இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் சிம்­பாப்வே கிரிக்கெட் அணி பங்கு­கொள்ளும் இரண்­டா­வதும் இறு­தி­யு­மான டெஸ்ட் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அந்­நாட்டின் தலை நக­ரான ஹரா­ரேவின் ஹராரே விளை­யாட்டுக் கழக மைதா­னத்தில் இலங்கை நேரப்­படி பிற்­பகல் 1.30 மணிக்கு  ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

முத­லா­வது டெஸ்ட் போட்­டியை ரங்­கன ஹேரத் தலை­மை­யி­லான இலங்கை கிரிக்கெட் அணி 5 ஆவது நாளின்  7.3 ஓவர்கள் மாத்­தி­ரமே எஞ்­சிய நிலையில் அவ்­வ­ணியின் சகல விக்­கெட்­டு­க­ளையும் கைப்­பற்றி 225 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி ஈட்­டி­யது. இப்­போட்டி ரங்­கன ஹேரத் தலைமை வகித்த முத­லா­வது போட்­டி­யா­கவும் அமைந்­தது. இதனால் சிம்­பாப்வே அணிக்­கெ­தி­ராக இன்று ஆரம்­ப­மாகும் இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியிலும் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்­பார்­கப்­ப­டு­கி­றது. துடுப்­பாட்­டத்தில் இலங்­கையின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளான திமுத் கரு­ணா­ரத்ன மற்றும் கௌஷால் சில்வா ஆகியோர் சிறப்­பான ஆட்டத் திறனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். 

உப்புல் தரங்க 2005 ஆம் ஆண்டு சர்­வ­தேச  டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்­தி­ருந்­தாலும் அணியில் அவ­ருக்கு நிலை­யான இடம் கிடைக்­க­வில்லை. எனினும், நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் அணியில் இணைக்­கப்­பட்ட அவர் , இப்­போட்­டியில் சதம் விளா­சி­யமை அவ­ரது இரண்­டா­வது சத­மாக அமைந்­தது.  இது சர்­வ­தேச டெஸ்ட் அரங்கில் 10 வரு­டங்­க­ளுக்கு பின்னர் அவரால் அடிக்­கப்­பட்ட சத­மாகும். 

குசல் பெரேரா தனது அதி­ரடித் துடுப்­பாட்­டத்தை டெஸ்ட் போட்­டி­க­ளிலும் தொடர்ந்து வரு­கின்­றமை இலங்கை அணியின் துடுப்­பாட்­டத்­திற்கு பல­மாகும். மேலும், துடுப்­பாட்­டத்தில் பெரிதும் எதிர்­பார்த்த குசல் மெண்டிஸ் பிர­கா­சிக்க தவ­றி­யி­ருந்தார்.  

பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், அறி­முக வீரர் லஹிரு குமார ஆகி­யோரின் ஆற்றல் வெளிப்­பா­டுகள் திருப்­தி­ய­ளிக்­கும் வித­மாக அமைந்­தன. முதல் போட்­டியில் ஆடு­களம் ரங்­கன ஹேரத்­திற்கு சாதகத் தன்­மையை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­க­வில்லை. எனினும் 6 விக்­கெட்­டு­களை வீழ்த்தி அதிக விக்­கெட்­டு­களை கைப்­பற்­றி­ய­வ­ராக இவரே காணப்­ப­டு­கிறார்.  மற்­றொரு சுழற் பந்து வீச்­சா­ள­ரான தில்­ருவன் பெரே­ராவும் தன்­பங்­கிற்கு 5 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ளார். 

சிம்­பாப்வே அணியைப் பொறுத்­த­மட்டில் இலங்கை அணிக்கு சவால் அளிக்­கும் வீர­ராக அவ்­வ­ணியின் தலை­வ­ரான கரேம் கிறீமர் விளங்­கு­கிறார். இவர் அப்­போட்­டியில்  ஒரு சதம் உட்­பட 145 ஓட்­டங்­களை குவித்­துள்­ள­துடன் 4 விக்­கெட்­டு­களை கைப்­பற்றி சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்து வரு­கிறார். அதேபோல் அறி­முக பந்­து­வீச்­சா­ள­ரான கார்ல் மும்­பாவின் பந்­து­வீச்சை எதிர்­கொள்­வதில் இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் சற்று சிர­மத்தை எதிர்­கொள்­கின்­றனர். 

இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் பெரும்­பாலும் இன்றைய போட்­டி­யிலும் முத­லா­வது போட்­டியில் விளை­யா­டிய அதே அணியே கள­மி­றங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­களே அதி­க­மாக காணப்­ப­டு­கி­றது. இப்­போட்­டி­யிலும் இலங்கை வெற்றி பெற்றால் சர்­வ­தேச டெஸ்ட் தரவரிசையில் மேலதிகமாக ஒரு புள்ளியை பெற்றுக்கொள்ளும்.

டெஸ்ட் தொடரை அடுத்து இலங்கை, சிம்­பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் பங்குகொள்ளும் முத்தரப்பு சர்வதேச ஒரு நாள் தொடர்  எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.