தமிழ் நூல்களுக்கான சந்தை மிக குறுகியது

By Digital Desk 5

29 Jul, 2022 | 12:55 PM
image

வெறும் வடிவ மாற்றங்களை மட்டுமே கவிதை என யாரும் ஏமாறக்கூடாது. கட்டுவதல்ல கவிதை. மடை திறந்து கொட்டுவதே கவிதை என இலக்கியங்களின் அடையாளமாக கவிதைகளை முன்னிறுத்தும் திரு. வி. மைக்கல் கொலின் சமீபத்தில் என் இனிய பட்டாம்பூச்சிக்கு என்ற கவிதை தொகுப்பினை எழுதி வெளியிட்டிருந்தார். 

கவிஞர் மட்டுமன்றி... சிறுகதை, கட்டுரை, நாவல், நாடக எழுத்தாளர்,  குறும்பட இயக்குநர், சஞ்சிகை ஆசிரியர், பத்திரிகையாளர், பதிப்பாளருமான இவர் தற்போதை நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் நூலச்சுத்துறை சந்தித்து வரும் இடர்கள் தொடர்பாகவும் தனது செவ்வியில் தெரிவித்திருந்தார்....   

இவனை சிலுவையில் அறையுங்கள் நூலின் ஊடாக யாரை சாடுகிறீர்கள்?

இவனை சிலுவையில் அறையுங்கள்| - கிறிஸ்தவ இலக்கியத்தில் முதல் முயற்சி. கத்தோலிக்கர்கள் அனுஷ்டிக்கும் புனித பாஸ்கா காலத்தின் நாற்பது நாட்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கவிதை என்ற வகையில் புதிய ஏற்பாட்டின் நிகழ்வுகளை சம காலத்துடன் ஒப்பிட்டு மறுவாசிப்பு செய்த கவிதைகள்.

இது இன்றைய சமூக அரசியல் பொருளாதார நிலைகளை கேள்வி கேட்கிறது. அநீதி வழி நடைபெறும் ஆட்சியை, ஆட்சியாளர்களை எள்ளி நகையாடுகிறது.

மக்கள் சார்பாக நின்று கேள்வி கேட்கிறது. மக்களின் விடுதலைக்கான குரலாய் ஒலிக்கிறது.

சமூகத்தின் மீதான உங்கள் பார்வையை முழு வீச்சோடு வெளிப்படுத்த உதவும் துறை என்ன? கவிதைகளா அல்லது.....

கவிதைகள்தான். 

இன்றைய கணினி யுகத்தில் நாம் எமது படைப்புக்களை நீட்டி முழக்கி எழுதிவிட முடியாது. இன்றைய பொருளாதார யுகத்தில் மனிதர்கள் தமக்கான பெரும்பான்மையான நேரத்தை பணம் சம்பாதிப்பதற்காகவே செலவிட வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாத சூழ்நிலை. 

இந்த பரபரப்பான யுகத்தில் தமது தொழில் இலக்குகளை முடிப்பதற்கு குறுகிய கால எல்லை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் விரும்பியோ, விரும்பாமலோ வாசிப்புக்காக இன்று மனிதர்கள் செலவிடும் நேரம் சுருங்கிவிட்டது. ஒவ்வொரு கரங்களிலும் ஸ்மார்ட் ஃபோன்கள். எனவே, இன்றைக்கு சமூகம் மீதான எனது பார்வையை முழு வீச்சோடும் மூச்சோடும் வெளிப்படுத்துவதற்கு கவிதையே சிறந்ததாக அமைகிறது.

கவிதை, சிறுகதை முதலான படைப்புகளை காத்திரமாக எழுத இலக்கிய அறிவு கொண்டிருப்பது மிக அவசியமா? 


பொதுவாகவே எந்தத் துறையிலும் ஆழ அகலமாக இயங்குவதற்கு குறித்த துறை ரீதியான அறிவு தேவை. இலக்கியத்திலும் நாம் தொடர்ந்து இயங்குவதற்கு கலை இலக்கியம் சார்ந்த அறிவு தேவை. 

எமது தேடலின் ஆழ அகலங்களுக்கேற்ப எமது படைப்புகள் இறுக்கமாகவும் காத்திரமாகவும் அமையும். பிறமொழி இலக்கியங்கள் மீதான தேடல், நவீன தமிழ் இலக்கியம் மீதான விசாலமான அறிவு எமது படைப்புகள் செழுமை பெற உதவி செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உங்கள் படைப்புகளில் தொன்மங்களை அதிகமாக மீள்வாசிப்பு செய்துள்ளீர்கள். அதைப் பற்றி...

ஆம். 

தொன்மங்களை சமகாலத்துடன் இணைத்து இலக்கியம் படைக்கிறேன். இதனை எனது படைப்பாக்க உத்தியாக கைக்கொள்கிறேன். 

இன்று தமிழ் இலக்கியத்தில் பல எழுத்தாளர்கள் தமது ஓரிரு படைப்புகளில் தொன்மங்களை மறுவாசிப்பு செய்திருப்பார்கள். ஆனால், தமிழ் இலக்கியத்தில் எனது பரசுராம பூமி முழுக்க முழுக்க இதிகாச, புராண, வேதநூல்களை மறுவாசிப்பு செய்த சிறுகதைகளைக் கொண்ட முதல் தொகுப்பாக வெளிவந்தது. இவனைச் சிலுவையில் அறையுங்கள் கவிதை நூலும் புனித வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளை மறுவாசிப்பு செய்தது. 

ஈழத்து இலக்கியப் பரப்பில் எனது அடையாளமாக நான் பதித்துச் செல்வது தொன்மங்கள் மீதான எனது மறுவாசிப்பு படைப்புக்களையே.

உங்கள் நூல்களை நீங்களே பதிப்பாளராக இருந்து வெளியிடுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

இன்றைய அச்சுத்துறையானது பல வழிகளில் முன்னேறிவிட்டது. பக்க வடிவமைப்பு, அட்டை வடிவமைப்பு, அச்சாக்கம் என ஒவ்வொன்றும் தனித்தனி துறைகளாகிவிட்டன. இவை மூன்றும் இணைந்தே ஒரு முழுமையான அச்சுத்துறையாகிறது. 

எனது நூலை நானே வெளியிடுவதனால், எனக்குப் பிடித்தவாறு நவீன தொழில்நுட்பத்துடன் எனது நூல்களை அழகிய வடிவமைப்பில், அழகிய அட்டைப்படத்துடன், தரமான அச்சமைப்பில் வெளியிட முடிகிறது. 

இது எனது நூல்களுக்கு மட்டுமல்ல, எனது மகுடம் பதிப்பகம் மூலம் இதுவரை வெளியிடப்பட்ட 62 நூல்களுக்கும், இனி வெளியிடப்படவுள்ள நூல்களுக்கும் பொருந்தும்.

உங்களது நூல்கள் மட்டுமன்றி, பொதுவாக இதுவரை எத்தனை நூல்களை சொந்த பதிப்பில் வெளிக்கொண்டு வந்துள்ளீர்கள்?

எனது தாகம் பதிப்பகம் மூலம் இதுவரை ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் மூன்று நூல்கள் வடகிழக்கு மாகாண, கிழக்கு மாகாண சாகித்திய விருதினையும், ஒரு நூல் இந்திய தேவசிகாமணி நினைவு விருதினையும் பெற்றுக்கொண்டது.

~மகுடம்| பதிப்பகம் மூலம் இதுவரை 62 நூல்களை பதிப்பித்துள்ளேன். இவற்றில் பல நூல்கள் தேசிய சாகித்திய, கிழக்கு மாகாண சாகித்திய, கொடகே சாகித்திய விருதுகளை பெற்றுள்ளன.

மகுடம், அநாமிகா பதிப்பகம் இணைந்து நான்கு நூல்கள் வெளியிட்டுள்ளன. 

தற்போது நூல்களை வெளியிடுவதில் பொருளாதார ரீதியாக உங்களுக்குள்ள சவால்கள்?


இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்க நிலைமையால் சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதனால் அச்சு செலவுகளும் மிக அதிகமாகியுள்ளது. நூல்களின் உற்பத்திச் செலவு முன்னரை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.

தனது நூலை படைப்பாளி புத்தக நிலையங்களுக்கு கொடுத்து விற்பனை செய்வதற்கு அவர்களுக்கு 30 வீதம் கழிவு கொடுக்க வேண்டும். ஆகவே, உற்பத்திச் செலவுடன் கழிவு வீதத்தையும் சேர்த்தே விலையை தீர்மானிக்க வேண்டும். 

இந்நிலையில் அதிகரித்த புத்தகத்தின் விலையை வாசகர்களே சுமக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நூலின் விற்பனையை பாதிக்கும். இதன் காரணமாக படைப்பாளி உற்பத்திச் செலவையே நூலின் விலையாக தீர்மானிக்கும்போது கழிவு மற்றும் நூலை தபாலில் அனுப்புவதற்கு ஏற்படும் செலவு, இலவச பிரதிகள் என உண்மையில் ஒரு நூலை வெளியிடும் படைப்பாளி மிகவும் பாதிக்கப்படுகின்றான். இதற்கு தீர்வு காணவே அவன் வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்து சிறப்பு பிரதிகளை வழங்குவதற்கு முயல்கிறான். இதனையும் பணச்சடங்கு என விமர்சிக்கும் பல படைப்பாளிகளும் உள்ளனர். 

இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி வெற்றி பெற்றவர்களே தொடர்ந்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க முடியும். நூல்களை வெளியிட முடியும்.

எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையிலான புரிதல் தற்போது எந்த மட்டத்தில் உள்ளது?

ஈழத்திலே தமிழ் பதிப்பகத்துறை மிக அரிதாகவே உள்ளது. சிங்கள மொழியில் இருப்பது போன்று கொடகே, எம். டீ. குணசேன போன்ற பாரிய நூல் வெளியீட்டு நிறுவனங்கள் இல்லை. இருக்கும் ஓரிரு நிறுவனங்களும் படைப்பாளிகளிடம் பணத்தினை பெற்றே நூல்களை வெளியிடுகின்றன. 

சில நிறுவனங்கள் தமது விற்பனை நோக்கம் கருதி புனைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பாட ரீதியான ஆய்வு நூல்களை வெளியிடுகின்றன. தமிழ் நூல்களுக்கான சந்தை என்பது இலங்கையில் மிக குறுகியது. எனவே, ஒரு படைப்பாளனுக்கும் பதிப்பாளருக்கும்  இடையிலான புரிதல் என்பது சாதகமான நிலையில் இல்லை என்றே கூறுவேன். இதற்கு யாரையும் குற்றம் சொல்ல முடியாது. 

எழுத்தாளர் மற்றும் பதிப்பாளராக கூறுங்கள்...  இலக்கிய விழாக்கள், புத்தக கண்காட்சிகளில் பதிப்பாளருக்கான வகிபாகம் என்ன? 

இன்று இலங்கையை பொறுத்தளவில், இலக்கிய விழாக்கள், புத்தக கண்காட்சிகளில் ஒரு சில பதிப்பகங்கள் தமக்கென விற்பனை நிலையங்களை பெற்று, நூல் விற்பனைகளில் ஈடுபடுகின்றன. இது நல்லதொரு செயற்பாடாகும். வெறுமனே புத்தக நிலையங்களின் விற்பனையை மட்டுமே நம்பியிராமல், இத்தகைய செயற்பாடுகள் மூலமாக நூல்களை வாசகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், நூல்களுக்கான ஓர் அறிமுகத்தை பெறவும் இது உதவுகிறது. இப்படியான புத்தக திருவிழாக்களில் மகுடம் வெளியீடுகளையும் காட்சிப்படுத்தி, விற்பனையில் ஈடுபடுத்தி வருகிறோம். 

நூல் வெளியிடுவதற்கு பொருளாதார வசதி கைகொடுக்காத நிலையில் உள்ள எழுத்தாளர்களுக்கு பதிப்பாளராக எத்தகைய உதவிகளை செய்துள்ளீர்கள்?

மகுடம் பதிப்பகம் இதுவரை எழுத்தாளர்களின் பணத்தில் அவர்களது விருப்பத்துக்குரிய அளவிலும், தரத்திலும் நூல்களை வெளியிட்டு கொடுக்கிறது. ஒரு நூலின் படைப்பாக்கத்தில் உள்ள புத்தக வடிவமைப்பு, அட்டைப்படம், நூல் செலவை பார்த்தல், சர்வதேச குறியீட்டு எண் பெறுதல் போன்ற பணிகளை பதிப்பக ரீதியில் நாம் இலவசமாக செய்து கொடுக்கிறோம். 

மேலும், நூல் வெளிவந்த பின்னர் அதன் விற்பனைக்கும், பரவலான அறிமுகத்துக்கும் உதவி செய்கிறோம். 

புலம்பெயர் படைப்பாளிகளின் நூல்களை அவர்களது விருப்பத்துக்கேற்ப செய்து கொடுக்கிறோம். மகுடம் வெளியீடுகளில் பாதிக்கு மேலாக இருப்பது புலம்பெயர் படைப்பாளிகளின் நூல்களே. 

வாசகர்கள் தமக்கு பிடித்த எழுத்தாளர்கள் அல்லது தமக்கு பிடித்த பதிப்பகத்தின் நூலை மட்டுமே வாங்குவதாக இலக்கிய உலகில் பேசப்படுகிறது. இது உண்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது தவறில்லை. சந்தையை பொறுத்தளவில் வாடிக்கையாளர் அரசன் என்ற நிலையில் இருந்து கடவுள் என்ற நிலைக்கு உயர்ந்துவிட்டார். வாடிக்கையாளரின் விருப்பு,வெறுப்பு, அவர்களது தெரிவு முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் வாசகர்களும் தமக்கு தேவையான, தாம் விரும்பிய நூல்களை வாங்குவதில் தவறில்லை. 

எந்த ஒரு பொருளின் பரவலான அறிமுகத்துக்கும் விற்பனைக்கும் விளம்பரம் முக்கியம். இது நூல்களுக்கும் பொருந்தும். 

இந்த நூல் இப்படி, இதில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கிறது என சொன்னால்தானே வாசகனுக்கு புரியும். பணம் கொடுத்து நூலை வாங்குபவன் அவன். அவனுக்கு அவனது ரசனை, தெரிவு முக்கியமல்லவா? 

எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த நீங்கள் கையாளும் முறைகள்?

எங்களை அணுகும் எழுத்தாளர்களின் நூல்களை மிகத் தரமாகவும் நேர்த்தியாகவும் அழகிய வடிவமைப்பிலும் வெளியிட்டுக் கொடுப்பதுடன், அவர்களது நூல்களுக்கு தொடர்ச்சியான அறிமுகத்தையும் விளம்பரத்தையும், நூல்களை எங்கெங்கு விற்பனை செய்ய முடியும் என்பது போன்ற ஆலோசனைகளையும் வழங்குகிறோம். பல படைப்பாளிகளின் நூல்களை நாங்களே பல இலக்கிய போட்டிகளுக்கும் கண்காட்சிகளுக்கும் அனுப்பி வைக்கின்றோம். 

மா. உஷாநந்தினி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right