நான் கண்ட தேவதை

Published By: Vishnu

19 Jul, 2022 | 07:06 PM
image

கொழும்பில் படித்துக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்த 2017ஆம் ஆண்டு காலப்பகுதி அது.

காலை 7.30 மணிக்கு 145 பஸ்ஸை பிடிப்பது தான் morning task. வேலைத்தளம் வெள்ளவத்தையில் இருந்தது.

கொழும்பு கலாசாரத்தில் சிக்குண்டவர்களுக்கு தெரியும், 145 பஸ்களின் மரபுவழி பழக்கவழக்கங்கள். பஸ் இருக்கைகளுக்கு ஆள் ஏற்றுவது போக, வலது பக்க இருக்கைகளுக்கும் இடது பக்க இருக்கைகளுக்கும் கிட்டத்தட்ட முப்பது பயணிகளை தலா இருபக்க இருக்கைகளுக்கும் காவலாளிகளைப் போல நிறுத்தி வைக்கப்படுவார்கள். இடையிடையே நிறுத்தப்படும் பஸ் ஸ்டொப்களில் (stop) ஏறும் பயணிகளை இருபக்க standing passangerக்கு நடுவே திணித்து தள்ளுவார்கள். ஒரு footboardஇல் மாத்திரம் பத்திலிருந்து பதினைந்து தலைகளை எண்ணமுடியும்.

பஸ்ஸும் ஒரு நாற்பத்தைந்து டிகிரி சாய்விலே முக்கி முக்கி முன்னேறும். இதில் பர்ஸ், ஃபோன், செருப்பு, ஷூ லேஸ் தொலைந்து போனதெல்லாம் கிளைக்கதைகள்.

அப்படியொரு வழமை நாளில்....

நான் பஸ்ஸில் நின்றுகொண்டிருந்தபோது ஒருவர் பஸ்ஸில் ஏறுகிறார். குறித்த நபர் என்னை கடந்து செல்கையில், என் பின்புறத்தில் என்னை ஒரு கத்தி முனையால் கீறிவிட்டது போல் ஓர் உணர்வு. என்ன ஏது என்று திரும்பிப் பார்க்க தலையை திருப்பக்கூட முடியாதளவு கூட்டம்.

ஒரு மெல்லிய வலி. பஸ்ஸிலிருந்து நான் இறங்கும் வரைக்கும் சீட் கிடைக்கவில்லை.

ரீகல் பஸ் ஸ்டொப்பிலிருந்து ஒரு 75 மீட்டர் தூரம் நடந்து அடுத்த பஸ்ஸுக்கு ஏறவேண்டும். அடுத்த பஸ் ஸ்டொப்பில் நின்றுகொண்டிருந்தேன்.

வார நாட்களில் பஸ் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் வேலைக்கும் பாடசாலைக்கும் வேகவேகமாகச் செல்லும் prime time அது. நான் இல. 100 பஸ்ஸுக்காக நெடுநேரம் நிற்கவேண்டியதாயிருந்தது.

அப்போது பின்னாலிருந்து ஒருவர் என் தோளை தட்டினார்.

"Excuse me, உங்க dress பின்னாடி கிழிஞ்சிருக்கு" என்றார்.

என் உடல் வியர்த்து கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. 

சற்றே என்னை சுதாகரித்துக்கொண்டு "அண்ணா ஒரு three wheel பேசித்தாறீங்களா" என்று அவரிடமே கேட்டேன். நான் நிற்கும் இடத்துக்கே three wheel வரவழைக்கப்பட்டது. அந்த அண்ணாவுக்கு தேங்ஸ் சொல்லிவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிட்டேன்.

ஓர் அழுத்தமான வெட்டு. என் ஆடைகள் வெட்டப்பட்டு பின் இடுப்பில் ஒரு காயத்தையும் விட்டுச் சென்றிருந்தது, என்னை கடந்து சென்ற அந்த ஜந்து. 

இது என்ன விதமான மனநிலை? அற்ப சந்தோஷத்துக்காக ஒருத்தியின் சுய மரியாதையை நசுக்கி, அவள் அந்தரங்கத்தை அம்பலப்படுத்துவதன் மூலம் அவன் என்ன திருப்தியை அடைகின்றான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த விந்தை.

இரத்தம் கசிந்து வெளியே வரவில்லை என்பதே குறைந்தபட்ச ஆறுதலாக இருந்தது.

என்னை கடந்து சென்ற எத்தனையோ பெண்களுக்கிடையில் அந்த ஒரேயொரு சகோதரனுக்கு மட்டுந்தான் இதை சொல்லத் தோன்றியிருக்கிறது. அந்த சம்பவத்தின் பின் அந்த அண்ணாவை நான் காணவேயில்லை. மிக நீண்ட நாட்களின் பின் ஒரு நாள் அதே பஸ் ஸ்டொப்பில் அந்த அண்ணாவை கண்டேன்.

"Thanks a lot அண்ணா, நீங்க அன்னைக்கு செஞ்சது பெரிய help" என்றேன். "அதனால என்ன தங்கச்சி" என்று சிரித்தார்.

ஒரே நாளில் ஒரு சூனியக்காரனையும் ஒரு தேவதையையும் கண் முன்னே நிறுத்தியது, எனக்கே எனக்காக எழுதப்பட்ட அன்றைய நாளுக்கான விதி!

மோனிஷா ஞானசேகரம், மெராயா, லிந்துலை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right