இர. சிவலிங்கத்தின் பண்ணையில் வளர்க்கப்பட்ட சாரல் நாடன்

Published By: Vishnu

29 Jul, 2022 | 11:04 AM
image

எச்.எச்.விக்ரமசிங்க (பதிப்பாசிரியர்) 

சாரல் நாடன் அவர்கள் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற நாவலின் வெளியீட்டு விழா 31.07.2022 ஞாயிறு அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தில் சு. முரளிதரன் தலைமையில் நடைபெறுகின்றது.

மலையகத்தில் அறுபதுகளில் கிளர்ந்த கல்வி எழுச்சியின், சமூக விழிப்புணர்வின், இளைஞர் சிந்தனையின் மைய நாயகனாகத் திகழ்ந்த இர.சிவலிங்கத்தின் பண்ணையில் வளர்க்கப்பட்ட சாரல்நாடன் மலையக இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தினை வகிக்கிறார். ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் அதிபராக இர.சிவலிங்கம் சேவையாற்றிய காலத்தில், அவரின் கீழ் மாணவனாகப் பயின்ற சாரல்நாடன், சிவலிங்கம் அவர்கள் சாரல்நாடன்  மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையை மெய்ப்பித்துக் காட்டியிருந்தார்.

கவிதையில் ஆரம்பித்து, சிறுகதை, குறுநாவல், நாவல், வாழ்க்கை வரலாறு, இலக்கிய வரலாறு என்று இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் தன் எழுத்தாற்றலை நிரூபித்தவர் சாரல்நாடன்.

மலையக  இலக்கியத்தில் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தானே சாரல் வெளியீட்டகத்தை நிறுவி, மலையகப் படைப்புகளுக்கு நூல் வடிவம் தந்தார். சி.வி.வேலுப்பிள்ளையின் 'வாழ்வற்ற வாழ்வு' என்ற நாவலைத் தேடிப்பிடித்து அதனை நூலாக வெளியிட்டு அதற்கு நிரந்தர வாழ்வளித்தார்.

போப் துரை கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்று தியாகிகளாக மறைந்த வீராசாமி, வேலாயுதம் ஆகியோரின் வாழ்க்கைப் போராட்டத்தின் பின்னணியில் சாரல்நாடன் எழுதிய   'வானம் சிவந்த நாட்கள்' என்று வீரகேசரியில் தொடராக எழுதிய நாவலை, நூலாக்கும் முயற்சியில் அனைத்து வேலைகளையும் முடித்த நிலையில், துரதிர்ஷ்டமாக அவர் மரணித்தது அந்நூல் வெளியீட்டை சாத்தியமற்றதாக்கிவிட்டது. அவர் மறைந்து எட்டு ஆண்டுகள் கழிந்து, இன்று அந்நூலை வெளியிட்டு வைப்பதில் நாங்கள் பெரும் மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைகின்றோம். இது சாரல்நாடனின் ஆத்மநிறைவுக்கு நாங்கள் வழங்கும் சிறு படையலாகும்.

இந்நாவலுக்கு முன்னுரை எழுதித் தருமாறு லண்டனில் வாழும் இலக்கிய விமர்சகரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான மு.நித்தியானந்தன் அவர்களைக் கேட்டபோது, தனக்கேயுரிய ஆய்வு முத்திரையுடன் அவர் வழங்கியுள்ள முன்னுரைக்காக நாங்கள் அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறோம். மலையக இலக்கிய முயற்சிகளில் எங்களின் செயற்பாடுகளுக்கு என்றும் உற்சாகமும் ஆதரவும் தரும் அவரின் உயர்ந்த மனதிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

நூல் வடிவமைப்பில் தமிழ்ப் புத்தக உலகில் தலைசிறந்த வடிவமைப்பு ஓவியராகத் திகழும் கே.கே.ராஜா அவர்கள் இந்த நூலுக்கு அட்டைப்பட ஓவியத்தை வடித்துத்தந்திருப்பது நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. தெளிவத்தை ஜோசப்பின் 'நாமிருக்கும் நாடே”,  என்.எஸ்.எம்.ராமையா வின் 'ஒரு கூடைக்கொழுந்து”, சி.வி.வேலுப்பிள்ளையின் 'வீடற்றவன்” ஆகிய நூல்களுக்கு அட்டைப்படம் வரைந்த பெருமைமிகு ராஜாவின் ஓவியத் தூரிகையில் இந்த நூலின் அட்டைப்படம் உருப்பெறுவது நமது பாக்கியமாகும்.  தனது வேலைப்பளுவிற்குள் இந்நூலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தன் அரிய நேரத்தை ஒதுக்கி உதவியதற்கு எங்கள் நன்றி என்றும் உரியது.

சிரமம் பாராமல் இந்நூலினை மொய்ப்புப்பார்த்து உதவிய திரு. இ.பத்மநாப ஐயருக்கும் நாங்கள் நன்றிக்குரியவர்கள். 

எழுச்சித் தலைவர் பி.சந்திரசேகரம் அவர்கள் நினைவாகவும், பத்திரிகைத் துறையில் மலையகத்திற்கு சேவையாற்றிய எஸ்.எம்.கார்மேகம் அவர்கள் நினைவாகவும், மலையகத்தின் எழுச்சிக்கவிஞர்  பெரியசாமி அவர்களை நினவுகூர்ந்தும் நாங்கள் வெளியிட்ட நூல்கள் மலையக மக்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.  

நல்லுணர்வோடு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளின் சிரமத்தை உணர்ந்து, நமது உழைப்பையும் முயற்சியையும் மதித்துப்போற்றும் நல்லுள்ளங்களுக்கு நாம் நன்றி நவில்கின்றோம்.

சாரல்நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' என்ற இந்நாவல்  தமிழ்கூறு நல்லுலகில் வரவேற்பைப்பெரும் என்று நம்புகிறோம். 

இந்த நூலின் முதலாவது வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது குறிப்பிட்டதாக்கதாகும். மேலும் லண்டனில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாட்டில் (2022) சாரல் நாடன் என்ற பெயரில் அரங்கு அமைக்கபட்டு அவர் நினைவுகூறப்பட்டது குறிப்பிட்டதாக்கதாகும்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right