தாய்மார்கள் தம் குழந்தையை தங்களுடன் ஒரே கட்டிலில் படுக்க வைத்து தூங்கச் செய்வது ஆபத்து என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. 

சில இளம் பெற்றோர் குழந்தையை ஒரு கணமும் பிரியக் கூடாது என்று தங்கள் அருகில் எப்போதும் படுக்க வைத்துக் கொள்வார்கள். இது தவறு. பச்சிளம் குழந்தைக்கு இதனால் ஆபத்து. கட்டிலில் படுக்க வைக்கப்பட்ட குழந்தைகள் எதிர்பாராத பிரச்னைகளில் சிக்கியும், விபத்துக்கு உள்ளாகியும் மரணிக்கின்றன என்கிறது அந்த ஆய்வு. 

குழந்தைக்கென்று தயாரிக்கப்பட்ட தொட்டில் அல்லது பெற்றோரின் படுக்கையின் நீட்டிக்கப்பட்ட பகுதி, அல்லது சின்னதாக தனியான படுக்கை என குழந்தைக்கு பிரத்யேகமாக தனி படுக்கை வசதி செய்வது பாதுகாப்பானது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையை ஒருபோதும் சோபா அல்லது குஷன் சேரில் தனியாக உட்கார வைக்கக் கூடாது. குழந்தையுடன் ஓய்வாக இதுபோன்ற இடங்களில் படுக்கக்கவும் கூடாது. அது தேவையற்ற ஆபத்தை வரவேற்கும் செயல் என்கிறார் ரேச்சல் மூன். இவர் அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்.

4 மாதக் குழந்தையிலிருந்து ஒரு வயதுக் குழந்தை வரை பெற்றோர் அருகே படுத்திருப்பது அக்குழந்தைக்கு ஆபத்து. இதனை திடீர் சிசு மரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கான காரணங்களை கண்டறிய முடியவில்லை. எனவே சில விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் இளம் சிசுக்களின் மரணத்தை தவிர்க்க முடியும். அதில் ஒன்றாக குழந்தையை தனியாகவே படுக்க வைப்பது சரி என்று கண்டுபிடித்துள்ளனர்.

பிறந்த குழந்தைக்கு தாயின் அரவணைப்பு நிச்சயம் தேவைதான். முதல் சில மணி நேரங்கள் தாயுடன் ஒட்டி இருக்கவே அக்குழந்தையும் விரும்பும். தாய்க்கும் அக்குழந்தையைத் தவிர உலகில் வேறு எதுவுமே முக்கியம் கிடையாது. ஆனால் சற்று வளர்ந்த நிலையில் குழந்தைக்கு பாலூட்டவோ அல்லது விளையாட்டு காட்டும் போதோ தாய் கவனத்துடன் பத்திரமான ஒரு இடத்திலிருந்து தான் அதனைச் செய்ய வேண்டும். சோபா அல்லது சேரில் அமர்ந்திருக்கும் போது குழந்தையை கையாள்வது சுலபம் இல்லை. தவிர இரவு உறக்கத்தின் போது பெற்றோர்கள் அருகில் குழந்தையை படுக்க வைக்கக் கூடாது.  எதிர்பாராத விதமாக குழந்தைக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படலாம், அல்லது உடற்சூடு மற்றும் படுக்கை விரிப்புகள் சூடு போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தி நாளாவட்டத்தில் பெரிய சிக்கல் ஏற்படலாம். இதனால் தான் இது ஏற்பட்டது என்று சரிவர பகுத்தறிய முடியாது இருப்பதால் முற்றிலும் அதைத் தவிர்ப்பது நல்லது என்கிறார் ரேச்சல் மூன்.

குழந்தைக்கான சிறிய படுக்கை அல்லது தொட்டிலில் படுக்க வைக்க வேண்டும். குழந்தை உறங்குவதற்கான அந்த இடத்தில் கடினமான விரிப்புக்கள் தலையணை எதுவும் இருக்கக் கூடாது. அவை குழந்தை மூச்சு விட சிரமப்படுத்தும் அல்லது குழந்தையின் உடல் சூட்டை அதிகரிக்கும் என்கிறார் லோரி பெல்ட்மான் விண்டர். இவர் ந்யூ ஜெர்ஸியில் உள்ள கூப்பர் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர்.

பச்சிளம் குழந்தைக்கு பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் எந்த அளவுக்கு தேவையோ அதை விட சற்று அதிகமாகவே பாதுகாப்பு வசதிகள் முக்கியம். இளம் பெற்றோர்கள்  இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை விஷயத்தில் சின்ன சந்தேகம் எழுந்தாலும் அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவர்களிடம் கலந்து பேசி சரி செய்துவிட வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பை சுமையாக கருதாமல் சுகமான ஒரு கலையாக மாற்றிக் கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அக்கறையுடன் சொல்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.