சிவலிங்கம் சிவகுமாரன்
அமரர் ஆறுமுகன் காலத்தில் இ.தொ.கா ஆட்சி நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி அமைப்பு பிரதேசங்களில் வெளியாரின் அத்துமீறல் குறித்து நினைத்துப்பார்க்க முடியாது. ஆனால் இன்று இ.தொ.காவின் ஆட்சி நிர்வாகத்திலுள்ள பகுதியொன்றில் ஒரு கட்டிடமே யாருடைய அனுமதியுமின்றி அமையப்பெற்றுள்ளது என்றால் மலையக அரசியல் எந்தளவுக்கு பலகீனமாக விட்டது என்பது புரிகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக அமையப்பெற்ற பிரதேச சபைகளில் கொட்டகலை பிரதேச சபையும் ஒன்று. நுவரெலியா பிரதேச சபை இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு பகுதி கொட்டகலை பிரதேச சபையாக விளங்குகின்றது.
இப்பிரதேச சபையின் எல்லைகளாக அட்டன் மார்க்கத்தில் குடாஓயாவும் (சர்வோதய) நுவரெலியா மார்க்கத்தில் பாமஸ்டன் வரையும் உள்ளன. இச்சபைக்குள் கொட்டகலை, பத்தனை, வட்டகொடை ஆகிய நகரங்கள் உள்ளடங்குகின்றன.
இந்நிலையில், கொட்டகலை– தலவாக்கலை மார்க்கத்தில், பத்தனை சந்தியில் உள்ள காட்டுமாரியம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வாயிற்கோபுரத்துக்கு அருகாமையில் உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கடைத்தொகுதிகளைக் கொண்ட கட்டிடம் யாருக்கு உரித்தானது என்பது பற்றியும் அதன் கட்டுமானப்பணிகளை முன்னெடுத்தது யார் என்ற கேள்வியும் தற்போது பலருக்கு எழுந்துள்ளது. இந்த பிரதேசம் கொட்டகலை பிரதேச சபைக்கு உரித்தானதாகும்.
கடைத்தொகுதிகளின் பணிகள் கடந்த வருடமளவில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பூர்த்தி செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. ஆனால் இந்த கடைத்தொகுதி யாருக்கு உரித்தானது, கொட்டகலை பிரதேச சபையின் அனுமதி பெறப்பட்டா இது அமைக்கப்பட்டது போன்ற கேள்விகளை சபை அமர்வுகளின் போது சில உறுப்பினர்கள் கேட்டாலும் அவர்களுக்கு அது குறித்து சரியான பதில்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த கட்டிடம் குறித்து, தகவல் வழங்கும் சட்டமூலம் ஊடாக நாம் கொட்டலை பிரதேச சபையிடம் ஜூன் 18 ஆம் திகதி கேள்வியெழுப்பியிருந்தாலும் தற்போது ஒரு மாதத்தை நெருங்கும் தருணத்திலும் அதற்கான பதில்கள் எமக்கு வழங்கப்படவில்லை.
ஆகவே இதன் பின்னணி குறித்து நாம் சுயாதீனமான தேடல்களை மேற்கொண்ட போது சில தகவல்கள் எமக்குக் கிடைத்தன. அட்டன்– நுவரெலியா மார்க்க வீதி காபட் பாதையாக புனரமைக்கப்பட்டபோது குறித்த இடத்தின் பகுதியை மாற்று வழியாக பயன்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒதுக்கியிருந்தது.
பணிகள் முடிந்தவுடன் அவ்விடத்தில் அப்பிரதேச இளைஞர்கள் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்தி வைக்கும் இடமாக பாவித்து வந்தனர். இச்சந்தர்ப்பத்தில் இவ்விடத்தில் மக்கள் நலனுக்காக சமூர்த்தி வங்கியொன்றை அமைப்பதற்கான திட்டத்தை, 2015 இற்குப்பிறகு தலவாக்கலை சமூர்த்தி வலய உத்தியோகத்தர்கள் மாவட்ட சமூர்த்தி ஆணையாளருக்கு கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
மக்கள் நல பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட இடம்
இதற்கு பல காரணங்களை அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். தலவாக்கலை சமூர்த்தி வலயமானது 15 கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட சுமார் 17 ஆயிரம் குடும்பங்களையும் 61 ஆயிரம் மக்கள் தொகையையும் கொண்ட பிரதேசமாகும்.
நுவரெலியா பிரதேச செயலகத்தின் கீழ் வாழ்ந்து வரக்கூடிய சுமார் இரண்டு இலட்சம் மக்களில் சமூர்த்தி பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டிருப்பவர்கள் சராரியாக 5 ஆயிரம் பேர் மாத்திரமே. இவர்கள் அனைவருக்கும் இப்பிரதேச செயலகத்தின் கீழ் 5 சமூர்த்தி வங்கிகளே காணப்படுகின்றன. அதாவது ஆயிரம் பேருக்கு ஒரு வங்கி.
இதில் தலவாக்கலை சமூர்த்தி வங்கியின் பயனாளிகளாக இருப்பவர்களில், 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிப்பவர்கள் கொட்டகலை பிரதேசத்துக்கு அருகாமையில் வாழ்ந்து வருகின்றனர். இவை 475 ஏ – குடாஓயா , 475 எம் – ஸ்டோனிகிளிப், 475 வை – யுலிபீல்ட், 475 பி – போகாவத்தை, 475 கியூ – மவுண்ட்வேர்னன், 475 என் – டிரேட்டன் ஆகியனவே இந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகும். இங்கு வசித்து வரும் சமூர்த்தி பயனாளிகள் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் பயணித்து தலவாக்கலை சமூர்த்தி வங்கிக்கு வந்தே தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
இவர்களின் சிரமத்தை குறைப்பதற்காகவே மேற்படி சமூர்த்தி பிரஜாமூல சங்க தலைவர்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பத்தனை சந்தியில் மேற்படி இடத்தை தெரிவு செய்து அவ்விடத்தில் சமூர்த்தி வங்கி கிளையொன்றை அமைப்பதற்கு முயன்றுள்ளனர்.
இது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு பத்தனை சந்தியிலுள்ள மேற்படி நிலம் தெரிவு செய்யப்பட்டு அவ்விடத்தில் சமூர்த்தி வங்கியுடன் கூடிய பத்து கடைத்தொகுதிகளையும் அமைப்பதற்கு முடிவு செய்து இக்குழுவினர் இத்திட்ட அறிக்கையை மாவட்ட செயலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த இடத்தில் கட்டிடம் அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் மண் மற்றும் நிலத்தின் தன்மை பற்றிய பரிசோதனை அறிக்கைகளையும் சமூர்த்தி குழாத்தினரே பெற்றுள்ளனர். இதற்குரிய கட்டணமான ரூபா 21,852.99 சதமானது 14/03/2018 அன்று அப்போதைய தலவாக்கலை சமூர்த்தி முகாமையாளரால் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 20/03/2018 அன்று, தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலியா காரியாலய புவியியலாளர் மாலக்க ஹெட்டிராய்ச்சி குறித்த பகுதியை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான பரிசோதனை அறிக்கை 26/06/2018 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் தெளிவாக விபரிக்கப்பட்டுள்ளது. அதில் கட்டிடம் அமைய வேண்டிய திசை மற்றும் கட்டிடத்தின் தன்மை போன்றவற்றை குறிப்பிட்டுள்ளதோடு கட்டிட திட்டத்தை (Building Plan) உருவாக்கிய பின்னர் அதை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி இறுதி ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று முடக்கம் காரணமாக இந்தத் திட்டத்தை முன்னெடுக்க சமூர்த்தி குழுவினரால் முடியாது போய் விட்டது.
ஆனாலும் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப்பின்னர் 2021 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இவ்விடத்தில் இனந்தெரியாத நபர்களினால் அத்திபாரமிடப்பட்டு ஐந்து கடைத்தொகுதிகள் கொண்ட கட்டிடத்துக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இந்த திட்டத்தை யார் முன்னெடுத்தது , இதற்கான ஒப்புதல்கள் எங்கு பெறப்பட்டன, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகள் பின்பற்றப்பட்டனவா, இதற்கு ஒப்புதல் அளித்த உள்ளூராட்சி அமைப்பு எது என்பது குறித்து எவருக்குமே தெளிவில்லாமல் இருந்தது.
இராஜாங்க அமைச்சர் ஜீவனுக்கு கடிதம்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதிகள் தாம் இத்தனை காலமும் முச்சக்கர வண்டிகள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் கட்டிடம் எழுவதை கண்டு பிரதேச மக்களுடன் இணைந்து அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும் இங்கு முன்னெடுத்திருந்தனர்.
ஆனால் அத்திபாரமிடும் பணிகள் தொடர்ந்தும் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து இவ்விடத்தில் மக்கள் நலனுக்காக சமூர்த்தி வங்கி அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வந்த தலவாக்கலை சமூர்த்தி வங்கி மற்றும் சமூர்த்தி பிரஜா மூல சங்க தலைவர்கள் இது குறித்து இராஜாங்க அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமானுக்கு கடிதம் ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர்.
05/08/2021 அன்று திகதியிடப்பட்ட அக்கடிதத்தில் அவர்கள், இங்கு சமூர்த்தி வங்கியுடன் கூடிய சமூர்த்தி பயனாளிகளுக்கு உதவும் வகையில் 10 சிறு கடைத் தொகுதிகள் கொண்ட கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான சகல பணிகளையும் தாம் முன்னெடுத்தமை பற்றி குறிப்பிட்டுள்ளதோடு, அந்த க் கடிதத்தில் எந்த திட்டமும் தூரநோக்கமுமின்றி கொட்டகலை பிரதேச சபையால் அங்கு ஐந்து கடைத்தொகுதிகள் கொண்ட கட்டிடத்துக்கு அத்திபாரமிட்டுள்ளமை பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் குறித்து பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் சமூர்த்தி திணைக்களத்துக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆனால் இந்த கடிதங்கள் பற்றி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானோ அல்லது அதிகாரிகளோ அக்காலகட்டத்தில் எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லையென தெரிகின்றது. இவ்வருட ஆரம்பத்தில் இக்கட்டிடப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது கட்டிடம் மூடியே கிடக்கின்றது.
கொட்டகலை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் மூன்று உறுப்பினர்கள் இப்பகுதியில் இருக்கின்றனர்.
அதில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் எஸ்.ராஜா, ‘குறித்த கட்டிடம் குறித்து சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக தான் மட்டுமே பேசி வருவதாகவும் அதற்கு சரியான பதில்களை எவரும் தனக்கு தரவில்லை என்கிறார்.
ஆரம்பத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒரு சிலர் இது குறித்து கேள்வி எழுப்பினாலும் அதற்கு பொறுப்பான பதில்களை ஆளும் தரப்பிலிருந்து எவரும் தராத காரணத்தினால் அவர்களும் மெளனமாகி விட்டார்கள்.
இறுதியாக தான் எழுத்து மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, இந்த கட்டிடத்துக்கும் கொட்டகலை பிரதேச சபைக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என பிரதேச சபைத் தலைவர் பதில் அளித்திருப்பதாகத் தெரிவிக்கின்றார்.
மேலும் குறித்த இடம் பற்றிய தகவல்களை அங்கிருக்கும் அம்மன் ஆலயத்திடம் சென்று கேட்டுக்கொள்ளுமாறு தனக்கு பொறுப்பற்ற விதத்தில் பதில் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். குறித்த இடமானது 475 பி திம்புள்ள பத்தனை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்டது.
இப்பகுதி வாழ் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் அதே வேளை சமூர்த்தி பயனாளிகள் தலவாக்கலை வரை பயணிப்பதை தவிர்ப்பதற்கும் கடைத்தொகுதி ஒன்றை அமைக்கும் திட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டாலும் தற்போது இனந்தெரியாத வெளியாரினால் இவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இக்கடைத்தொகுதிக்கு மின்சார இணைப்பு இன்னும் பெறப்படவில்லை.
அதை வழங்குவதற்கான அனுமதியை யார் வந்து கேட்டாலும் வழங்கக் கூடாதென்று தாம் தமது பிரிவு கிராம உத்தியோகத்தரை கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த கட்டிடம் யாரால் அமைக்கப்பட்டது என்பது மர்மமாகவே உள்ளது. ஆனாலும் இப்பகுதி வறிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு அபிவிருத்தித்திட்டம் கைநழுவி போயுள்ளதாகவே தெரிகின்றது. கொட்டகலை பிரதேச சபைக்கும் இந்த கட்டிடத்துக்கும் தொடர்பில்லையென்றால் அவர்களின் நிர்வாக எல்லைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கடைத்தொகுதியை சட்டவிரோத கட்டிடமாகவே நோக்க வேண்டியுள்ளது.
ஆனால் அத்திபாரம் போட்டு கட்டிடம் பூர்த்தியாகும் வரை இதை பிரதேச சபை நிர்வாகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அமரர் ஆறுமுகன் காலத்தில் இ.தொ.கா ஆட்சி நிர்வாகத்திலுள்ள உள்ளூராட்சி அமைப்பு பிரதேசங்களில் வெளியாரின் அத்துமீறல் குறித்து நினைத்துப்பார்க்க முடியாது.
ஆனால் இன்று இ.தொ.காவின் ஆட்சி நிர்வாகத்திலுள்ள பகுதியொன்றில் ஒரு கட்டிடமே யாருடைய அனுமதியுமின்றி அமையப்பெற்றுள்ளது என்றால் மலையக அரசியல் எந்தளவுக்கு பலகீனமாக விட்டது என்பது புரிகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் டிக்கோயா நகர சபை உள்ளிட்ட , மஸ்கெலியா, கொட்டகலை , அக்கரபத்தனை, நுவரெலியா பிரதேச சபைகளின் ஆட்சி நிர்வாகம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வசமே உள்ளது. இக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இவ்வளவு சக்தியையும் மீறி வெளிப்பிரதேச நபர்கள் எவரிடமும் உரிய அனுமதியை பெறாது பிரதான வீதிக்கு அருகாமையில் ஒரு கட்டிடத்தை பூர்த்தி செய்திருக்கின்றார்கள் என்றால் இதை அப்படியே விட்டு விட முடியுமா? இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார்கள்? மலையகத்தினுள் வெளியாரின் ஆக்கிரமிப்புகளை இவர்கள் வரவேற்கின்றார்களா? இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானின் தலைமைத்துவமானது பதுளை மாவட்டத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல. அவர் இலங்கையின் சகல பாகங்களிலும் உள்ள இ.தொ.கா உறுப்பினர்களுக்கு தலைவர் என்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM