logo

பொன்னியின் செல்வனும் இலங்கையும்

Published By: Digital Desk 5

25 Jul, 2022 | 04:34 PM
image

குமார் சுகுணா

இலங்கையில் பூங்குழலியோடு  யானை மீது சவாரி செய்த அருண்மொழிவர்மன். இந்த மண்ணுக்கு மன்னனாக முடி சூட்டிக்கொள்ளுமாறு பிக்குகள் கோரிக்கை விடுத்த போதும் அதனை விட்டு தமிழ்நாட்டை காப்பாற்ற கடல் தாண்டி சென்றான். கோடிக்கரையில்  கப்பலிலும்... படகிலும்  பயணித்தவன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக மாறி  ராஜராஜசோழனாக தெற்கே குமரி முதல் வடக்கே வேங்கடம் வரை ஆட்சி புரிந்தான்.

உலக அதிசயமான தஞ்சை பெரியார் கோயிலை கட்டியமைத்து ஆயிரம் வருடங்களுக்கு மேலும் , நீங்க புகழுடன் மரணத்தை கடந்து வாழும் அவனை  நாம் நேரில் காணாது தவறவிட்டோம் என்ற குறையை  கல்கி பொன்னியின் செல்வனில் தீர்த்திருப்பார். பொன்னியின் செல்வன் என்பதும் ராஜராஜனின் இன்னொரு பெயர்தான்.

நமது பண்பாடு கலாசாரம் என நமது இரத்தத்தில் ஊரிப்போன அம்சங்களை பறைசாற்றும் பொன்னியின் செல்வனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது. அந்த கடமையை  எம்.ஜி.ஆர் முதல் கமல் வரை  செய்வதற்கு முயற்சித்து முடியாமல் போய்விட்டது. ஆம் திரைப்பட வடிவமாக பொன்னியன் செல்வனை உருவாக்க நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.  இந்நிலையில்  இயக்குநர் மணிரத்தினம் இன்று களத்தில் இறங்கியுள்ளார்.   

ராஜராஜ சோழன் பற்றிய கல்கியின் நவாலை சினிமாவாக எடுக்கப்போகும் மணிரத்தினம் படப்பிடிப்புக்காக இலங்கை வந்ததாக செய்திகள் சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தன.  இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் இலங்கையில் மணிரத்னம் படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்பட்டது. தற்போது படத்தின் வெளியீடு தொடர்பான செய்தியும் வந்துவிட்டது.

இந்நிலையில், ராஜராஜ சோழனுக்கும்   இலங்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று  பார்ப்போம், ராஜராஜ சோழன் ஆரம்ப காலத்தில் அதாவது இளமைக்காலத்தில்  இலங்கையில்தான்  வாழ்ந்திருக்கிறார் .

சோழர்கள் காலத்தில் அவர்களின் மாகாணங்களில் ஒன்றாகவே  இலங்கை இருந்திருக்கிறது.   ராஜராஜசோழனின் சிறுவயதில்  அவரது பெயர் அருண்மொழிவர்மன்.

அவர் குழந்தையாக இருக்கும்பொழுது   பொன்னி நதியில் தவறி விழுந்து விடுகிறார்.  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவரை  காப்பாற்றியது பொன்னி நதி என கருதப்பட்டதினாலேயே,  அவருக்கு பொன்னியின் செல்வன் என்ற பெயர் உருவானது.  அந்தப் பெயரிலேயே கல்கி காவியம் படைத்தார். அதனை தழுவியே  மணிரத்தினம் இப்பொழுது  திரைப்படத்தை எடுக்கிறார்.

ராஜராஜசோழன் இலங்கையில் வாழ்ந்த பொழுது அனுராதபுரம், பொலனறுவை ,தம்புள்ளை , சீகிரியா போன்ற பிரதேசங்களில் அவர் வலம் வந்திருக்கிறார் வாழ்ந்திருக்கிறார்.

கல்கியின் நாவலில் ஒரு காட்சி இலங்கையை அத்தனை அழகாக காட்டுகின்றது. ஆம், அப்போது இளவரசராக இருந்த ராஜராஜசோழன் இலங்கையில் இருந்த கால கட்டம். வந்திய தேவன் இந்தியாவிலிருந்து கடல்வழி மார்க்கமாக  அவரை பார்ப்பதற்காக  இலங்கை வருவார். 

அப்போது இலங்கை தொடர்பான ஒரு காட்சி, "

‘’வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான்.

அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி தங்கப் பட்டாடை புனைந்து கொண்டு ஜொலித்தாள். அவனுக்கு எதிரே படகு போய்க் கொண்டிருந்த திசையில் ஒரு மரகதத் தீவு நீலக் கடலாடை போர்த்துக்கொண்டு விளங்கியது. வலப்புறத்தில் அதே மாதிரி இன்னொரு பச்சை வர்ண பூமிப் பிரதேசம் காணப்பட்டது.

அது நாலு புறமும் கடல் சூழ்ந்த தீவா அல்லது நீண்டு பரந்து வியாபித்துள்ள பூமிப் பிரதேசமா என்று நன்றாகத் தெரியவில்லை. இரண்டு மரகதப் பிரதேசங்களுக்கும் ஊடே பார்த்தால் தூரத்தில் அத்தகைய இன்னும் பல தீவுகள் பச்சை நிறத்தின் பல்வேறு வகைக் கலவைகளுக்கு உதாரணமாகத் தோன்றிக் கொண்டிருந்தன.

படகிலிருந்தபடியே நாலுபுறமும் சுற்றிப் பார்த்தால், வானவில்லின் ஏழுவித வர்ணங்களும் அதன் ஏழாயிரம் வகைக் கலவை நிறங்களும் திகழ்ந்தன. மொத்தத்தில் அந்தக் காட்சி கண்ணெதிரே காணும் உண்மைக் காட்சியாகவே தோன்றவில்லை. ஓவியக் கலையில் தேர்ந்த அமர கலைஞன் ஒருவன், "இதோ சொர்க்கலோகம் எப்படியிருக்கும் என்று காட்டுகிறேன்!" என்று சபதம் பூண்டு தீட்டிய வர்ணச் சித்திர அற்புதம் போலவே தோன்றியது.

இந்தக் காட்சியைக் கண்டு மெய்ம்மறந்து நினைவிழந்திருந்த வந்தியத்தேவனுடைய செவியில், "இது சொர்க்கம் அல்ல; இது இலங்கை!" என்ற வார்த்தைகள் விழுந்து அவனை விழிப்படையச் செய்தன.

"ஆம்! இது சொர்க்கமோ என்று நான் சந்தேகித்தது உண்மைதான்!" என்றான் வந்தியத்தேவன்.

"இது சொர்க்க பூமி அல்ல; ஆனால் சொர்க்கம் போன்ற பூமி. இந்த சொர்க்கத்தை நரகமாக்குவதற்கு மனித உருக் கொண்ட அசுரர்கள் வெகு காலமாகப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள்" என்றாள் பூங்குழலி.

உண்மைதான் பூங்குழலி சொல்லியது போல பல அரக்கர்களினால் இந்த சொர்க்க பூமி இன்று நரகமாக காட்சியளிக்கின்றது.

வந்தியதேவனை போலவே ஆழ்வார்கடியேனும் இலங்கை  வருவதும் இங்கு பல சம்பவங்கள் நடைபெறுவதும் நாவலில் சிறப்பாக வர்ணிக்கப்பட்டிருக்கும்.

இலங்கையில் தம்புள்ளை  குகைவரை  கோயிலில் புத்தருடைய ஓவியம் , புத்தர்சிலைகள்தான் அதிகம் உள்ளன. அது மட்டும் அல்லாது விஸ்ணு ஆலயம் அருகில் மலையோடு ஒட்டி உள்ளது. அங்கு பெளத்த பிக்குகளே அதிகம் உள்ளனர். இந்த குகை ஒரு பிரதான சுற்றுலாத்தலமும் கூட.  கற்களால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஒரு குகைக்கோயில்தான்.  இதேபோல சிகிரியா என்பது மலை குன்று.

தட்டையான பகுதியில் ஒரு சிங்கம் படுத்திருப்பது போல இருக்கும்.  அந்த குன்றின் மேல்தான்    உலகப் புகழ்பெற்ற சிகிரியா ஓவியங்கள் உள்ளன. காசியப்பன்தான் அந்த ஓவியங்களை வரைந்ததாக கூறப்படுகின்றது. பொன்னியின் செல்வன் நாவலில்   ராஜராஜா சோழனின் வருகை  இங்குதான் ஆரம்பமாகும். இந்த சிகிரியாவிலிருந்து சீன யாத்திரிகளோடு  யானைப் பாகனாக அவர்களை அழைத்துக்கொண்டு ராஜராஜசோழன் சிகிரியாவில் இருந்து வருவார் அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும்  தம்புள்ளையில் நின்று கொண்டிருப்பார்கள் .

சிகிரியாவில் இருந்து ராஜராஜ சோழன் சீன யாத்திரிகர்களை யானையில் ஏறிக்கொண்டு யானைப் பாகனாக வரும் போது  அவரது முகம் மூடி இருக்கும். இப்பொழுது நாம் கொரானாவுக்கு மூடியிருப்பது போல துணியால் மறைத்திருப்பார்.  அவருடைய கண்கள் மட்டும் மிளிரும். அந்தக் கண்களின் ஒளியை  வைத்து ஆழ்வார்க்கடியான் இதுதான் ராஜராஜ சோழன் என்று கண்டுபிடித்து விடுவார். தம்புள்ளை குகைவரை கோயில் சிகிரியா தொடர்பில் காட்சிகள் பொன்னியின் செல்வனில் இடம் பெற்றிருக்கும்.

அதுபோல இலங்கையில் நடக்கும் பெரஹரா, தோரணங்கள் பொன்னியின் செல்வன் நாவலில் திரைப்படம் போல எழுதப்பட்டிருக்கும், அனுராதபுர வீதியில் பெரஹேரா வரும் காட்சிகள் நாம் இன்று பார்ப்பது போலவே இருக்கும்.

மேலும், பொன்னியின் செல்வனின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும் மந்தாகினி இலங்கையில் காடுகளில் சுற்றித்திரிவது போலவும் காட்சிகள் அமைந்திருக்கும். மந்தாகினியை வாய் பேச முடியாத ஊமைப்பெண் என்றே குறிப்பிடுகிறார் கல்கி. ராஜ ராஜ சோழனுக்கு சிறுவயதில் இருந்து   வரும் ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுளாக மந்தாகினி தேவி வருகிறார். எளிய உடை அணிவதிலும், மக்கள் இல்லாத இடங்களிலும் இருக்க ஆசை கொள்கிறாள்.

இறுதியாக சுந்தர சோழருக்கு வரும் ஆபத்திலிருந்து அவரை காத்து தான் மடியும் வரை சோழரின் குடும்பத்தின் மீதான பாசத்தினை வெளிக்காட்டும் அபலைப் பெண்ணாகவே மந்தாகினி வாழ்ந்து மடிகிறார். அனுராத புரத்தில் ராஜராஜ சோழன் இருக்கும் போது அவர் மீது சுவர் ஒன்று இடிந்து விழ போகும், . அந்த ஆபத்தில் இருந்தும்  கூட மந்தாகினிதான் ராஜராஜசோழனை காப்பாற்றுவார்.

அடுத்து பூங்குழலியும் ராஜராஜசோழனும் காதல் வசப்படுவது என அனைத்தும் இலங்கையிலேயே அதிகம் நடப்பதாக இருக்கும்.

இப்படி பொன்னியின் செல்வனின் பாதி கதை இலங்யைில்தான் நடக்கும். இது வெறும் கற்பனை என்று கூறிவிட முடியாது காரணம், இன்றும் சோழர்களினால் கட்டப்பட்ட சிவாலயங்கள் பல பொலன்னறுவையில் இன்றும் இருப்பது இதற்கு சான்று.

பொன்னியின் செல்வனை வாசிக்கும் போதே திரைப்படம் பார்ப்பது போலதான் இருக்கும். இந்த அழகு குறையாமல் இதனை  திரைப்படமாக எடுக்கும் சவால்  இயக்குநர் மணிரத்னத்துக்கு  இருக்கின்றது.

பலரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க நினைத்து கடைசியில் கைவி்ட்டனர். மணிரத்தினம் கூட இதற்கு முன்னர் விஜய், மகேஸ்பாபு போன்றவர்களை வைத்து  திரைப்படம் எடுக்க நினைத்தவர்தான். ஆனால் அது முடியாமல் போய்விட்டது..

இந்நிலையில் ,தற்போது திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வர இருக்கின்றது. காத்திருந்து பார்ப்போம் ராஜராஜ சோழன் சுற்றிதிரிந்த நம் தேசத்தை மணிரத்னத்தின் கலையின் ஊடாக.. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் உலக அறிவிப்பாளர் அல்ல ! ...

2023-06-09 10:34:12
news-image

1978 இல் தங்கம் கடத்தி விமான...

2023-06-06 09:53:32
news-image

மதத்தை மகுடியாக பயன்படுத்தும் அரசியல் :...

2023-06-05 15:32:02
news-image

சேறு குளித்த விக்னேஸ்வரன்

2023-06-05 14:26:13
news-image

போர்க்குற்ற ஆதாரங்களை அழித்தல் அசிரத்தையா, அரசியலா?

2023-06-05 14:34:34
news-image

‘பீச் கிராப்ட்’ கொடையின் பின்னணி

2023-06-05 12:40:30
news-image

வருகிறதா இன்னொரு நெருக்கடி?

2023-06-05 12:25:12
news-image

நிராகரிக்கப்பட்ட அரசியலில் தப்பிப் பிழைத்தல்

2023-06-06 09:56:35
news-image

தனிமனிதன் கூட அடக்குமுறை அமைப்பை எதிர்கொள்ள...

2023-06-05 11:57:39
news-image

ஊடக சுதந்திரங்களை ஒடுக்கும் பாதையில் செல்லக்கூடாது

2023-06-05 09:54:55
news-image

தேசமாக முன்னேற நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி...

2023-06-05 12:07:29
news-image

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கவே...

2023-06-04 18:17:23