மக்களின் மனங்களை கவருவதற்காக அரசியல்வாதிகள் பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். 

குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் மொழியில் பேசுவது என்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தட்டுத்தடுமாறி தமிழ் மொழியில் பேசியமை அனைவராலும் கவரப்பட்டது.

பெருபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமிழ் மொழியில் பேசுவது என்பது அரிதான ஒன்றாக இருந்த போதும் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு சிலர் சிறுபான்மை மக்களிடையிலான உறவை வளர்ப்பதற்கு ஆயுதமாக மொழியை  பயன்படுத்தினர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தன் பின்னர், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமிழ் மொழியில் பேசுவதை கண்டுகொள்ள முடியவில்லை.

எனினும் அண்மையில் நியமிக்கப்பட்ட வடக்கின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கில் இடம்பெறும் பொது நிகழ்வுகளில் தட்டுத் தடுமாறி தமிழ் மொழியில் பேசி வருவதை காணமுடிகிறது.

எனினும் மஹிந்தவுக்கு கிடைத்த வரவேற்பு ரெஜினோல்ட் குரேவுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ தீபாவளி வாழ்த்துச் செய்தியை தமிழ் மொழியில் தெரிவித்துள்ள காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.