கவிதாயினிகள் இணைந்த முதல் தொகுப்பு

By Nanthini

26 Jul, 2022 | 02:48 PM
image

டைந்து சிதறிய கண்ணாடிகள் உருவத்தைக் காட்டாமல் இருக்காது. படைப்புக்கள் எங்கெங்கு பரவிக் கிடந்தாலும் அதன் வீரியமும் உணர்வும் கட்டுக்குள் அடங்காது.

80களில் ஆங்காங்கே தலைகாட்டி வந்த எழுத்தார்வம் மிக்க பெண் படைப்பாளிகளின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், வரலாற்றுப் பதிவுகள்... முதலியன நூல் வடிவம் பெற்றன.

அதே சமயம் எண்ணற்ற பெண்களின் படைப்புகள் தரமானவையாக இருந்தும் அவை சமூகத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் 'சொல்லாத சேதிகள்' கவிதைத் தொகுப்பு வெளியானது.

நாடகத் தமிழறிஞரும் பேராசிரியருமான சி. மௌனகுருவின் துணைவியார் சித்திரலேகா மௌனகுரு இக்கவிதைகளை 1986ஆம் ஆண்டு தொகுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த அ. சங்கரி, சி. சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூறா. ஏ. மஜீட், ஓளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய 10 பெண் கவிஞர்களின் மிகச் சிறந்த 24 கவிதைகள் இத்தொகுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளன. இவர்களுள் சிலர் பாடசாலை மாணவியராக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலேயே முதன்முதலாக பெண் கவிஞர்களின் கவிதைகளை ஒன்றிணைத்த நூல் என்ற பெருமையும் இதற்குண்டு.

ஒரு பெண்ணின் இயல்பான எதிர்பார்ப்புகள், ஆதங்கங்கள், கனவுகளை இன்னொரு பெண்ணால் தான் உணர முடியும் என்ற ரீதியில் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிபலிப்பாளர்கள், இவர்கள்.

பெண்ணியவாதிகளின் பேசு பொருள்களான சுதந்திர வேட்கை, பாலியல் வன்முறைகள், பருவ உணர்வுகள், சமூகக் கட்டுப்பாடுகள், வாழ்க்கைத் தேவைகள்... பற்றிய கருத்துக்கள் செறிந்துள்ள இக்கவிதைகளுக்கு அழகே, அதன் வசன நடையும் இலகுவான மொழியமைப்பும் ஆகும்.

இனி கவிதைகளில் இருந்து சில மேற்கோள்கள்...

துள்ளிக் குதித்து விளையாடி, மரத்தில் ஏறி தாவி, ஓடியாடி மகிழ்ந்த சிறுமி, பருவமடைந்த பின் பேசுவதற்கும் உரத்துச் சிரிப்பதற்கும் கதைப்பதறகும் என ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகள் சமூகத்தில் விதிக்கப்படுகிறது. அதனால் அவள் கல், பாறை, பனியை போல் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத சடப்பொருளாய் மாற வேண்டி நிர்பந்திக்கப்படுகிறாள்.

'இன்று நான் பெரிய பெண்' என்ற கவிதையில்....

நான்

கல்லாய் மாறிய பூ

பாறையாய் இறுகிய காற்று

பனியாய் உறைந்த நீர்

கற்பு என்ற வெற்று வாசகத்துக்குள் பெண்களை மட்டும் சிக்க வைத்த சில ஆண்கள், பெண்களை எலும்பும் சதையும் கொண்ட கவர்ச்சியான உருவமாக மட்டுமே பார்க்கின்றனர். ஏன் அவர்களுக்கு உணர்வில்லையா, ஆத்மா இல்லையா....?

'அவர்கள் பார்வையில்' கவிதையிலிருந்து..

அவர்களின் பார்வையில் -

இரண்டு மார்புகள்

நீண்ட கூந்தல்

சிறிய இடை

பருத்த தொடை

இவைகளே உள்ளன

.....................................................

கற்பு பற்றியும்

மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்

கதைக்கும்

அவர்கள்

எப்போதும் எனது உடலையே

நோக்குவர்

கணவன் தொடக்கம்

கடைக்காரன் வரைக்கும்

இதுவே வழக்கம்.

நூலின் முழுமையை வாசித்து உணருங்கள்!

- எம். சித்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right