(நா.தனுஜா)
ஒட்டுமொத்த நாட்டினதும் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தற்போதைய நிலைவரத்தைக் கையாளுமாறும் வன்முறைகளிலிருந்தும் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்துவதிலிருந்தும் விலகியிருக்குமாறும் அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் என்போர் தெரிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலம் உள்ளிட்ட மக்களின் கோரிக்கைகள் அடைந்துகொள்ளப்படுவதற்கு ஜனநாயக மற்றும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட செயற்திட்டத்தின் ஊடாக அதிகாரங்கள் மாற்றப்படுவது இன்றியமையாததாகும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாடளாவிய ரீதியில் கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டங்கள் படிப்படியாகத் தீவிரமடைந்துவந்த நிலையில், கடந்த வாரம் கொழும்பிலுள்ள ஜனாதிபதித மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து 13 ஆம் திகதியன்று தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் நாட்டைவிட்டு வெளியேறினார்.
பிரதமராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி ஏற்கனவே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவந்ததுடன் சில தினங்களுக்கு முன்னர் அவரது இல்லம் தீக்கிரையாக்கப்பட்ட பின்னணியில், நேற்று முன்தினம் பதில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவருக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுப்பெற்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலும் அதிகாரிகளும், பொதுமக்களும் செயற்படவேண்டிய விதம் குறித்தும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கங்களில் செய்திருக்கும் பதிவுகளிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
தற்போதைய சூழ்நிலையில் மிகவும் பொறுமையுடனும் அமைதியாகவும் செயற்படுமாறு ஏற்கனவே நாம் கேட்டுக்கொண்டதை மீளவலியுறுத்துகின்றோம். அதேவேளை ஒட்டுமொத்த நாட்டினதும் சிறந்த எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இந்த நிலைவரத்தை அணுகுமாறு அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதுடன் நீண்டகால அடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு வழிவகுக்கக்கூடிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதை முன்னிறுத்தி விரைந்து செயற்படுமாறும் வலியுறுத்துகின்றோம்.
மேலும் அனைத்து வகையிலுமான வன்முறைச்செயற்பாடுகளை நாம் கடுமையாகக் கண்டனம் செய்வதுடன் சட்டத்தின் ஆட்சி உறுதியான முறையில் நிலைநாட்டப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றோம்.
குறிப்பாக மக்களின் கோரிக்கைகளாக இருக்கக்கூடிய பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலம் என்பன அடைந்துகொள்ளப்படுவதற்கு ஜனநாயக மற்றும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட செயற்திட்டத்திற்கு அமைவாக அமைதியான முறையில் அதிகாரங்கள் மாற்றப்படுவது இன்றியமையாததாகும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டின் நிலைவரம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை உரியவாறு கையாள்வதற்கு சரியான நேரத்தில், அமைதியான முறையில், ஜனநாயகக்கோட்பாடுகளுக்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பிரிட்டன் தயாராக இருக்கின்றது. இது இலங்கை மக்கள் தற்போது முகங்கொடுத்திருக்கும் மிகநெருக்கடியான சூழ்நிலைக்குத் தீர்வுகாண்பதற்கு இன்றியமையாததாகும்.
மேலும் இதனை அடைந்துகொள்வதற்கு சட்டத்தின் ஆட்சி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்குமாறு அனைத்துத்தரப்பினரையும் கேட்டுக்கொள்வதுடன் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM