நாட்டில் மழையுடனான காலநிலை நீடிப்பதால் இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு நேற்று மாலை விடுக்கப்பட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் மாத்தறை, தொட்டமுன, தெவிநுவர, வல்கம, பீக்வெல்ல மற்றும் பொல்ஹதுமோதர ஆகிய பிரதேசகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

பீக்வெல்ல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் 6 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மழையுடனான காலநிலை காரணமாக களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர் மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளன. நில்வளா கங்கையின் நீர் மட்டமும் அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.