ஹரிகரன்
“ராஜபக்ஷ ஆட்சியை ஆடியோடு பெயர்த்து போட்டிருக்கிறது, அரபு வசந்தத்தை விட வீரியமாக கிளர்ந்து எழுந்த ஜூலை-9 மக்கள் புரட்சி”
கடந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் அரபு வசந்தம் மிகப் மிரபலமான ஒன்றாக விளங்கியது.
துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்த புரட்சி, மத்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகள் பலவற்றில் ஆட்சிகளை மாற்றியது.
நீண்டகாலம் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவர்களை தூக்கியெறியக் காரணமாக இருந்தது.
2010 டிசம்பரில் தொடங்கி, 2011 நடுப்பகுதி வரையான காலப்பகுதிக்குள், நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் மீது வெறுப்படைந்த மக்கள், கிளர்ச்சிகளில் இறங்கினர்.
அதன் காரணமாக முதலில் துனிசியாவில் ஆட்சி தூக்கியெறியப்பட்டது. அடுத்து, லிபியா, எகிப்து, யேமன், சிரியா, பஹ்ரெய்ன் போன்ற நாடுகளில் நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சிகள் வெடித்தன.
அவற்றில், சிரியாவில் மட்டும் பஷார் அல் அசாத் அரசாங்கம் தப்பிக் கொண்டது. ஆனால் அந்த நாடு நீண்ட- மோசமானதொரு உள்நாட்டுப் போருக்குள் சிக்கியது.
ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தூக்கியெறியப்பட்டு ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.
அரபு வசந்தம், ஏனைய பல அரபு நாடுகளிலும், பெரும் தாக்கத்தை செலுத்தியது. சில இடங்களில் அரசாங்கங்கள் பதவியிறங்க நேரிட்டது. சில இடங்களில் உள்நாட்டுப் போர்கள் உருவாகின.
அரபுலகப் புரட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, சமூக ஊடகங்கள் தான். மேற்குலகம், குறிப்பாக அமெரிக்காவே சமூக ஊடகங்களின் ஊடாக இந்தப் புரட்சியை ஊக்குவித்தது என்ற கருத்து இன்றைக்கும் நிலவுகிறது.
கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடங்கிய போது, அரபு வசந்தம் போல இலங்கையில் நடக்கும் என்று எவரும் கற்பனை செய்ய வேண்டாம் என்று அரசாங்கத் தரப்பில் இருந்த பலர் எச்சரித்தனர்.
அதாவது ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி ஏற்பட்டு, ஆட்சியை தூக்கியெறியும் நிலை உருவாகாது என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
அவ்வாறான நிலை ஒன்றுக்கு, அரசாங்கம் இடமளிக்காது என்ற கருத்தும் காணப்பட்டது.
துனிசியாவில், லெபனானில் ஏனைய அரபு நாடுகளில் மக்கள் புரட்சியை தொலைக்காட்சிகளின் பார்த்த மக்களுக்கு இலங்கையிலும் அவ்வாறு நடந்கும் என்று எவரும் கற்பனை செய்திருக்கவில்லை.
அரபு வசந்தத்தை விட வீரியமான போராட்டங்களை இன்று நாடு சந்தித்திருக்கிறது.
அரபு வசந்த புரட்சியில், ஆட்சிகள் தூக்கியெறியப்பட்டது போலவே, இங்கும் ராஜபக்ஷ அரசாங்கம் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது.
அரபு வசந்தம் இலங்கையில் சாத்தியமில்லை, அதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றவர்கள் வாய்பிளந்து நிற்கிறார்கள்.
அரபு வசந்தத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர், அதற்கு அனுமதிக்கமாட்டோம் என்று அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பின்னரும், விமல் வீரவன்ச கூறியிருந்தார்.
உலக அரங்கில், காலத்துக்குக் காலம் சர்வாதிகாரிகளும், மக்களின் எண்ணங்களையும், உரிமைகளையும் மதிக்காமல் அவர்களை வதைத்த ஆட்சியாளர்களும், இவ்வாறான புரட்சிகளின் மூலம் தூக்கியெறியப்பட்டு வந்திருக்கிறார்கள்.
1979இல் ஈரானில் ஷா மன்னரின் ஆட்சி, 1986இல் பிலிப்பைன்சில் மார்கோசின் ஆட்சி, 1989 தொடக்கம் 91 வரையான காலப்பகுதியில், சோவியத் ஒன்றியத்தில் இடம்பெற்றிருந்த மற்றும் அதன் கூட்டாளி நாடுகளாக இருந்த லத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா, ருமேனியா, பல்கேரியா, உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் புரட்சிகளின் மூலம் ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டனர்.
சர்வாதிகாரப் போக்கும், நீண்டகால கொடுங்கோல் ஆட்சியும், அதிகாரத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிக்கும் ஜனநாயக எழுச்சிக்கும் வழி வகுத்திருக்கிறது.
அவ்வாறான வரலாற்று நிகழ்வுகளுக்கு இணையாகவே, ராஜபக்ஷ ஆட்சியை ஆடியோடு பெயர்த்து போட்டிருக்கிறது, ஜூலை-9 மக்கள் புரட்சி.
ஏனைய நாடுகளின் மக்கள் புரட்சிகளின் போது, பெருமளவில் இரத்தம் சிந்தப்பட்ட வரலாறு உள்ளது.
ஆனால், ஜூலை-9 புரட்சி அதிகளவில் இரத்தம் சிந்தாத ஒன்றாகவும், கட்டுப்பாடுகள் மிக்கதாகவும், ஜனநாயகம் மற்றும் அமைதி வழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இருந்தது.
ஜூன் 9ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக காரணமான போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இது இடம்பெற்றது.
இந்த இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் ஒரு மாத கால இடைவெளி இருந்தது. அந்தக்காலகட்டத்தில் போராட்டம் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த தோற்றப்பாட்டையும் உருவாக்கியது.
ஆனாலும், ஜூலை-9 புரட்சி முன்னொரு போதும் இலங்கை வரலாற்றில் இடம்பெறாத ஒன்றாக அமைந்து விட்டது.
இந்தப் புரட்சியை மேற்குலக நாடுகள் எதிர்பார்த்திருந்தன. இலங்கை நிலவரங்களை காரணம் காட்டி மேற்குலக நாடுகள் பலவும், பயண எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தன.
மக்கள் புரட்சி வெடிக்கும் அனுமானங்களை அடிப்படையாக கொண்டு தான் அந்தப் பயண எச்சரிக்கைகள், வெளியிடப்பட்டிருக்கின்றன.
அதேவேளை, உலகளவில் நிகழ்ந்த மக்கள் புரட்சிகளின் போது, ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அல்லது சர்வாதிகாரிகள், தங்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு கடைசி வரையில் படைபலத்தைப் பயன்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் இலங்கையில் நிலைமை அவ்வாறானதாக இருக்கவில்லை. அரச படைகளைக் கொண்டு ராஜபக்ஷவினர், ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் இரும்புக்கரம் கொண்டு அடங்கியிருக்க முடியும்.
அதற்கான வாய்ப்புகளும் சில நாட்களுக்கு முன்னர் வரை காணப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த 7ஆம் திகதி அவசரமாகச் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கின்னன், ஜனநாயக போராட்டங்களை அரசாங்கம் மதிக்க வேண்டும் என்று நேரில் வலியுறுத்தியிருந்தார்.
இந்த முக்கியமான நேரத்தில், அமைதியான போராட்டத்திற்கான ஜனநாயக உரிமை, நாடு முழுவதும் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர், பின்னர் ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதேவேளை, அமெரிக்க தூதுவர் ஜூலி சங், ஜூலை 8ஆம் திகதி ருவிட்டரில் இட்டிருந்த பதிவில், அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு, இடம் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு, இராணுவம் மற்றும் பொலி ஸுக்கு நினைவூட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
வன்முறை ஒரு போதும் தீர்வாக அமையாது எனவும் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு தரப்பையும் கண்டிப்புடன் கையாளுவது போன்றிருந்த அந்தப் பதிவுகள், அரசாங்கத்துக்கு குறிப்பாக அரச படைகளுக்கும் பொலிசாருக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.
அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் இந்த அழுத்தங்களை மீறி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவத்துக்கும், பொலி ஸுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க முடியும்.
ஆனால், அது அவருக்கோ அவரது அரசாங்கத்துக்கோ- அது பாதுகாப்பளிப்பதாக இருக்காது என்பது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றாகவே தெரியும்.
போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினால், மேற்குலகம் அதற்கு எவ்வாறு பிரதிபலிக்கும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை மட்டும் இப்போது நம்பியிருக்கும் இலங்கைக்கு, அது கிட்டாமல் போனால், எதையும் செய்ய முடியாமல் போகும் ஆபத்து இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தை பகைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது. அவ்வாறு செய்வதை விட அடங்கிப் போவது நல்லது என்று அவர் கருதியிருக்கிறார்.
அதுபோலவே, ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், நாட்டில் இருக்கும் எண்ணம் கோட்டாவுக்கு இல்லை. அவரது மகன் அமெரிக்காவில் உள்ள நிலையில், தனது இறுதிக்காலத்தை அங்கேயே கழிக்கவும் விரும்பினார்.
இவ்வாறான நிலையில், நாட்டில் இரத்தக் களரியை ஏற்படுத்தி விட்டு, நீடித்து அரசியல் செய்யவும் முடியாது, அமெரிக்காவுக்குள் கால் வைக்கவும் முடியாதென்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருந்தார்.
அதனால் தான் தான், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்றவற்றை மக்கள் படை கைப்பற்றும் போது அரச படைகள் செயலற்று நின்றன.
சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், இலங்கையின் மக்கள் புரட்சி ஒப்பீட்டளவில் அமைதியானது.
அந்த அமைதி தொடர்ந்து நீடிப்பது தான் சர்வதேச ஆதரவையும், அனுதாபத்தையும் தக்கவைத்துக் கொள்ளும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM