அவுஸ்திரேலியாவை வென்ற நம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இலங்கை 

Published By: Digital Desk 5

16 Jul, 2022 | 09:40 AM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் மாறுபாடான பெறுபேறுகளுடன் தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்ட இலங்கை, அதே விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளது.

இந்நிலையில் இன்று காலியில் இடம்பெறும் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான 1ஆவது டெஸ்ட் போட்டியில் பகுதிநேர பந்துவீச்சாளர் ட்ரவிஸ் ஹெட்டின் பந்துவீச்சில் சரிந்த இலங்கை, 2ஆவது டெஸ்டில் அறிமுக வீரர் ப்ரபாத் ஜயசூரியவின் சாதனைமிகு பந்துவீச்சு மற்றும் தினேஷ் சந்திமாலின் முதலாவது இரட்டைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்தியது.

எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவை விட பாகிஸ்தான் பலசாலி என தெரிவித்த இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரட்ன, இன்று ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்க உள்ளதாக கூறினார்.

கொவிட் - 19 தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள தனஞ்சய டி சில்வா மீண்டும் அணியில் இடம் பெறுவார் எனவும் தொற்றினால் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக விளையாடுவார் எனவும் திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

'ஓஷதவும் நானும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாடுவோம். தனஞ்சய டி சில்வா அணிக்கு திரும்பியுள்ளதால்  கமிந்து மெண்டிஸ்   அவருக்கு வழிவிட நேரிட்டுள்ளது. கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியில் திறமையை வெளிப்படுத்தி அரைச் சதம் குவித்தார். ஆனால், அவரை விட அனுபவசாலியான தனஞ்சய டி சில்வா ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். மேலும் துடுப்பாட்ட வரிசையில் தனஞ்சய, தினேஷ் சந்திமால் ஆகிய இருவரில் யார் 5ஆம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார் என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. போட்டிக்கு முன்னர் அதுபற்றி ஒரு முடிவு எடுப்போம்' என்றார் அவர்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் விளையாடிய அதே 3 சுழல்பந்துவீச்சாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என திமுத் கருணாரட்ன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் சுழல்பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்பதால் இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் சவாலை சமாளிக்க முயற்சிக்க வெண்டிவரும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பாகிஸ்தான் அணியிலும் பெயர்பெற்ற சுழல்பந்துவிச்சாளரகள் இடம்பெறுவதால் துடுப்பாட்ட வீரர்கள் நிதானம் தவறாமல் அவர்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை அவர் வழங்கினார்.

இந்தத் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் அணியில் மூத்த அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கையில் 2015இல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 ஆட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றபோது யாசிர் ஷா 24 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தி இருந்தார்.

ஆனால், 2019இல் அவரது சொந்த நாட்டில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசிப் போட்டியில் மாத்திரம் விளையாடிய யாசிர் ஷா 2 விக்கெட்களை  கைப்பற்றியிருந்தார்.

எனினும் இலங்கைக்கு எதிராக அவர் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 42 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் அணிகள் நிலையில் இலங்கை 54.17 வீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 52.38 வீத புள்ளிகளுடன் 4ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிபெறும் அணிக்கு டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் முன்னோக்கி நகர வாய்ப்பு இருப்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள கடுமையாக முயற்சிக்கவுள்ளன.

அணிகள்

இலங்கை: ஓஷத பெர்னாண்டோ, திமுத் கருணாரட்ன (தலைவர்), குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல, ரமேஷ் மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, ப்ரபாத் ஜயசூரிய, கசுன் ராஜித்த அல்லது அசித்த பெர்னாண்டோ.

பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல் ஹக், அஸார் அலி,  பாபர் அஸாம் (தலைவர்), மொஹமத் ரிஸ்வான், அகா சல்மான், மொஹமத் நவாஸ், யாசிர் ஷா, ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி...

2026-02-18 17:17:08
news-image

விமானப்படையின் “கொமாண்டர்ஸ் கிண்ணம்” கோல்ஃப் போட்டி...

2026-02-18 17:07:45
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இன்னும் சாதிப்போம் என்ற...

2026-02-18 03:52:37
news-image

விளையாட்டின் நீண்டகால வளர்ச்சியை முன்னேற்ற இலங்கை...

2026-02-17 19:12:56
news-image

சுப்பர் 8 சுற்றில் இலங்கை விளையாடவுள்ள...

2026-02-17 18:49:29
news-image

நியூஸிலாந்துக்கு எதிராக ரி20 உலகக் கிண்ண...

2026-02-17 16:40:08
news-image

பெத்தும் குவித்த அபார சதம் இலங்கையை...

2026-02-17 12:27:57
news-image

ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8...

2026-02-16 22:41:49
news-image

இலங்கைக்கு 182 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-02-16 21:10:39
news-image

அவுஸ்திரேலியாவுடனான தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை...

2026-02-16 19:27:21
news-image

இலகுவான இரண்டு வெற்றிகளை ஈட்டிய இலங்கைக்கு...

2026-02-16 13:26:10
news-image

பாகிஸ்தானுடனான ரி20 உலகக் கிண்ண வரலாற்றில்...

2026-02-15 23:40:44