அதர்வாவின் 'குருதி ஆட்டம்' பட முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

29 Jul, 2022 | 01:29 PM
image

அதர்வா நடிப்பில் தயாராகி இருக்கும் 'குருதி ஆட்டம்' எனும் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியன்று பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'எட்டு தோட்டாக்கள்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'குருதி ஆட்டம்'. இதில் நடிகர் அதர்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, ராதிகா சரத்குமார், வத்ஸன் சக்கரவர்த்தி, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

கொரோனா காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்த இப்படத்தின் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததால், இப்படத்தின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதியன்று இந்த திரைப்படம் பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் மிஷ்கின் மற்றும் தயாரிப்பாளர் தனஜெயன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

இதன் போது இயக்குநர் பேசுகையில், '' எட்டு தோட்டாக்கள் படம் வெளியான பிறகு ஒரு வாரத்தில் அதர்வாவை சந்தித்து கதை கூறினேன். பிறகு திரைக்கதைக்காக ஓராண்டு காலம் செலவழித்தேன். இரண்டாம் பாதியில் அவர் குறிப்பிட்ட ஒரு குறையை நிவர்த்தி செய்ய முயன்று, அதன் பிறகு புதிய கோணத்தில் திரைக்கதையாக உருவானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்ற தருணத்தில் கொரோனா காரணமாக பணிகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா ஒரு கபடி வீரராக தோன்றுவதுடன்  உணர்வுபூர்வமான முழு நீள எக்சன் திரைக்கதையில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. நடுத்தர வர்க்கத்து மக்கள் சந்திக்கும் பிரச்சனையே பேசும் இந்த திரைப்படம் பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்.'' என்றார்.

'குருதி ஆட்டம்' முன்னோட்டத்தில் படத்தின் தலைப்பிற்கேற்ற வகையில் திரில்லரும், சண்டைக்காட்சிகளும் நிறைந்து காணப்படுவதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான 'பூமராங்', '100', 'தள்ளி போகாதே' ஆகிய படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதால், வசூல் ரீதியிலான வெற்றியை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகர் அதர்வாவிற்கு 'குருதி ஆட்டம்', அவரது எண்ணத்தை பூர்த்தி செய்யும் என திரையுலக வணிகர்கள் உறுதியாக அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right