ஒட்டுமொத்த நாடும் சர்வதேச சமூகமும் உங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றன - பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சேர்ச் ஒஃப் சிலோன் ஆயர்கள் வலியுறுத்தல்

Published By: Digital Desk 5

18 Jul, 2022 | 10:18 PM
image

(நா.தனுஜா)

தற்போதைய சூழ்நிலையில் கௌரவத்திற்குரிய, அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய புதிய ஜனாபதியொருவரைத் தலைமையாகக்கொண்ட இடைக்கால அரசாங்கமே அவசியமானதாக இருக்கின்றது.

நாளைய தினம் புதிய ஜனாதிபதித்தெரிவின்போது மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் மிகமுக்கிய அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்றவேண்டியிருப்பதை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவுறுத்துவதாக சேர்ச் ஒஃப் சிலோன் அமைப்பின் ஆயர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமன்றி இவ்வேளையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கான இயலுமையையும் தைரியத்தையும் தூரநோக்கு சிந்தனையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றார்களா என்பதை இலங்கை மக்களும் சர்வதேச சமூகப்பிரதிநிதிகளும் அவதானித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அனைத்து ஆயர்களையும் உள்ளடக்கிய 'சேர்ச் ஒஃப் சிலோன்' அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம், கோட்டாபய ராஜபக்ஷ அவரது ஜனாதிபதிப்பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்ற அதன் அடிப்படை இலக்கை அடைந்திருக்கின்றது.

ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின் இந்த முக்கிய மைல்கல்லை நாம் வரவேற்கின்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தபோது ஏற்பட்ட அரசியல் நிலை மற்றும் பின்னடைவு ஆகியவற்றுக்கு மத்தியிலேயே இந்த இலக்கு அடையப்பட்டிருக்கின்றது.

ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றை முன்னிறுத்திய பிரசாரத்தின் அடுத்தகட்டப் போராட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் வரையில் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்திற்குள் இருந்து ஒருவர் தெரிவுசெய்யப்படவேண்டியுள்ளது.

ஊழல் மற்றும் ஜனாதிபதியின் முறையற்ற நிர்வாகம் தொடர்பில் கவனம் செலுத்தத்தவறியமை, மக்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை நிறைவேற்றாமை ஆகிய காரணங்களினால் தற்போதைய பாராளுமன்றம் மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் இழந்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல், சீர்குலைந்திருக்கும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதல், பாதிப்படைந்திருக்கும் மக்களின் வாழ்க்கை முறைமை மீண்டும் பழைய நிலைக்குக்கொண்டுவரல் ஆகிய சவால்களை உரியவாறு நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதியொருவரைத் தெரிவுசெய்யவேண்டிய சிக்கலான நிலை காணப்படுகின்றது.

போராட்டங்கள் மூலமும், அண்மைய சில வாரங்களில் சிவில் சமூக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மூலமும் மக்களால் தெளிவாக வெளிப்படுத்தப்பட்ட குரலைப் பாராளுமன்றம் பிரதிபலிக்குமா? இருப்பினும் கடந்த சில தினங்களாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளினதும் தலைவர்களால் வெளியிடப்படும் கருத்துக்கள் எமக்கு அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.

குறிப்பாக அவர்கள் மக்களின் குரலை செவிமக்காமலிருப்பதுடன் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையாகக்கொண்டு புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் கௌரவத்திற்குரிய, அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய புதிய ஜனாபதியொருவரைத் தலைமையாகக்கொண்ட இடைக்கால அரசாங்கமே அவசியமானதாக இருக்கின்றது.

அதனூடாகவே அவசியமானதும் நியாயமானதுமான அரசியலமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளமுடியும் என்பதுடன் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும்.

ஆகவே அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தனியொரு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முன்னதாக அவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள் என்பதை நினைவுறுத்த விரும்புவதுடன் நாளைய தினம் புதிய ஜனாதிபதித்தெரிவின்போது மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் மிகமுக்கிய அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்றவிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.

இவ்வேளையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கான இயலுமையையும் தைரியத்தையும் தூரநோக்கு சிந்தனையையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டிருக்கின்றார்களா என்பதை இலங்கை மக்களும் சர்வதேச சமூகப்பிரதிநிதிகளும் அவதானித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 09:49:13
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11
news-image

தமிழ் இனப்படுகொலையை மறைக்க வேண்டாம்; பட்டலந்த...

2025-03-20 03:16:34
news-image

நான்கு மனித படுகொலைகளுடன் தொடர்புடைய  சந்தேகநபர்...

2025-03-20 03:06:26