இசை மேதை பண்டித் டபிள்யு. டீ அமரதேவவின் தொலைநோக்கை நாட்டின் எதிர்கால தலைமுறையிடம் எடுத்துச்செல்வதற்கு அமரதேவ நுண்கலை மத்திய நிலையம் என்ற பெயரில் ஒரு தேசிய கேந்திர நிலையத்தை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்குத் தேவையான வழிகாட்டல்களை அரசாங்கத்திற்கு வழங்குமாறு ஜனாதிபதி கலைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.

தேசத்தை எழுச்சிபெறச்செய்த மிகப்பெரும் கலைஞரான காலம்சென்ற டபிள்யு.டீ அமரதேவவின்; இறுதி நிகழ்வு பூரண அரச மரியாதையுடன் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

காலம்சென்ற டபிள்யு.டீ அமரதேவவின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

கலாநிதி பண்டித் அமரதேவவின் மறைவையிட்டு முழு நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவை அறிந்து நாட்டு மக்கள் மட்டுமன்றி நாட்டுக்கு வெளியே உள்ள இலங்கையர்களும் அவரைப்பற்றி அறிந்த வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் இரசிகர்களும் கவலையடைந்துள்ளனர்.  

பண்டித் அமரதேவ தேசத்தை எழுச்சிபெறச் செய்த ஒரு யுக புருஷர் ஆவார். அவருக்கு நிகரான ஒரு கலைஞர் இந்த யுகத்தில் தோன்றவில்லை என பேராசிரியர் சுனில் ஆரியரட்ண கூறினார். நாம் அனைவருமே அதனை வாதப் பிரதிவாதங்களின்றி ஏற்றுக்கொள்வோம் என நான் நினைக்கிறேன்.

அமரதேவவின் உடல் எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவரது தொலைநோக்கும் அவரது கம்பீரக் குரலின் வலிமையும் என்றும் அழியாமல் நிலைத்திருக்குமென நான் நம்புகிறேன். அவர் என்றும் எம் நினைவில் வாழ்வார். 25 வருடங்களுக்கு முன்னர் நான் அமரதேவயிடம்  பொலன்னறுவைப் போன்ற பின்தங்கிய பிரதேசங்களுக்கு வருகை தந்து பாடசாலை பிள்ளைகளுக்கு உங்களது இசை அறிவை வழங்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.   

அவர் சிரித்த முகத்துடன் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் எனது அழைப்பை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பின்னர் அடிக்கடி பொலன்னறுவைக்கு விஜயம் செய்தார். பாடசாலை பிள்ளைகளுக்கு மத்தியில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தினார். அச்சந்தர்ப்பங்களில் மாலை வேளைகளில் பராக்கிரம சமூத்திரத்தின் அணைக்கட்டின் மேல் அமர்;ந்து நிலா ஒளியில் அவரும் நானும் கதைத்துக்கொண்டு இருப்போம். அப்போது அவர் பராக்கிரம சமூத்திரத்தைப் பற்றி பேசினார். வெஹர விகாரையின் தாகோபாவைப் பற்றி பேசினார். விவசாய சமூகத்தைப் பற்றியும் கலை இலக்கியம் பற்றியும் இரசனையோடு பேசினார். 

மிகப்பெரிய கலைஞர் என்ற வகையில் அவர் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல விருதுகளைப் பெற்றுக்கொண்டார். அவரது குரல் வளமும் இசை அறிவும் இந்த நாட்டின் கலைஞர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசலைப் பிள்ளைகள், சாதாரண பொது மக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் அவருக்கு தனிப்பெரும் மரியாதையும் ஒரு உயர்ந்த இடமும் இருந்தது. 

அவருக்கு பூரண அரச மரியாதையை வழங்குவதற்கும் ஒரு வாரகாலத்தை துக்க வாரமாகப் பிரகடனப்படுத்தவும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சுதந்திர சதுக்கத்தை தெரிவுசெய்யவும் நாம் தீர்மானித்தோம். இந்த உன்னத யுக புருஷருக்கு அரசாங்கம் என்ற வகையில் கொடுக்க வேண்டிய உச்ச கௌரவத்தையும் மரியாதையையும் கொடுக்கும் வகையிலேயே இதனை நாம் செய்தோம்.

அதேபோன்று அவரது வரலாற்றையும் தொலைநோக்கையும் இந்த நாட்டு எதிர்கால தலைமுறையிடம் கொண்டுசெல்வதற்கு பல்கலைக்கழக சமூகத்திற்கும் நுண்கலைத் துறையினருக்கும் எமது அன்புக்குரிய கலைஞர்களுக்கும் மிகுந்த பொறுப்பும் கடமையும் உள்ளதென நான் நினைக்கிறேன். 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தை முன்கொண்டு செல்லும் வகையில் அமரதேவவின்; பெயரில் 'அமரதேவ கேந்திர நிலையம்' என்ற ஒரு தேசிய நுண்கலை நிலையத்தை உருவாக்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை அரசாங்கத்திற்கு பெற்றுத்தருமாறு நான் எமது அன்புக்குரிய கலைஞர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

அமரதேவவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து விடைபெறுகிறேன். என்றார்.