(எம்.மனோசித்ரா)
வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை (20.07.2022) புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதற்காக மூன்று வேட்பாளர்களே களமிறங்கியுள்ள போதிலும் கூட, யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி அனைவர் மத்தியில் பரபரப்பையும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜனாதிபதி பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜே.வி.பின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவரும் களமிறங்கியுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளமையும் , பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் இதே முடிவை எடுத்துள்ளமையும் யார் அடுத்த ஜனாதிபதி என்ற எதிர்பார்ப்பினை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. தற்போது பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானத்திலேயே இந்த எதிர்பார்ப்புக்கான பதில் காணப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலுள்ள சுமார் 70 -80 இற்கும் இடைப்பட்ட உறுப்பினர்களும் , ஆரம்பத்திலிருந்தே அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் தலா ஒவ்வொரு உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. , சிவனேசதுறை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி , ஏ.எல்.எம்.அத்தாவுல்லாவின் தேசிய காங்ரஸ் உள்ளிட்டவை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறிருப்பினும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் இதுவரையிலும் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இவ்வாறிருக்க 10 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்ரஸ், சி.வி.விக்கினேஷ்வரனின் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி மற்றும் 10 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பன தாம் வாக்களிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அரவிந்தகுமார், யனா கமகே, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் , சுதந்திர கட்சியில் போட்டியிட்ட நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் தமது வாக்குகளை ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாகவே பயன்படுத்துவர் என்று நம்பப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்பட்டு வரும் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்டோர் பெரும்பாலும் டலஸ் அழகப்பெருமவையே ஆதரிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாட்டலி சம்பிக ரணவக்க தனது நிலைப்பாட்டை அறிவிக்காமல் மௌனித்திருக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவளிப்பதாக எந்தவொரு உறுப்பினரும் இதுவரையிலும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. எனினும் டலஸ் அழகப்பெருமவை முதல் தெரிவாக தெரிவு செய்பவர்கள் , தமது இரண்டாவது விருப்பு வாக்கினை இவருக்கு வழங்கக் கூடும் என ஊகிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் நாளைய வாக்களிப்பில் கலந்துக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனநிலை முக்கியமாகின்றது. எனவே வாக்கெண்ணும் பணிகள் நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அடுத்த ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பிற்கான பதில் ஊகிக்க முடியாததாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM