(நா.தனுஜா)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வில் பாற்சோறு சமைத்து அனைவருக்கும் பகிர்ந்து வழங்கி தமது வெற்றியைக் கொண்டாடிய போராட்டக்காரர்கள், சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு எவ்வித இன, மத, மொழிபேதங்களுமின்றி நாம் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது வெற்றியே இதுவென்றும் அறிவித்தனர்.
மக்களின் இத்தன்னெழுச்சிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வயிற்றில் குழந்தையுடன் ஊன்றுகோலின் துணையுடன் தினமும் போராட்டக்களத்திற்கு வருகைதந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்த பெண்ணொருவர் இன்றைய வெற்றிக்கொண்டாட்டத்திலும் கலந்துகொண்டிருந்ததுடன், 'கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தபோது சுமார் 100 நாட்களைக் கடந்து பயணிப்போம் என்று நாங்கள் கருதவில்லை. ஆனால் இப்போது அடைந்திருக்கும் வெற்றி எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காக நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்' என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலிமுகத்திடலில் 'கோட்டா கோ கம' என்று பெயரிட்டு, கூடாரங்களை அமைத்து, படிப்படியாக வைத்தியசாலை, நூலகம், மலசலகூடல், ஊடக மத்திய நிலையம், சட்ட ஆலோசனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டமைப்புக்களை ஸ்தாபித்து நாடளாவிய ரீதியில் பெருமளவான மக்களின் பங்களிப்புடன் 99 நாட்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுடன் நேற்று அதன் 97 ஆவது நாளில் அதன் இலக்கை எட்டியிருக்கின்றது.
போராட்டங்களின் வாயிலாக தம்வசப்படுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய மூன்று முக்கிய கட்டமைப்புக்களையும் மீளக்கையளிக்கும் அதேவேளை, ரணில் விக்ரமசிங்க பதவி விலகும்வரை ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளில் தமது போராட்டம் தொடரும் என்று நேற்று காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பிவைத்ததைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் மக்களின் உற்சாக வெற்றிக்கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின.
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்துப் பகிர்ந்துண்டு கொண்டாடிய மக்கள், தமது போராட்டம் வெற்றியடைந்துவிட்டதாகக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுஇவ்வாறிருக்க, இன்றையதினம் காலையில் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம'வில் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைக் கொண்டாடும் வகையில் பாற்சோறு தயார்செய்யப்பட்டு, அங்கு வருகைதந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
குறிப்பாக ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்கள் பாற்சோறு வழங்கினர். இருப்பினும் சிறுமியின் கைகளால் வழங்கப்பட்ட பாற்சோற்றை வாங்குவதற்கு விசேட அதிரடிப்படையினர் மறுத்துவிட்டபோதிலும், அனைவராலும் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் என்றுகூறி பொலிஸாரும் பாற்சோறைப் பெறுவதற்கு மறுத்தனர்.
எனினும் சில பொலிஸ் அதிகாரிகள் மக்கள் வழங்கிய பாற்சோற்றை வாங்கிக்கொண்டதுடன் 'அரகலயட்ட ஜயவேவா' (போராட்டத்திற்கு வெற்றி) என்றும் புன்னகையுடன் கோஷம் எழுப்பினர்.
அதேவேளை கோட்டாபய ராஜபக்ஷவைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி தன்னெழுச்சிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வயிற்றில் குழந்தையுடன் ஊன்றுகோலின் துணையுடன் தினமும் போராட்டக்களத்திற்கு வருகைதந்த தாயொருவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அவர் போராட்டங்களில் பங்கேற்றுக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன. அந்தவகையில் போராட்டத்தின் வெற்றி கொண்டாடப்பட்ட இன்றைய தினத்திலும் அந்த தாயார் பிறந்து வெறுமனே 5 வாரங்களேயான தனது குழந்தையுடன் போராட்டக்களத்திற்கு வருகைதந்திருந்தார்.
'போராட்டக்களத்திற்கு வருகைதரவேண்டும் என்பது எனது தனிப்பட்ட தீர்மானமேயாகும். வயிற்றில் குழந்தையுடன் இவ்வாறு போராட்டங்களில் பங்கேற்கவேண்டாம் என்று பலரும் விமர்சித்தார்கள். ஆனால் பெற்றோர்கள் என்ற ரீதியில் நாம் சில தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியிருக்கின்றது. அவ்வாறு மேற்கொள்ளும் தீர்மானங்கள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக அவை எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் மாத்திரம் ஏற்புடையவையாக இருந்தால் போதுமானது. இந்த நாட்டில் வாழும் ஓர் குடும்பம் என்ற வகையில் நாட்டின் நலனுக்காக ஏதேனுமொன்றைச் செய்யவேண்டிய கடமை எமக்கு இருப்பதனாலேயே நான் போராட்டத்தில் பங்கேற்பதற்குத் தீர்மானித்தேன். எம்மால் பெரிதாக எதனையும் செய்யமுடியாது. மாறாக வீதிகளில் இறங்கி, போராட்டங்களில் பங்கேற்று, எமது எதிர்ப்பை வெளிப்படுத்தமுடியும். கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தபோது சுமார் 100 நாட்களைக் கடந்து பயணிப்போம் என்று நாங்கள் கருதவில்லை. ஆனால் இப்போது அடைந்திருக்கும் வெற்றி எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்காக நாம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்' என்று 5 வாரங்களேயான குழந்தையைக் கைகளில் ஏந்தியவாறு அந்தத் தாயார் கேசரியிடம் தெரிவித்தார்.
அதேவேளை மாற்றுத்திறனாளிகள், விசேட தேவையுடையோர் எனப்பலரும் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலைக் கொண்டாடுவதற்காக நேற்று காலிமுகத்திடலுக்கு வருகைதந்திருந்தனர்.
எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இனமக்களும் இணைந்து சிறந்ததொரு இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான முதற்கட்ட நகர்வாக கோட்டாபய ராஜபக்ஷவைத் துரத்தியடித்திருப்பதாகவும், எனினும் ரணில் விக்ரமசிங்க பதவி விலகும் வரையில் தமது போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடலில் பாற்சோறு வழங்கிய போராட்டக்காரர்கள் கேசரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM