(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்புக்களுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
இதன்போது புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.
அத்தோடு நாளை புதன்கிழமை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தின் ஊடாக இரண்டாவது முறையாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்யும் நாளாக நாளைய நாள் பதிவாகவுள்ளமை விசேட அம்சமாகும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்.
இந்நிலையில் வழமைக்கு மாறாக இன்றை தினம் பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் 40 ஆவது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வகையில் வேட்பு மனுத்தாக்கல் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிடும் உறுப்பினர் தனது தீர்மானத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் அதே வேளை , பிறிதொருவர் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதி தெரிவிற்காக போட்டியிட தயாராகவுள்ள வேட்பாளர்கள் இன்றைய தினம் சபைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதிக்கு போட்டியிடவுள்ளனர்.
இடைக்கால ஜனாதிபதி தெரிவின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதானது , மக்கள் மத்தியில் பாராளுமன்றத்தை மலினப்படுத்தும் என்றும் , எனவே இதன் போது சுதந்திர கட்சி எவருக்கும் ஆதரவு வழங்காது என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
1993 மே தினத்தன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதையடுத்து , பதில் ஜனாதிபதியான டி.பி.விஜதுங்க , பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில்லாமல் இடைக்கால ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளமையால் அரசியலமைப்பின் படி நாளை பாராளுமன்றில் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM