மனசாட்சியிடமே கேளுங்கள்!

Published By: Vishnu

19 Jul, 2022 | 07:08 PM
image

கேள்வி

எனக்கு வயது 18. நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரும்தான். அவரது நண்பர் என்னிடம் மிக அன்னியோன்னியமாகப் பழகுவார். நல்ல குணமுடையவர். அவர் என் நண்பியைக் காதலித்தார். பின்னர் ஒரு சண்டையில் இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர், அவர் (எனது காதலரின் நண்பர்) என்னைக் காதலிப்பதாகவும், என் மீது பைத்தியமாக இருப்பதாகவும் கூறினார். நான் மறுத்துவிட்டேன். இடையில் என் காதலிலும் பிரிவு வந்தது. ஆனால், மீண்டும் இணைந்துகொண்டோம். இப்போது, என் காதலரைப் பற்றிய சில தகவல்களை அவரது நண்பர் (என்னைக் காதலிப்பதாகச் சொன்னவர்) என்னிடம் சொல்லி, ‘என்னை விரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அவரிடம் ஏமாந்துவிடாதே’ என்று சொல்கிறார். அவர் பொய் சொல்ல மாட்டார் என்று எனக்கு 100 சதவீதம் நம்பிக்கை உண்டு. அதேவேளை, அவர் என்னைக் காதலிப்பது என் காதலருக்குத் தெரியாது. அப்படித் தெரிந்தால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். நான் தற்போது என்ன செய்யவேண்டும்?

பதில்

சிறுபிள்ளைத்தனமான கேள்வி! நீங்கள் ஒருவரை அதுவும் தன் நண்பனை - காதலிக்கிறீர்கள் என்று தெரிந்தும் உங்களைக் காதலிப்பதாக ஒருவர் சொல்கிறார். அவரை 100 சதவீதம் நம்புகிறீர்கள். ஆனால், உங்கள் காதலரை மட்டும் நம்ப மறுக்கிறீர்கள். இது என்ன நியாயம்?

ஒருத்தி, இன்னொருவருக்கானவள் என்று தெரிந்தும் எப்போது ஒருவன் அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறானோ, அப்போதே அவன் தரம் தாழ்ந்தவன் என்று தெரியவேண்டாமா? அதுவும், ஏற்கனவே அவர் உங்களது நண்பியையும் காதலித்திருக்கிறார். அவர் உங்களைக் காதலிப்பதாகச் சொன்னதுமே அவரது தொடர்பை முழுமையாகத் துண்டித்திருக்க வேண்டாமா நீங்கள்?

அதன்பிறகும், அவர் உங்கள் காதலனைப் பற்றிச் சொல்வதையெல்லாம் நம்புகிறீர்களே... இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கும் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தகுந்த தீர்வைத் தரக்கூடியது உங்கள் மனசாட்சி ஒன்றே. அதனிடமே கேட்டுப்பாருங்கள்; தக்க பதில் சொல்லும்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right