(ஆர் .யசி)

ஆவா குழுவின் பின்னணியில்  அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென உறுதியாக கூறமுடியும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்தார். 

 வடக்கில் இராணுவத்தின் வசம் உள்ள  பொதுமக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டியது அரசாங்கதின் கடமையாகும். ஆனால் வடக்கில்  பொதுமக்களின் காணிகளை ஒப்படைக்க வேண்டும் என்பது இராணுவ முகாம்களை அகற்றவேண்டும் என்று அர்த்தம் அல்ல. வடக்கில் இராணுவத்தை பலப்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பு ராஜகிரியவில்  அமைந்துள்ள வடமாகாண ஆளுனர் காரியாளையதில்நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் எப்பகுதியிலாவது ஏதேனும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றால் அதை விமர்சிக்கும் விதம் வேறு  ஆனால் வடக்கில் நடைபெற்றால் விமர்சிக்கும் விதம் வேறு. வடக்கில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் இனவாத அடிப்பைடயில் விமர்சிக்கப்படுகின்றது. பொலிஸ் அதிகாரி ஒருவரால் ஏதேனும் சம்பவம் நடந்தால் அதை தெற்கின் நபர்கள் அரசியல் சாயலுடன் விமர்சிக்கும் போது அதே சம்பவம் வடக்கில் நடந்தால் அதை சிங்கள இனவாத சம்பவமாகவும் ஆக்கிரமிப்பு அல்லது அடக்குமுறை சம்பவமாக விமர்சிக்கின்றனர். இனங்களுக்கு  இடையிலான முரண்பாடாகவே இதை கருதுகின்றனர். 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ ஆவா குழுவின் பின்னணியில் உள்ளாரா என்று எமக்கு தெரியாது. அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இந்தக் கருத்துக்களை முன்வைத்த பின்னரே இப்போது அதிகமாக இது தொடர்பில் விமர்சிக்கப்படுகின்றது. ஆனால் இவ்வாறான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் முன்னர் பாதுகாப்பு தரப்பிடம் தெரிவிப்பது சிறந்த ஒன்றாகும். வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது எனக்கு இன்னும் தெரியாது. மக்கள் என்னிடம் பல்வேறு முறைப்பாடுகளை செய்துள்ளனர். பொலிஸாரையும் இராணுவத்தையும் அழைத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தினேன். அதை தவிர புலனாய்வு வேலைகளை நான் செய்வதில்லை. குற்றச்சாட்டுகளை முன்வைப்போரே பொறுப்பாக அதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தினால் நல்லது. விசேட குழுவொன்று இந்த விடயங்களை ஆராய்கின்றது. புலனாய்வு துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அவர்கள் மூலமாக உண்மைகளை கண்டறிந்து செயற்பட வேண்டும். பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது இராணுவம் உள்ளதா என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லை. அதை உறுதியாக என்னால் கூறமுடியும் என்றார்.