எம்.எஸ்.தீன்
இனவாதத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் அதனால் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்காது. நாடு முன்னேற்றமடைவதற்கு பதிலாக நலிவிடைந்து கொண்டே செல்லும் என்பதனை இலங்கையின் தற்போதைய நெருக்கடி சூழல் மிகவும் தெளிவாக நாட்டு மக்களுக்கு உணர்த்தியுள்ளது.
இலங்கை சுதந்திரம் பெற்றவுடனே அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இனவாதம் கையாளப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நாட்டுக்கு எதிரானவர்கள். இது பௌத்த நாடு. ஏனைய இனங்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாதென்று கருத்துக்களை முன் வைத்து அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட அரசியல்வாதிகளிடம் உண்மை கிடையாது. நாட்டுப்பற்று கிடையாது. அவர்கள் தங்களின் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், ஊழல் செய்து கொள்ளவுமே இனவாதத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என்று சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கு சுமார் 75 வருடங்கள் சென்றுள்ளன.
தற்போது கூட சிங்கள மக்கள் பௌத்த இனவாதத்தின் போலித்தன்மையை நாட்டில் பசி, பட்டினி, பொருட்களின் விலையேற்றங்கள், எரிபொருள் தட்டுப்பாடு, பசளைத் தட்டுப்பாடு என்று தொடரான நெருக்கடிகள் ஏற்பட்டதனால்தான் பௌத்த இனவாதம் நாட்டை வறுமையின் பாதாளத்திற்கு கொண்டு நிறுத்தியுள்ளதென்று உணர்ந்துள்ளார்கள். இந்த நிலை ஏற்படாது இருந்தால் கோத்தா ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் சிறபான்மையினர் மட்டுமன்றி மத அடிப்படையில் சிறுபான்மையினராகவுள்ள கிறிஸ்தவ சிங்களவர்கள் கூட மிக மோசமாக நடத்தப்பட்டிருப்பார்கள்.
சிங்கள மக்களிடையே அரசியல்வாதிகளின் தேவைக்காக பௌத்த இனவாதத்தை கையில் எடுத்து ஆட்டம் போட்ட பௌத்த இனவாதத் தேரர்கள் எவரையும் வெளியில் காண முடியவில்லை. அவர்கள் மதத் தலைவர்கள் என்பதற்கு அப்பால் சட்;டத்தை கையில் எடுத்து சர்வதிகாரிகள் போன்ற நடந்தார்கள். பொலிஸார், இராணுவத்தினரை அச்சுறுத்தும் வகையில் பர வேளைகளில் நடந்துள்ளார்கள்.
இனவாதத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் இனவாத தேரர்களின் வழிகாட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் யாவற்றிக்கும் ஆட்சியாளர்களின் பூரண அனுசரணை இருந்தது. பௌத்த சிங்கள மக்களும் அரசியல்வாதிகளின் கூற்றுக்களில் உள்ள கள்ளத்தனத்தைப் புரிந்து கொள்ளாது சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை எதிரிகளாகப் பார்த்தார்கள். இதனால் சிறுபான்மையினரின் கலாசாரம், மதவிழுமியங்கள், உடைகள் போன்றவற்றைக் கூட வெறுத்தார்கள். அவற்றிக்கு எதிராக செயற்பட்டார்கள்.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகளுக்கு அமைவாக சிங்கள அரசியல்வாதிகளின் கள்ளத்தனத்தை சிங்கள மக்கள் உணர்ந்து, புரிந்து கொண்டதனைப் போன்று முஸ்லிம்கள் தமது அரசியல்வாதிகள், கட்சிகளின் கள்ளத்தனத்தை இன்னும் உணர்ந்து புரிந்து கொள்ளவில்லை.
நாட்டில்; இவ்வளவு நெருக்கடிகளும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு கருத்தையும் முன் வைக்கவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நன்மையா.. தீமையா. போராட்டக்காரர்களின் போராட்டத்தில் நியாயம் உள்ளதா என்று எந்தவொரு கருத்தையும் சொல்லதா தரப்பாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள்.
நாட்டில் கோட்டா அரசாங்கத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும், தொல்லைகளுக்கும் பெரும் பாவம் உண்டு. அந்த பாவத்தில் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பங்குண்டு. ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் கொம்பை 19ஆவது திருத்தச் சட்ட மூலம் ஓரளவுக்கு முறித்து இருந்தது. அதனால் ஜனாதிபதி தம்மிடம் நிறைவேற்று அதிகாரமுண்டு என்ற தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ள முடியாது.
19ஆவது திருத்தச் சட்ட மூலத்தினால் முறிக்கப்பட்ட ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரக் கொம்பினை 20ஆவது திருத்;தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கி கொம்பை சீவி கூர்மைப்படுத்தியவர்கள் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாவார்கள். இவர்கள் ஆதரவு வழங்காது இருந்தால் அதியுச்ச நிறைவேற்று அதிகாரத்தை கோட்டாபய ராஜபக்ஷவினால் பெற்றுக் கொள்ள முடியாது இருந்திருக்கும்.
கோட்டாபய ராஜபக்ஷ 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினால் உச்ச அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும், அதனை நாட்டுக்கும், மக்களினதும் நலன்களுக்கு பயன்படுத்திவில்லை. தம்மைச் சூழ இருந்தவர்கள், தமது அரசியலுக்கு செலவுகளை மேற்கொண்டவர்கள் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் நாட்டின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. டொலர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எல்லாத் துன்பங்களும் நாட்டு மக்களை கொடுமைப்படுத்தியது. எல்லாவற்றிக்கும் வரிசையில் நிற்க வேண்டி அவலத்தில் மக்கள் உள்ளார்கள்.
இப்போது நாட்டில் புதிய அரசயில் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டுமென்று சிங்கள மக்களில் அதிகம் பேர் குறிப்பாக இளைஞர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டால் சிறுபான்மையினர் முழுமையான அதிகாரங்களைப் பெற்று வாழக் கூடியதொரு கலாசாரம் உருவாக்கப்படுமா என்று பார்க்க வேண்டியுள்ளது. நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் மாத்திரம் உருவானால் மட்டும் போதாது, அந்த புதிய கலாசாரம் சிறுபான்மையினரை நிம்மதியாக வாழச் செய்ய வேண்டும். அதற்குரிய வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதனைச் செய்யாது வெறுமனே சிங்களவர்களே அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய அரசியல் யாப்பு, அரசியல் கலாசாரம் உருவாக்கப்படுமானால் அது கூட நீண்ட காலத்தில் நாட்டுக்கு பாரிய வீழ்ச்சியையே கொண்டு வருமென்பதனை இன்றைய நெருக்கடிகளை உதாரணமாகக் கொண்டு சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் ஏற்பட்டால் மட்டுமே நாடு முன்னேற்றமடையும் என்பது தான் உண்மையாகும்.
தற்போது வரையில் சிங்கக் கொடிகளை ஏந்திக்கொண்டே போராடும் பெரும்பான்மை சிங்களவர்கள் இன்னமும், சிறுபான்மை சமூகத்திற்கான உரிய இடம் அந்தக்கொடியில் கூட வழங்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்களோ இல்லையோ தெரிவில்லை.
ஆனால், சாதாரண தேசிய கொடி என்பதற்கு அப்பால் அனைத்து தேசியங்களை இணைப்பதற்கான தேசியக் கொடியாக இருப்பது தான் முதற்கட்ட விடயமாகின்றது. இதுபோன்றே ஒவ்வொரு விடயமும் அமைகின்றது.
அந்தந்த இனங்களில் கலாசாரங்களை, பண்பாடுகளை, அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் உரிமைகள் வழங்கப்படும் வரையில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கப்போகின்றன என்பது தான் யதார்த்தம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM