கறுப்பு ஜூலைக்கு பிறகு கடந்துவிட்ட நான்கு தசாப்தங்கள்

25 Jul, 2022 | 01:05 PM
image

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட படுமோசமான இன வன்செயல்கள் 39 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்திலேயே நாடு பூராவும் பரவத்தொடங்கின.

1983 ஜூலை 23 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தின்  திருநெல்வேலியில் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்ட கெரில்லா தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அரசாங்கத்திற்குள் செல்வாக்குடன் இருந்த இனவெறிச்சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டிருந்த வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு வசதியான வாய்ப்பாக அமைந்தது.

   

இலங்கையின் வரலாற்றில் அந்த ஜூலை மாதம் ஒரு எல்லைக்கோடு. எதுவுமே மீண்டும் முன்னரைப் போன்று இருக்கப்போவதில்லை என்பதை உணர்த்திய அனர்த்தங்கள் மிகுந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை ( Black July ) என்று வர்ணித்தார். அந்த ஜூலைக்கு பிறகு இலங்கையில் சகலதும்  கறுப்பாகவே இருந்து வந்தது என்று இன்னொரு சிங்கள பத்திரிகையாளர் குறிப்பிட்டதும் நினைவில் இருக்கிறது.

ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்முறைகளின் கொடூரம், அதனால் விளைந்த உயிரிழப்புகள்  மற்றும் சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் மனங்களில் வேரூன்றிய வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் உண்மையில் கணிப்பிடமுடியாதவையாகும். 

கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக நீடித்த உள்நாட்டுப்போரில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் அதன் விளைவான அவலங்களும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விட எத்தனையோ மடங்கு அதிகமானவை என்ற போதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு பிரத்தியேகமான ஒரு எதிர்மறைக் குறியீடு இருக்கிறது.

   

கறுப்பு ஜூலை வன்செயல்களினால் நாடு பூராவும் அவலத்தை சந்தித்த தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் அகதிமுகாம்களில் அடைக்கலம் புகுந்திருந்தபோது அவர்களுக்கு ஒரு அனுதாப வார்த்தையை அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல்வாதியும் கூறமுன்வரவில்லை.

வன்செயல்கள் தொடங்கி ஒரு வாரத்துக்கு பின்னர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை நாட்டுப் பிரிவினைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான கொந்தளிப்பு என்று வர்ணித்தாரே தவிர, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

வன்செயல்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிசாரும் வன்முறைக்கும்பல்களுக்கு உதவியாகவே பெரும்பாலும்  செயற்பட்டனர்.

அந்த வன்முறைகளை கட்டுப்படுத்த ஏன் உடனடியாக கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்று ஜெயவர்தனவிடம் கேட்டபோது அவர்,

" கடுமையான புயல் வீசும்போது மரம் சாய்ந்துகொடுக்க வேண்டுமே தவிர எதிர்த்துநிற்பதில் பயனில்லை " என்று கூறியதாக பல பிரதமர்களுக்கும் ஜனாதிபதிகளுக்கும் ஆலோசகராக இருந்த மூத்த நிர்வாகசேவை அதிகாரி பிரட்மன் வீரக்கோன் தனது சரிதையில்  குறிப்பிட்டிருந்தார்.

   

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தன ஒருபோதும் தமிழர்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை. பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக கறுப்பு ஜூலைக்காக மன்னிப்புக் கோரினார் என்பது கவனிக்கத்தக்கது.

1983 ஜூலை 11 அதாவது தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு இரு வாரங்கள் முன்னதாக ' டெயிலி ரெலிகிராவ் ' பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி ஜெயவர்தன, " யாழ்ப்பாண மக்களின் ( தமிழர்களின் ) அபிப்பிராயத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி எங்களால் இப்போது சிந்திக்கமுடியாது. அவர்களின் உயிர்களைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றியோ எமக்கு அக்கறையில்லை. வடக்கு மீது நாம் எவ்வளவுக்கு நெருக்குதல்களைக் கொடுக்கிறோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டேனென்றால், சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் " என்று கூறியிருந்தார்.

தமிழர்களைக் கொடுமைப்படுத்தினால்,  சிங்கள மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைவார்கள் என்று இல்லை. ஆனால் சிங்கள மக்கள் பற்றி அவ்வாறு ஒரு அபிப்பிராயத்தை  ஜெயவர்தன கொண்டிருந்தார் என்பது  தான் உண்மை.

1977 ஜூலை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி  மாபெரும் வெற்றியைப் பெற்று பிரதமராக ஜெயவர்தன பதவிக்கு வந்தததையடுத்து அடுத்த மாதம் தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர். 

அந்த வன்செயல்களுக்கு மத்தியில்  ஜெயவர்தன பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்தை நோக்கி " சமாதானம் என்றால் சமாதானம் , போர் என்றால் போர் " என்று கூறினார்.  

அதற்கு இரு தசாப்தங்களுக்கும் சற்று  கூடுதலான காலத்துக்கு முன்னர் 1956 ஜூன் 5 தனிச்சிங்கள சட்டத்தை அன்றைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தியது. பொலிசார் பார்த்துக்கொண்டு நிற்க காடையர்கள் சத்தியாக்கிரகிகளை தாக்கினார்கள். அதில் காயமடைந்தவர்களில் அமிர்தலிங்கமும் ஒருவர். 

   

தலையில் தனது காயத்துக்கு கட்டுப்போட்டுக்கொண்டு   அவர் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது பண்டாரநாயக்க " கௌரவ போர்க்காயங்களே "( Honourable wounds of war ) என்று விளித்துப்பேசினார்.

ஜெயவர்தன போர் என்றால் போர் என்று பேசியதையும் பண்டாரநாயக்கவின் போர்க்காயங்களே என்ற பேச்சையும் நோக்கும்போது தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே (தமிழர்கள் ஆயுதமேந்துவதற்கு வெகு முன்னதாகவே ) பார்த்தார்கள் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. இறுதியில் அந்தப் போர் வந்து சேருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்கு பின்னரானவை அண்மைக்கால வரலாறு.

கறுப்பு ஜூலை இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு வழிவகுத்தது. அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி கறுப்பு ஜூலையில் நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார். அவர் வந்து சேர்ந்த தினம் (ஜூலை 29 வெள்ளிக்கிழமை) கொழும்புக்கு புலிகள் வந்திருப்பதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள்  தமிழர்களுக்கு எதிராக  படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே கூடுதலான கொலைகள் இடம்பெற்றன என்று கூறப்படுவதுண்டு.

 தமிழர்களின் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்காகவே நரசிம்மராவ் வந்திறங்கிய தினம்  இனவாதச் சக்திகள்  வன்முறையை மீண்டும் கட்டவிழ்த்துவிட்டன.

1984 அக்டோபர் 31 பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தியா பூராவும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறைகள் மூண்டன. அந்த வன்முறைகளுடன் கறுப்பு ஜூலையை ஜனாதிபதி ஜெயவர்தன ஒப்பிட்டுப்பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது.

தாயாரின் கொலையை அடுத்து பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டித்து " இந்த பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்துங்கள் " (Stop this madness) என்று வன்முறைச் சக்திகளைக் கேட்டுக்கொண்டார்.ஆனால்,ஜெயவர்தன கறுப்பு ஜூலை வன்முறைச் சக்திகளை ஒருபோதும் அவ்வாறு கண்டித்ததுமில்லை, தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு பகிரங்கமாக கேட்டுக்கொண்டதுமில்லை.மாறாக அவர் வன்முறைகளை நியாயப்படுத்தும்வகையில் சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று நியாயப்படுத்தினார் என்பது கவனிக்கத்தக்கது.

கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்வில்தான் அக்கறை காட்டின. சமாதான முயற்சிகள் எல்லாம் வேறு மார்க்கத்திலான போராகவே அமைந்திருந்தன.

சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர இராணுவத்தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்துவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று  காணப்படுவதற்கு உதவுவதற்குப்  பதிலாக இராணுவத்தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது.

  இறுதியில் சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு கிடைக்கச்செய்தன.போரில் அரசாங்கப் படைகள் வெற்றிபெறுவதற்கு வழிவகுத்த உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய  ஒரே ஜனாதிபதி தானே பெருமைப்பட்ட ராஜபக்ச போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு தனது அரசியல் வியூகங்களையும் வகுத்து சிங்கள மக்கள் மத்தியில் உச்சபட்சத்துக்கு அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.

    இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மையினவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்சாக்கள் இறுதியில் இன்று நாட்டு மக்களை அத்தியாவசிய பொருட்களுக்காக வீதிகளில் அலையவிட்டிருக்கிறார்கள்.உண்மையில் பெரும்பான்மையினவாத அரசியல் தோல்வி கண்டிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் தவறானதும் ஊழல் நிறைந்ததுமான ஆட்சியை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மையினவாத அரசியல் அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்திநிற்கின்ற முக்கியமான படிப்பினையாகும்.

  உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதின்மூன்றாவது வருடமாகும்.இக்கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது? 

   நான்கு தசாப்த காலத்தில் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள்.வடக்கு --  கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் கூட விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

   போரின் முடிவுக்குப் பிறகு தமிழப்பிரதேசங்களில் இராணுவமயத்தைக் குறைப்பதற்கு பதிலாக அதை தீவிரப்படுத்துகின்ற போக்கையே அரசாங்கங்கள் கடைப்பிடித்துவருகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகப் பிரசேங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும்  நோக்குடன்  அரசாங்க அனுசரணையுடனான குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன்  தீவிரப்படுத்தப்படுவதையே காணமுடிகிறது.

   கறுப்பு ஜூலைக்கு பின்னர் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து இந்தியா நேரடியாக தலையீடு செய்ததையடுத்து கைச்சாத்திடப்பட்ட இந்திய --இலங்கை சமாதான உடன்படிக்கை (1987 ஜூலை  29) மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.அதற்குப் பிறகு 35 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் ஒருபோதும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சகல அரசாங்கங்களுமே சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்துகொண்டன.

     இந்தியாவினால் கூட அதுவிடயத்தில் இலங்கையை வழிக்குக் கொண்டுவரமுடியவில்லை. போர் முடிவுக்கு வந்தாலும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.சுமார் மூன்று தசாப்தகால போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றை காணவேண்டிய அவசியம் ஒன்று இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயமும் அரசாங்கமும் உணருவதாக தெரியவில்லை.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் அது மேலும் மூழ்கடிக்கப்பட்டுவிடக்கூடிய ஆபத்தே இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right