாரம் ஒரு புறமிருக்கையில், கடந்த மாத நடுப்பகுதியில் தலைநகரில் இராணுவம் சம்பந்தப்பட்ட வைபவமொன்றில் தன்னால் நிகழ்த்தப்பட்ட உரை ஏற்படுத்திய அரசியல் சர்ச்சை தணிந்து போவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி சிறிசேன மீண்டும்  இராணுவ வைபவமொன்றிலேயே நிகழ்த்திய இன்னொரு உரை  கவனத்தைப் பெரிதும் தூண்டுவதாக அமைந்திருந்தது. 

முதலில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் அக்டோபர் 12 ஆம் திகதி இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் காணிகளுக்கான உரிமைப்பத்திரங்களை வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற பாரதூரமான ஊழல் மோசடிகள், முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருக்கும் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு, குற்றவியல் புலனாய்வுத் திணைக்களம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இந்த மூன்று நிறுவனங்களும் அரசியல் நிகழ்ச்சித்திட்டமொன்றின் பிரகாரமே விசாரணைகளை நடத்துகின்றன என்று குற்றஞ்சாட்டிய அவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக் ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் சம்பந்தப்பட்ட வழக்கையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தல், கொலை வழக்கையும் பிரத்தியேகமாகக் குறிப்பிட்டு தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தார். போர் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த முப்படைகளினதும் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படக் கூடிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை தன்னால் அனுமதிக்க முடியாது என்பதே அந்த உரையின் மூலமாக ஜனாதிபதி உணர்த்த விரும்பிய செய்தியாகும். 

அதற்குப் பிறகு இருவாரங்கள் கடந்த நிலையில் அக்டோபர் 27 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஆயுதப்படையினருக்கு விருதுகள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரை முன்னையதைக்  காட்டிலும் கடுமையான தொனியில் இருந்தது. 

இந்தத் தடவை ஜனாதிபதி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள், ஊடகங்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய  காரியங்களை அனுமதிக்கத் தயாராயில்லை என்று அவர் கூறினார். ‘சில பிரிவினர் விளக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றார்கள். சில ஊடகங்கள் செயற்படுகின்ற முறை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இன்று நாட்டில் நிலவுகின்ற ஊடக சுதந்திரத்தை இந்த ஊடகங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றன. என்னை ஊடகங்கள் எவ்வளவு கடுமையாக எதிர்த்தாலும் விமர்சனம் செய்தாலும் தாக்கினாலும் நான் ஆயுதப்படைகள் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்கப் போவதில்லை. முப்படைகளினதும் எமது போர் நாயகர்களினதும் நலன்களையும் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க உச்ச அளவில் செயற்படுவதற்கு நான் உறுதிபூண்டிருக்கிறேன். தேசிய பாதுகாப்புப் பற்றி போதிய மதிப்பீடும் விளக்கமும் இல்லாதவர்கள் அதைப்பற்றி கருத்துக் கூறக் கூடாது. எந்தக் கட்டத்திலும் நாம் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. எல்லாவேளையிலும் மிகுந்த உஷார் நிலையில் நாம் இருக்க வேண்டும். பிரிவினைவாதப் பயங்கரவாதம் கோட்பாட்டு ரீதியில் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை' என்றும் அந்த உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. 

தேசிய பாதுகாப்பைப் பற்றியும் போர் நாயகர்களின் கௌரவம், கண்ணியம் பற்றியும் ஜனாதிபதியின் பேச்சு பெரும்பாலும் அவற்றைப்பற்றி- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ பேசுவதைப் போன்றேயிருந்தது.

இரு வருடங்களுக்கு முன்னர் இதே நவம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில்தான் ராஜபக் ஷவின் அரசாங்கத்திலிருந்து வெளியேறி, சிறிசேன அன்றைய எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கினார். ராஜபக் ஷ அரசாங்கத்திடமிருந்து வந்த பாரதூரமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட நிலையிலேயே அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் அன்று சிறிசேனவுக்கு ஆதரவளித்தன. இன்று அதே அமைப்புகளுக்கு எதிராக அவர் பேசத் தொடங்கியிருப்பது மாத்திரமல்ல, எச்சரிக்கை விடுவதற்கும் தயங்கவில்லை. ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் சரி போர்க்காலகட்டத்திலும்  போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்திலும் சரி அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் சிவில் சமூக அமைப்புகளும் 'தேசத்துரோக குழுக்களாகவே ' நோக்கப்பட்டு கெடுபிடிகளுக்கும் அடாவடித்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டன. உரிமை மீறல்களுக்கும் சட்டத்தின் ஆட்சியின் சீர்குலைவுக்கும் ஊழல் மோசடிகளுக்கும் எதிராக அந்த அமைப்புகள் குரலெழுப்பியதே அதற்கு அடிப்படைக் காரணமாகும். பெருமளவுக்கு அந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தோற்றுவித்த  அரசியல் சூழ்நிலை மாற்றங்களின் விளைவாக பதவிக்கு வந்த சிறிசேன இன்று ராஜபக் ஷ வின் பாணியிலேயே பேச ஆரம்பித்திருப்பது பெரும் துரதிஷ்டவசமானதாகும். மைத்திரிக்குள் ஒளிந்திருக்கும் ஒரு மஹிந்த இப்போது படிப்படியாக தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். 2014 நவம்பருக்கும் 2015 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது தான் நிகழ்த்திய உரைகளை ஜனாதிபதி ஒரு தடவை திரும்பிப் போட்டு கேட்டுப் பார்க்க வேண்டும்.

( வீ.தனபாலசிங்கம்)