படித்த, கல்வித் தகைமைக் கொண்ட உத்தியோகம் பார்க்கின்ற எத்தனையோ பெண்கள், தமது உத்தியோகம் தவிர்ந்த ஏனைய நேரத்தில் இல்லத்தரசியாக, மகளாக, தாயாக, மனைவியாக கடமைகள் அத்தனையையும் தானே ஏற்று சுயமாகவே அனைத்துப் பணிச் சுமையையும் ஏற்று, நடைமுறைப்படுத்தி, முன்னேறிச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதைப் பார்க்கின்றோம்.
இத்தகைய பெண்கள் எந்தச் சிறப்பு களியாட்டங்களிலோ, விழாக்களிலோ, சந்தர்ப்பங்களிலோ வருகை தரமுடியாத நிலையில் இருப்பதையும் பார்க்கின்றோம்.
தனியாக அழைத்து இத்தகைய பெண்ணிடம் ‘மிஸ்! கோபித்துக் கொள்ளாதீர்கள். என்றைக்குமே எந்தவொரு ஒன்று கூடலிலும் உங்களைக் காணக் கிடைப்பதேயில்லையே! ஏன் மிஸ்!’என்று அன்பாகக் கேட்டுப் பாருங்கள்.
அவளும் உங்களை ஒரு நம்பிக்கை நிறைந்த, இரக்கமும் நெருக்கமும் கொள்ளக்கூடிய ஒரு ஆத்மாவாக ஏற்றுக் கொண்டவளானால், அவள் தனது அத்தகைய பிரத்தியேக சுமைகளைப் பற்றிப் பேசி, வெறுமனே தன் மனச் சுமையையே தளர்த்திக் கொள்கிறாள்.
இயந்திரம் போல் உத்தியோகம், வீடு என கடிகார முள்ளோடு நகர்ந்து கொண்டே இருப்பவள், திடீரென மறைந்துவிட்டால், காரணம் திடீர் மாரடைப்பு என்பார்கள்.
அலுவலகத்திலும் இல்லத்திலும் அவளது அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது.
சில மாதங்கள் கழிகின்றன. அவளது கடமையுணர்ச்சியை நன்கு அறிந்தவர்கள் அவள் மீது வைத்திருந்த மரியாதையின் காரணமாக, அந்தக் குடும்பத்திடம் நலன் விசாரிக்கச் செல்கின்ற நேரம்...
கணவரோ உடற்பயிற்சிக்கு சென்றுவிட்டார். பிள்ளைகளோ பராமரிப்பாளனோடு பிரத்தியேக வகுப்புகளுக்குச் சென்றுவிட்டனர்.
வயதான பெற்றோரோ வரவேற்பறையில் தொலைக்காட்சியில் ‘டெலி ட்ராமா’ பார்க்கிறார்கள். சமையல் அறையில் ஒரு சமையற்காரன் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டைச் சுற்றிய பூந்தோட்டத்தில் ஒரு சிறு பையன் பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சுகின்றான்.
‘அன்று’ அந்தப் பெண்ணானவள் தனித்து அத்தனையையும் ஓட்டிச் சென்றாள். உதவியாளர்களது வகிபாகமோ குடும்ப அங்கத்தவரது வகிபாகமோ இல்லாது, அவற்றினால் ஏற்படும் பண விரயமும் இல்லாது அத்தனையையும் அவளே சுமந்து நின்றாள்.
வீடு திரும்பிய கணவன்...
“எல்லாமே எதுவித பிரச்சினையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நான் தோட்ட வேலைக்கு, சமையல் காரணங்களுக்கு, பெற்றோர் பிள்ளைகள் பராமரிப்புக்கு என்று ஆட்களை அமர்த்தி இருக்கிறேன். நானும் டென்னிஸ் பயிற்சிக்கு மாலை நேரங்களில் சென்று வருகின்றேன். அது உடலுக்கும் மனதுக்கும் மிகுந்த இதமளிக்கின்றது” என்று வசனங்களை அடுக்கடுக்காக கோர்த்தவாறு, உள்ளே வருகின்றார்.
மேலும் எதுவும் பேச விரும்பாது, “நன்று சந்தோஷம்” என்று விடை பெற்றுக்கொள்ள வேண்டியதே. பன்முக நோக்கில் பலரது வேறுபட்ட கருத்துக்களையும் ஆராய்ந்தால் குடும்பத் தலைவியிடமே அனைத்துச் சுமைகளையும் ஒப்படைத்து, அவளது கைகளிலேயே விட்டுவிட்டு வாழ்ந்த கணவன் “அவ நான் தான் எல்லாம் செய்கிறேன். என்னாலேயே எல்லாம் ஆகியது என்று நினைத்ததும் சொன்னதும் உண்டு. அவ இல்லாமல் ஒன்றுமே நடக்கவில்லையா?!” என்று ஒரு இரக்கமற்ற தொனியில் அவள் ஆற்றிய அத்தனையையும் அசட்டை செய்தே பேசுகின்றான் என்பதை உணர முடிகிறது.
‘இன்றைய’ பலரது வகிபாகத்தினதும் அதனாலான பண விரயத்தினதும் மொத்தப் பெறுமானத்தை ‘அன்று’ அவள் தியாக உணர்வுடனும் கடமை உணர்ச்சியுடனும் ஈடு செய்தாள் என்பதை எல்லோரும் வலியுறுத்திக் கூறுவார்களா?
அவள் செய்தாள். செய்ததை, ஒரு நம்பகமான நெருங்கிய ஆத்மாவிடம் பகிர்ந்து உள நிலையில் தளர்வு அடைகின்றாள்.
இந்தப் பலர் வகிபாகமும் பண விரயமும் அன்று இருந்திருந்தால்!
அவளும் பல நிகழ்வுகளுக்கும் களியாட்டங்களுக்கும் சிறப்பு வைபவங்களுக்கும் தனது பங்களிப்பைச் செய்வதில் தவறியிருக்க மாட்டாள்.
அவளிடம் ஒருவர் வந்து பேசவும் வினாக்கள் தொடரவும் விளக்கம் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் ஒரு சில பிரத்தியேகக் காரணங்களைத் தெரிந்தெடுத்த ஒரு சிலரிடம் சொல்லவும் வேண்டிய நிலைமை சந்தர்ப்பங்கள் அவளுக்கு ஏற்பட்டிருக்க மாட்டாது.
‘என்னாலேயே...’ என்றாள். என்று சொல்லி அந்தத் தியாகியை மௌன தேவதையை, மறைந்த பின் இழிவு படுத்துவதா? அவளை மெச்சுவதா? இந்தக் கர்வம் நிறைந்த சிலரது இவ்வாறான பேச்சைப் பேசி பரவுவதா?
அவள் வாழும்போதே, அவளை வாழ விடுங்கள். மறைந்தபின் அவள் செய்த தியாகத்தை மட்டுமே பேசுங்கள்.
உங்களால் அவள் செய்த அத்தனை செயற்பாடுகளையும் தனித்து நின்று செய்யமுடியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.
அவள் தனித்து செயற்பட்டபோது எந்த வகையிலும் அவளது பொறுப்புக்கள், சுமைகளைத் தளர்த்திக் கொடுப்பதற்கு நீங்கள் முன்வரவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள்.
இன்று அவளது மறைவுக்குப் பின்னர் இல்லறத்தில் ஏற்படுத்தப்பட்ட அனைத்துவித வகிபாகமும் வசதிகளும் அன்று ஏன் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை?
இப்போ வேறுபட்ட வீட்டுக் கடமைகளுக்கு ஆட்களை வேலைக்கு அமர்த்திவிட்டு உல்லாசமாக நீங்கள் வாழ்வது போல், அன்று அவளும் வாழ்ந்திருக்கக் கூடாதா? என்று பேசுங்கள்.
‘அவ இல்லை என்று ஒரு குறையும் இல்லாதவாறு, எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றது’ என்று பேசும் ஆத்மாவை நாம் நிமிர்ந்து பார்ப்பதா? அல்லது குனிந்து பார்ப்பதா?
மறைவின் பின்னராவது போற்றக் கூடாதா அவளை?
திருமதி. இராஜினி தேவராஜன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM