அவரைத் தவிர்த்துவிடுங்கள்!

By Digital Desk 5

24 Jul, 2022 | 04:50 PM
image

கேள்வி 

எனக்கு வயது 17. சிறுவயதில், தவிர்க்க முடியாத சில காரணங்களால், என் தந்தையின் சகோதரியின் வீட்டில் வளர்ந்து வருகிறேன். என் அத்தையின் கணவர் ஒரு ஆசிரியர். வயது 58. அவருக்குப் பிள்ளைகள் இல்லை. அதனால் என்னையும், என்னைப்போன்று இன்னும் சில பிள்ளைகளையும் அவர் தன் வீட்டில் வளர்த்து வருகிறார். என்றாலும் அவருக்கு என் மீது மிகுந்த இரக்கம். ஆனால், அதுதான் பிரச்சினையே. இப்போது உயர்தரம் கற்று வருகிறேன். சாதாரண தரத்தின்போது, எனது வகுப்புக்கு வந்தால், என்னை மட்டுமே பார்த்து பாடம் எடுப்பார். நான் சக மாணவர்களோடு கதைத்தால்கூட அவருக்குப் பிடிப்பதில்லை. இதனால் பாடசாலையில் எனக்குப் பல பிரச்சினைகள். இதனால், அவரது வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் தங்கிப் படிக்கிறேன். இதனால், அவர் இப்போது அவரது வீட்டுக்கும் செல்வதில்லையாம். இதனால் எனது அத்தை என்னுடன் கோபித்துக் கொள்கிறார். என் மாமாவோ, என்னை தொலைபேசியில், பேசுமாறு ஒரு சிலர் மூலம் வற்புறுத்துகிறார். இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருக்கிறது. இதிலிருந்து விடுபடுவது எப்படி?

பதில்

பிள்ளையில்லாத குறைக்கு நீங்கள் அவர் வீட்டில் வளர்ந்தது வரைக்கும் சரி. அதற்காக, அவர் விரும்பும்படியெல்லாம் நீங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பதில்லை. நீங்கள் ஒரு இளம்பெண். உங்களுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கிறது. அதை, மற்றவர்கள் குழப்பிவிடக்கூடாது.

மற்ற பிள்ளைகளை விட உங்கள் மீது ஒரு தனி அக்கறை அவருக்கு இருக்கலாம்தான். ஆனால், அதற்காக, வகுப்பறையில் உங்களை மட்டுமே பார்த்தபடி பாடம் நடத்துவதெல்லாம் சற்று அதிகம்தான். நீங்கள் வீட்டில் இல்லை என்பதற்காக வீட்டுக்கே செல்ல மாட்டேன் என்று சொல்வதெல்லாம் அவர் மீது தவறான எண்ணத்தையே ஏற்படுத்திவிடும்.

எப்படியோ நீங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டீர்கள். அது சரிதான். ஆனால், உங்களது மாமாவின் நடவடிக்கைகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. உங்கள் அத்தை இனி உங்களிடம் இது பற்றிக் கதைத்தால், அது உங்கள் பாடு... நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிடுங்கள். மேலும், உங்கள் முயற்சி முழுமையடையவேண்டும் என்றால், முற்றிலுமாகவே அவரைத் தவிர்த்துவிடுங்கள்.

ஆனால், நீங்கள் ஏன் உங்கள் பெற்றோருடன் சேர்ந்து வாழக்கூடாது? இந்த வயதில், பெற்றோர் இருந்தும் தனியாக வாழவேண்டிய தேவை என்ன? உங்கள் செலவுக்கு யார் பொறுப்பு? உங்கள் பிரச்சினைக்காக நீங்கள் அங்கிருந்து வெளியேறியது சரிதான் என்றாலும், தேவை ஏற்படாதவரை நீங்கள் வீட்டை விட்டுப் பிரிந்து தனியே வாழ்வதும் சரியான முடிவு அல்ல.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right